Tuesday, May 12, 2009

சின்ன சின்ன ஆசை..!


சின்ன சின்ன ஆசைகள்..
செதுக்கி வைத்த ஆசைகள்..
சின்னப் பெண் இவளுக்காய்
சேகரித்த ஆசைகள்..

எண்ண அலைகளிலே
ஏற்றிவைத்த ஆசைகள்..
நெஞ்சின் சிறைகளிலே
உறைந்திருந்த ஆசைகள்..

*

திங்களின் ஒளியினிலே
தனித்திருக்க ஆசை..
தென்றலின் தாலாட்டைத்
தமிழ் படுத்த ஆசை..

மேகங்கள் மழையாகும்
விதம் பார்க்க ஆசை..
சோகங்கள் அதைப்போல
கரைந்தோட ஆசை..

முள்ளில்லா ரோஜாக்கள்
நட்டுவிட ஆசை..
மல்லிகையை முள்ளாக்கி
தொட்டுவிட ஆசை..!

வண்னத்துப் பூச்சிகளின்
மொழி கேட்க ஆசை..
எண்ணத்தில் அதை நிறுத்தி
எழுதி வைக்க ஆசை.. !

குருவிகளின் பாஷைதனை
கற்றுக் கொள்ள ஆசை..
சுறுசுறுப்பை எறும்பிடத்தே
பற்றிக் கொள்ள ஆசை..

அருவிகளின் சலசலப்பில்
அயர்ந்திருக்க ஆசை..
இரவுகளின் கதகதப்பில்
விழித்திருக்க ஆசை..!

நிலவுதனில் கண்ணுறங்கும்
நித்திரையில் ஆசை..
கனவுகளில் கவியெழுதும்
காதலிலும் ஆசை... !

பனிமலரும் வேளைகளில்
பாட்டெழுத ஆசை..
பருவமகள் ஆசைகளை
கேட்டெழுத ஆசை..!



  • K.கிருஷ்ணமூர்த்தி

Wednesday, May 6, 2009

அம்மா..













மண்மீது வந்த தெய்வமே..
கண்போல காத்த சொந்தமே..
அன்பாலே ஆன பந்தமே..
எங்கள் அன்புத் தாயே..

உன்போல உறவு வேறில்லை..
நீ தந்த பாசம் பொய்யில்லை..
உனை மிஞ்சும் ஜீவன் ஒன்றில்லை..
என்றும் தெய்வம் நீயே..

முன்னூரு நாட்கள் உன்னில்..
உருவான உயிரின் பந்தம்..
ஏழேழு ஜென்மம் ஆனாலும்..
பொய்க்காது உந்தன் சொந்தம்..


பாலோடு பாசத்தை பருகத் தந்தாய்..
தாலாட்டில் தமிழைப் பழகித் தந்தாய்..
முத்தத்தில் உயிரினை உருக வைத்தாய்..
மொத்தத்தில் மனிதத்தை மலர வைத்தாய்..!


அம்மா..
உன் அணைப்பின் கதகதப்பில்
சொர்கத்தை உணர வைத்தாய்!!!

  • K.கிருஷ்ணமூர்த்தி


Monday, May 4, 2009

சரவண பவ..



பல்லவி
சரவண பவ என்னும் திருமந்திரம்..
அதை நாளும் சொல்ல எங்கள் துயர் தீர்ந்திடும்..
அறுபடை மலை வாழும் அருட்குமரா..
உன்னை எண்ண எண்ண நெஞ்சில் இருள் நீங்கிடும்.. X 2

(சரவண பவ..)

சரணம்
கர்வம் என்ற பாம்பினை..
அடக்கியாளும் மயில் துணை..
பாதையில் தொல்லை நீங்கவே..
வெற்றி தரும் வேல் துணை..

சூரனை வதமும் செய்திட..
சிவனின் நெற்றிக் கண்ணிலே
உதித்து வந்த கார்த்திகேயா..
ஈசனின் இளைய மைந்தனே..

இச்சை வடிவான வள்ளி..
ஒருபுறம் கை சேர..
கிரியை எனும் தெய்வானை..
மறுபுறம் தோள் சேர..

இருப்பதெல்லாம் உன் பொருளே..
நடப்பதெல்லாம் உன் செயலே..
கேட்பதெல்லாம் உன் புகழே..
காண்பது எல்லாம்.. உன் அழகே..
முருகா.. முருகா.. முருகா.. முருகா.. –-2x (சரவண பவ..

(இருப்பதெல்லாம்..

பாடலாக்கம் : K.கிருஷ்ணமூர்த்தி
இசைவட்டு : புளிசாதம்




பாடலை ஒலி வடிவில் கேட்க கீழே சொடுக்குங்கள்..


Saravanabava.mp3 -

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs