Tuesday, April 28, 2009

நட்பு..!



உலக

வரைபடத்தில்

மலேசியா..

ஒரு,

சிறு புள்ளி

என்றிருந்தேன்..

இன்று..

உன் பிரிவில்தான்

அதன்

பரப்பளவு

புரிகிறது

எனக்கு..?!

  • K.கிருஷ்ணமூர்த்தி

(பல்கலைக்கழக நாட்களில் பழகிய நண்பர்களை மீண்டும் நினைவு கூர்கிறேன்.. ஓரிருவரைத் தவிர.. அநேகரைப் பற்றிய தகவலே இல்லை..!)

Friday, April 24, 2009

காட்டில்..!







இறந்த மூங்கிலும்
இரவல் மூச்சால்
மோகனம் இசைக்கிறது..

எல்லாம் இருந்தும்
மனிதன் ஏனோ
இரவல் கேட்கின்றான்..!







உதிர்ந்தாலும்
மயிலின்
மயிர் கூட
அழகு..

மனிதன் உதிர்ந்தால்..!







தேவைக்குமேல்
தேடுவதில்லை
மிருகம்..

தேவைகள்
தீர்ந்த பாடில்லை..
மனிதம்..!






காடுகளில்
மதச் சண்டை
இல்லை..

அது
இல்லாத நாடுகளே
இங்கு இல்லை..!


  • கிருஷ்ணமூர்த்தி

Wednesday, April 22, 2009

யுத்த பிக்குகள்!

ஏ புத்தனே..

உன்
சமாதானக் கொள்கைக்கு
இலங்கையில்
கொள்ளி வைத்துக்
கொண்டிருக்கிறார்களே..!

ஈழமே இன்று
இடுகாடாய்..
எங்கள் இனத்தவர்
அங்கே..
பலிகாடாய்..!

எங்கே உன்
சமாதானம்..?
எங்கே போனது
உன்
சாத்துவீகம்..?

*
பாலஸ்தீனத்தில்
ஐந்து பேர்
இறந்தால்
வையகமே அழுகிறது..

ஈராக்கில்
ஒரே ஒரு
குண்டு விழுந்தால்
அகிலமே அதிர்கிறது..!

இலங்கையில் மட்டும்
தவிப்பது
தமிழன் என்பதால்..
இறப்பது
என் இனம் என்பதால்..
தமிழக அரசு கூட,
மௌனமாய்..
மழுப்புகிறது..!

*
புத்தம் பேசும்
புண்ணிய பூமி
யுத்தக் காடாய்
எறிகிறது..

புத்த பிக்குகள்
யுத்த பிக்குகளாய்
எள்ளி நகைப்பது
சுடுகிறது..!

ஆயிரம் காரணம்
கூறிய போதிலும்
புத்தத்தில் கொலைக்கு
இடமுண்டோ..?

எங்கும்
அப்பாவி மக்களின்
அழுகுரல் ஓலங்கள்..
புத்தத்தில் எங்கேதான்
அன்புண்டோ..!

*

ஏ புத்தனே..

இன்னும்
எத்தனை நாட்கள்
எங்களை
ஏமாற்றப் போகிறாய்..?

உன்,
புத்தம் சரணம் கச்சாமி..!
இன்று
யுத்தம் மரணம் கச்சாமி
ஆனது..

உன்,

தர்மம் சரணம் கச்சாமி..!
இன்று..
இரத்தம் இரணகளம் கச்சாமி
ஆனது..!!

இன்னும்
எத்தனை உயிர்கள்
இறந்திட வேண்டும் ..?

இன்னும்
எத்தனைக் காலம்
அழுகுரல் வேண்டும்..?

இந்த
யுத்த பிக்குகள்
கொலைவெறி தீர..
சொல்வாயா சித்தார்த்தா..?!!!

  • K.கிருஷ்ணமூர்த்தி

Friday, April 17, 2009

வரமா சாபமா..?

குழந்தைச் செல்வம்..

சிலர்
குழந்தைக்காகவே
கூடுகின்றனர்..

சிலர்,
கூடிவிட்டு
குழந்தை என்றால்
ஓடுகின்றனர்..!

பணக்காரர்கள்
வாரிசு வேண்டி..
ஒன்றிரண்டோடு
ஒடுங்கிவிடுகின்றனர்..

சில தினக்கூலிகள்..
வாரிசுகளை
ஆண்டுக்கொன்றாய்
விதைக்கின்றனர்..!

*
இயலாதவர்கள்..
பிள்ளைகள் தலையில்
பழுவை ஏற்றுகின்றனர்..

இயன்றவர்கள்..
பிள்ளைகளையே
பழுவாக்கி விடுகின்றனர்..!

*
முதல்
எட்டு வருடம்
என்ன செய்தாலும்
கொஞ்சல்..!

அடுத்த
எட்டு வருடம்
படிக்கச் சொல்லி
கெஞ்சலோ கெஞ்சல்..!!

பதினாறுக்கு மேல்..
பிள்ளைகளைப் பார்த்து
பெற்றோர் அஞ்சல்..!!!

திருமணம்
முடிந்துவிட்டால்..
பெற்றவர்கள்
அங்கும் இங்கும்
ஆடும் ஊஞ்சல்....!

*
முகச்சாயம்
நகச்சாயம்
எல்லாம் மறந்து..
பிள்ளையின்
முகச்சாயலில்
குளிர் காயும்
தாயுள்ளம்..

விடுமுறை
ஓய்வு
எல்லாம் மறந்து
பிள்ளையின்
எதிர்காலத்தை
ஆசையோடு
அசை போடும்
தந்தையுள்ளம்..

ஆனால்..

எதையுமே
எண்ணாமல்
எதார்த்தமாய் வளரும்
பிள்ளை உள்ளம்...!

ஈ கொசு
அண்டாமல்
இரவு பகல்
பாராமல்
தாலாட்டி வளர்க்கும்
தாயுள்ளம்...

கடனோ உடனோ
வாங்கினாலும்..
சேமநிதி
சேர்த்த நிதி
தீர்ந்து போனாலும்..
பாடுபட்டு
படிக்க வைக்கும்
தந்தையுள்ளம்..

ஆனால்..

படிப்பென்றாலே
கடுப்பாகி
பெற்றோரை வையும்
எத்தனையோ
பிள்ளை உள்ளம்...!!

*
பிள்ளைகள்
பரீட்சைக்குப் போனால்
பெற்ற மனதில்
படபடப்பு..!

பிள்ளைகள்..
சிகிச்சைக்கு போனால்
பெற்ற மனதில்
துடிதுடிப்பு...!!

பிள்ளைகள்
வெற்றி பெற்றால்
பெற்ற மனதில்
குதூகலிப்பு..!

அதே பிள்ளை
தோல்வியுற்றால்..
பெற்ற மனதில்
பரிதவிப்பு...!!!

பிறக்கும் போதே
பிள்ளைகள் மேல்
அளவிலாத எதிர்பார்ப்பு..!

எதிர்பார்ப்புகள்
இடிந்து போனால்..
ஏமாற்றத்தில்
மௌனத் தவிப்பு...!

*
குழந்தையின் அழுகுரல்

அபயக் குரலா..?
அபாயக் குரலா..??

அது
மோகனமா..
இல்லை
முகாரியா..??

குழந்தைச் செல்வம்..

அது
நிறையா குறையா..?

இல்லை
சுகமா சுமையா..??

குழந்தைச் செலவம்..

அது
வரமா சாபமா..?!!

• K.கிருஷ்ணமூர்த்தி

Thursday, April 16, 2009

எல்லாம் உனக்குள்ளே..


ஓடுது ஓடுது ஓடுது-உலகம்

தேடுது தேடுது தேடுது 2 X

உள்ளுக்குள்ளே உண்மை இருந்தும்

வெளியில வெளியில தேடுது..

அதை வெளியில வெளியில தேடுது.. -(ஓடுது



குழப்பத்துக்குள்ளே தெளிவு இருக்கு

பொறுத்துப் பார்த்தா தெளியுது.. அட

கேள்விக்குள்ளே பதிலும் இருக்கு

போட்டுப் பார்த்தா புரியுது-கணக்கு

போட்டுப் பார்த்தா புரியுது.. -(ஓடுது



இருட்டுக்குள்ளே வெளிச்சம் இருக்கு

கனவிலும் காட்சி தெரியுது - அட

கனவிலும் காட்சி தெரியுது -உன்

திறமைக்குள்ளே வாழ்க்கை இருக்கு

புரிந்தால் வெற்றி கிடைக்குது.. அதை

புரிந்தால் வெற்றி கிடைக்குது.. -(ஓடுது


  • K.கிருஷ்ணமூர்த்தி





Sunday, April 12, 2009

தமிழழகி..!


நிலவு தோற்றதடி பெண்ணே..
கறையிலாமல் கவர்ந்திழுக்கும் -உன்
கறுப்பு கன்னங்களுக்கு முன்னே
நிலவு தோற்றதடி பெண்ணே..!

மலரும் தோற்றதடி பெண்ணே..
இளமையை சோதிக்கும் -உன்
ஈர இதழ்களுக்கு முன்னே..
மலரும் தோற்றதடி பெண்ணே..

மின்னல் தோற்றதடி பெண்ணே..
மின்சாரம் இல்லாமலே தாக்கும் -உன்
மகரந்தப் பார்வைக்கு முன்னே..
மின்னல் தோற்றதடி பெண்ணே..!

வீணை தோற்றதடி பெண்ணே..
மீட்டாமலே மயக்கும் -உன்
ஏகாந்த குரலுக்கு முன்னே..
வீணை தோற்றதடி பெண்ணே..!!

மல்லிகை தோற்றதடி பெண்ணே..
மெய்சிலிர்க்க புன்னகைக்கும் -உன்
முத்தான பற்களுக்கு முன்னே..
மல்லிகை தோற்றதடி பெண்ணே..!!!

தூரிகை தோற்றதடி பெண்ணே..
தொடாமலே தீண்டிச் செல்லும் -உன்
தூண்டில் கண்களுக்கு முன்னே..
தூரிகை தோற்றதடி பெண்ணே..

சித்திரம் தோற்றதடி பெண்ணே..
சிந்தையினை சொக்கவைக்கும் -உன்
சிங்கார வளைவுகளின் முன்னே
சித்திரம் தோற்றதடி பெண்ணே..!!!

தங்கம் தோற்றதடி பெண்ணே..
உரசாமலே உருகவைக்கும் -உன்
அந்தரங்க அங்கத்தின் முன்னே..
தங்கம் தோற்றதடி பெண்ணே..

வெண்மை தோற்றதடி பெண்ணே..
கோயில் சிலைபோல் கிறங்கவைக்கும் -உன்
கோகில மேனிக்கு முன்னே..
வெண்மை தோற்றதடி பெண்ணே..!!!

K.கிருஷ்ணமூர்த்தி

Friday, April 10, 2009

பெற்றோரைப் பேண்

பாரில் உன்னை உயிருடன் உதிர்த்து

  • பண்பெனும் பாலூட்டினார் அன்னை..

ஊரில் உன்னை அனைவரும் மதிக்க

  • அறிவெனும் சோறூட்டினார் தந்தை..

நாரில் பூவாய் என்றும்நீ மணக்க

  • நாதாக்கள் ஆற்றிய நற்பணியை

நேரில் காணும் நெஞ்சம் துடிக்க

  • நம்கண் உதிர்க்கும் நீர்த்துளியை..!


பெரியவன் ஆனதும் பெற்றோர்க்கு

  • பனிசெய்து கிடந்திடு என்றும்நீ

பொதிஇவன் என்றுஉன் தந்தையை

  • பழித்து விடாதே ஒருபோதும்

கொதித்து எழுவாள் உனதன்னை- உருக்

  • குலைந்து விடுவாய் உடனேநீ..!

சிரித்து அவர்களை உபசரித்தால்

  • செழித்திடும் உனது எதிர்காலம்..


கண்ணீர்க் கடலை கடந்தவர்கள்

  • கவலையறி யாதுனை வளர்த்தவர்கள்..

தண்ணிர் அற்ற நடுக் காட்டினிலே

  • தவிக்க விடாதே அவர்களைநீ..

முன்னூறு நாளுனை சுமந்ததற்கு

  • மூச்சடக்கி உன்னை ஈன்றதற்கு

முன்னேறும் வேளையில் பெற்றோரை

  • மூழ்க விடாதே ஆழ்கடலில்..!!!

-K.கிருஷ்ணமூர்த்தி

Wednesday, April 8, 2009

நீ வாழ்க..!



எனது
நாள்காட்டியில்
இன்று,
சுப முகூர்த்தம்..!

இன்று,
ஒரு தென்றலின்
பிறந்த தின விழா..

இரக்கமற்றவர்கள்
வாழ்த்தாவிட்டாலும்
இயற்கை
நிச்சயம் வாழ்த்தும்!

இன்று,
உனக்காகவே..
கோழி கூவாமலே
விடியல் விடிந்ததே..
பார்த்தாயா..?

எதிர்பார்ப்புக்களின்
ஏமாற்றத்தால்
வற்றிவிட்ட விழிகளின்
உயிரில்லாத
உறக்கத்தை
கலைக்க மனமில்லாமல்..

பூபாளம்
மௌனமாக
பாடியதே
கேட்டாயா..?!

ஓ..
தென்றலின்
தாலாட்டில்
தூங்கி விட்டிருப்பாய்..!

காலைக் கதிரவன்
கடுமையாய்
இல்லையே
கவனித்தாயா..?

இன்று மலரும் பூக்கள்
உன்
உதட்டோரப் புன்னகை
காணாமல்..
வாடிவிடக்கூடாதாம்..!

ம்ம்..
என்ன வாட்டம்
என்
கண்ணுக்கு..?

ஒழுக விடாதே!

மறந்து விட்டாயா..?
இன்று
உனக்கு விடுமுறை..

உன்
நியாயமான கோரிக்கை
நிராகரிக்கப்பட்டாலும்..

உன்
எதிர்காலத்தின்
ஏடுகளை
இறக்கமற்றவர்கள்
எரித்துவிட்டாலும்..

உன்
புன்னகைப் பூக்களை
மலரும் முன்பே
மூடர்கள்
மறைத்துவிட்டாலும்..

உன்
கவிதைக் கனவினை
உணர்வற்றவர்கள்
உளி கொண்டு
செதுக்கி விட்டாலும்..

உன்
இலகுவான
இதயத்தில்
இரசாயனக் கலவையை
வார்த்தைகளாய்
வஞ்சகர்கள்
வார்த்துவிட்டாலும்..

உன்
ஓவியக் கண்களை
ஒழுக விடாதே!

உன்
வேல் போன்ற விழிகளை
வேர்க்க விடாதே..!!

இன்று
உனக்கு விடுமுறை..
மறந்து விட்டாயா..?

கவலை வேண்டாம்..

இன்று
உனக்காய்
உன்
விழிகளின்
வேலையை
மாலையில்
வானம் செய்யும்..!!!

K.கிருஷ்ணமூர்த்தி

(வேதனையின் விளிம்பில், ஒழுகும் கண்களோடு வாழ்க்கை நடத்தும் ஒரு துரதிருஷ்ட தோழியின் பிறந்த தின வாழ்த்துப் பா..)

Saturday, April 4, 2009

நான் செய்த பாவம் என்னையா..?

அநுபல்லவி

ஆயிரம் கோடி பிறப்புகள் எடுத்தேன்..
உன் காலடி சேர முடியவில்லை... உன்
ஆலயம் தோறும் காவடி எடுப்பேன்..
எனக்கினி வேறு வழியுமில்லை..
முருகா..

பல்லவி

நான் செய்த பாவம் என்னையா..?
இந்த மானிட பிறப்பை எடுத்துவிட்டேன்.. –2X
யார் செய்த சாபம் சொல்லையா - இன்னும்
வாழ்க்கையின் பிடியினில் தவிக்கின்றேன்..

(நான் செய்த..

சரணம்

ஒவ்வொரு சஷ்டியும் விரதம் இருந்தேன்..
மனதினில் அமைதியில்லை..
ஒவ்வொரு விடியலும் உனை தொழுதேன்..
உன் அருள் கிடைக்கவில்லை.. X 2

(நான் செய்த..

ஔவையின் தமிழை கேட்டு ரசிக்க..
நேரினில் காட்சி தந்தாய்..
சுட்ட பழம் வேண்டுமா.. சுடாப்பழம் வேண்டுமா
சிறுவனாய் பரீட்சை செய்தாய்..
உன் நாமம் தவிர வேறொன்றும் அறியேன்..
தினம் உனை பாடுகின்றேன்- உன்
திருப்புகழை.. நான் பாடி நீ கேட்க..
ஏன் இன்னும் வரவில்லை..

(நான் செய்த..


இசைவட்டு : புளிசாதம்
பாடலாக்கம் : K.கிருஷ்ணமூர்த்தி
இசை : நாதன்

பாடலை ஒலி வடிவில் கேட்க கீழே சொடுக்குங்கள்..

Ayiram kodi.mp3 -

Thursday, April 2, 2009

நாயகனே.. விநாயகனே..

பல்லவி

நாயகனே.. விநாயகனே.. -2x
நலங்கள் சேர்க்கும் நாயகனே.. -2x
தூயவனே.. எனை ஆள்பவனே
துதிக்கை உடைய தூயவனே.. (நாயகனே

சரணம்

ஒரு புறம் புத்தியை ஏந்தி..
மறு புறம் சித்தியை ஏந்தி
பிரணவமாக இருப்பவனே.. ஆ.. –2x
துதிக்கையில் பிரணவத்தை காப்பவனே.. (நாயகனே

பார்வதியால் சாபம் பெற்ற
நந்திதேவன் குறையும் நீங்க.. -2x
அருகினை அவனிடம் ஏற்றவனே
ஜெயம்தரும் அருகம்புல் நாயகனே

வியாசருடன் சபதம் செய்து..
பாரதம் எழுதச் சென்று..
தந்தத்தை தந்த தயாளனே
அபயம் அருளும் ஆண்டவனே.. (நாயகனே

இடுப்பினில் அரவம் கொண்டு..
குண்டலினி சக்தியை தந்து..
அங்குசத்தால் குறைகள் தீர்ப்பவனே..
முதலே.. மூஷிக வாகனனே .. (நாயகனே


இசைத்தட்டு : புளிசாதம்
பாடலாக்கம் : K.கிருஷ்ணமூர்த்தி.
இசை : நாதன்

பாடல் ஒலி வடிவில்..

Nayaganey.mp3 -

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs