Friday, July 24, 2009

அத்வைத தாம்பத்யம் (4)

பக்தி யோகம்
பகுதி 4

அது ஒரு குளிர்காலம்..

வெள்ளைத் தாமரை
விண்ணில் மலர்ந்தது போல்..
வெள்ளி நிலவு..

அந்த
வெண்ணிலவின் பிம்பம்
பட்டுத் தெரிப்பதுபோல்..
மண்ணுலகில்
மானுட நிலவுகள்..
மங்கையர் வடிவினில்..

ஒரு
அலுவல் காரணமாய்
கேத்தரினுக்காய் காத்திருந்தோம்
நானும் நண்பன் ரமேஷும்..
ஏழாம் விடுதியில்..

அன்று வரை
கேத்தரின் மட்டும்தான்
எனது பெண்தோழி..

சொன்ன நேரத்தில்
கேத்தரினும் வந்தாள்..
அலுவல்
ஐந்து நிமிடங்களில்
முடிந்தாலும்
அரை மணி நேர அரட்டை..

அப்பொழுதுதான்..
அந்த அதிசயம் நிகழ்ந்தது!

வானத்தில்
ஆயிரம் நட்சத்திரங்கள்
மின்னினாலும்
நிலவு மட்டும் ஒன்றுதான்..

அந்த ஒரு நிலா
தன்னந்தனிமையில்
பூமியில்
உலா வந்தால்..??

நிலவுக்கு
முகம் மட்டுமே உண்டு..
இந்த நிலவுக்கு
முகமும் உண்டு..!

என் அதிர்ஷ்டம்..
அந்த நிலா
கேத்தரினுக்கு
பரிட்சயமான நிலா..!

“யாரது..?”

இன்னமும் நான் கேட்கவில்லை..

“அதுதான் சீதா..”
கேத்தரினின் மழலை..

இராமாயணத்தில்
கவிச்சக்ரவர்த்தி கம்பனின்
கற்பனையை
அன்று
நான் கண்ணெதிரே கண்டேன்..!

கேள்வி நாயகி கேத்தரினால்
எங்களின்
அறிமுகப் படலம்
ஆரம்பமானது..

அருகில் வந்த நிலா
பேசியது!

“ஹாய்..
ஐ எம் சீதாலட்சுமி..”

நண்பனை சாதரணமாக
பார்த்த அந்த நிலவு..
என்னைப் பார்த்ததும்
முகம் சுளித்தது..!

காரணம்..
வேறென்ன..? நான்தான்..
நிலாக்களை நகைப்பதுதானே
என்
பொழுது போக்கு..!

என் அருமை பெருமை எல்லாம்
அறிந்த நிலவு அது போலும்..!

“இவங்ககிட்ட பேசினிங்க..
உங்க வண்டவாளம் எல்லாம்
தண்டவாளத்தில் ஏறிடும்..!”

கேத்தரின் சீதாபுராணம் பாடினாள்..

சீதா ஜாதகம் பார்ப்பாளோ..?
ரமேஷ்
கையை நீட்டினான்..

“எனக்கு எப்படி இருக்கு பாருங்க..”

நிலா முகத்தில் ஒரு சலனம்..!

“கையெல்லாம் பார்க்க தெரியாது..
இராத்திரி ஆயிடுச்சி..”
இழுத்தாள்..

கரடி நான்தான்
என்று
எனக்கே தோன்றியது..!

ஏமாற்றம்
எங்கள் இருவருக்கும்..

தடுமாற்றம்
நிலவுக்கு..

கண்ணெதிரே
நிலவு வந்தும்..
அன்று
எனக்கு மட்டும் அமாவாசை..!!

===> அறிமுகப் படலம் தொடரும்..

Sunday, July 19, 2009

டாக்டர் செவாலியே சிவாஜி கணேசன்


(டாக்டர் செவாலியே சிவாஜி கணேசன் மண்ணுலகை விட்டு மறைந்த அன்று, அவருக்காக நான் எழுதிய கவிதை பின் ரகுவின் 'மோகனம்' என்ற குருந்தட்டில் பாடலானது. அந்த பாடல் வரிகளை கவித்தமிழ் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..)

இமயம்

இமயம் ஒன்று வீழ்ந்து போனதே..
இயற்கை அன்று ஓய்ந்து போனதே..
விழிகளில் ஈரம்.. இதயத்தில் சோகம்..

சிகரம் ஒன்று சாய்ந்து போனதே..
சிங்கம் ஒன்று சோர்ந்து போனதே..
சிதையினில் வீரம்.. சிதைந்திடும் நேரம்..

உறங்கிடு வீர சிங்கமே.. இரு விழி மூடி..
ஓய்வெடு நீ செவாலியே.. அமைதியை நாடி..
இது நனவா.. வெறும் கனவா..
உணர்த்திட யாரும் இல்லையே..
இது குளமா.. நைல் நதியா..
விழிகளில் மீதமில்லையே..

கலைமகனே.. கதறுகிறோம்..
உயிர்களின் ஓலம் இன்னும் ஓயவில்லையே..
தலைமகனே.. தமிழ்மகனே
விடைபெறும் நேரம் நெஞ்சம் தாங்கவில்லையே..

கலைமகளே கதறுகிறாள்..
உனையன்றி சேவை செய்ய யாரும் இல்லையே
கலை உலகின்.. சுடரொளியே..
உனையன்றி பாதை சொல்ல நாதியில்லையே..

மறைந்திடுமா உனது புகழ்..
தமிழ் உள்ள காலம் மட்டும் காதில் கேட்குமே..
ஓய்ந்திடுமா.. உனது அலை
கலை உள்ள காலம் மட்டும் காற்றில் வாழுமே...




பாடலை முழுதும் கேட்க இங்கே சொடுக்குங்கள்..
Imayam - Jerry Retnam


பாடலாக்கம் : K.கிருஷ்ணமூர்த்தி
இசை : ஜெர்ரி இரத்னம்
குரல் : ரகு


(பி.கு: ஜெர்ரி இரத்னமும் நானும் இணைந்த இரண்டாவது இசைக் குறுந்தட்டுதான் ரகுவின் மோகனம். இதற்கு முன் சலனம் என்னும் இசைத்தட்டில் தான் முதன் முதலாக நான் பாடல் இயற்றினேன்.. அந்த இசைத்தட்டு, மலேசிய இசைத்துறையில் ஒரு இசைச் சலனத்தை ஏற்படுத்தியதும் மறக்க முடியாத அனுபவம்.. ஜெர்ரி இரத்னம் மலேசிய தனியார் தொலைக்காட்சி நிறுவனம் TV3 நடத்திய Muzik Muzik நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அதே தொலைக்காட்சி நிறுவனத்தில் இசையமைப்பாளராகவும், ஒலி காப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்.)

Friday, July 10, 2009

அத்வைத தாம்பத்யம் (3)

பக்தி யோகம்
பகுதி 3


கேத்தரின்..

என் காதல் அத்தியாயத்தின்
ஆணிவேர்!

பெண்களைக் கண்டு
பொழுதுபோக்கியவனை
பழுது பார்த்தவள்..

என்னைத் தன்னிடம்
பேச வைத்தவள்..
என்னோடு பேசியவள்..

எனக்கு என்னை
அடையாளம் காட்டியவள்..
ஆம்..
என்னவளை எனக்கு
அடையாளம் காட்டியவள்..!

கேத்தரின்..

வெள்ளை மனம்
பிள்ளை குணம்..
நிமிடத்திற்கு மூன்று
கேள்விகள் கேட்கும்
தொல்லை-ரணம்..!

எப்படி
தமிழையும் இனிமையையும்
பிரிக்க முடியாதோ..
அப்படித்தான்..
கேத்தரினும் கேள்வியும்..!

மும்பை எக்ஸ்பிரஸ்
படத்தில்
தூங்கிவிட்டு..
கிளைமாக்ஸில்..
"என்ன ஆச்சு..?"
"இவன் எப்படி இங்க?"
"ஐயோ.. இது யாருலா..?"
இது..
தொல்லையில்லாமல்
வேறென்ன..?

இருந்தாலும்..
வெள்ளை மனம்
பிள்ளை குணம்..
கேத்தரின்..

எனது
முதல் பைக்கை..
இரவல் வாங்கி..
பழுதாக்கி..
பாதையிலே விட்டு வந்ததும்..

சுப்பு லட்சுமி சொல் கேட்டு
என்
பெரு விரல் நகத்தை
படார் என்று உடைத்ததும்..

பரிமளாவின் காரில்
பக்கத்து பல்கலைக்கழகம் சென்றதும்..
பின்னால் மட்டுமன்றி..
புகை
நான்கு புறத்திலும் வர..
ரேடியேட்டரைப் பார்க்கச் சொன்னால்
ரேடியோவைப் பார்த்ததும்..!

இறுதியில்..
'hand brake'-ஐ
எடுக்காமல் ஓட்டியதால்
எழுந்த புகை அது என்று
என்னிடம் மட்டும் சொன்னதும்..!

அப்பப்பப்பா..!
எல்லா கலைகளும்
அறிந்தவள் கேத்தரின்..!

என் காதல் அத்தியாயத்தின்
ஆணிவேர்!

எனக்கு 'என்னை'
அடையாளம் காட்டியவள்..


===> அடையாளம் காட்டிய கதை அடுத்த பகுதியில்..

Wednesday, July 8, 2009

அத்வைத தாம்பத்யம் (2)

பக்தி யோகம்
பகுதி 2

பெண்களுடன்
பேசுவதில்லை..
பெண்களை
பேசாமலும் இருந்ததில்லை..!

புத்தனுக்கு
ஒரு
போதிமரம்..

எனக்கு
புத்தகசாலையின்
வாசலில் இருந்த
படிக்கட்டுகள்..!

எனக்கு
பின்னாளில்
கவிதை வந்ததும் அங்குதான்
காதல் வந்ததும் அங்குதான்..!!

படிக்கட்டுகளில் அமர்ந்து
பெண்களின்
உடற்கட்டுகளை
அளவெடுத்ததும் அங்கேதான்..

நட்புப் படிகளில்
ஏறி..
வாழ்க்கையின்
பாடத்தைக் கற்றதும்
அங்கேதான்..!!!

நண்பர்கள்
எனக்கு இட்ட பெயர்
'குருஜீ'

எத்தனையோ கேலிகள்..
எத்தனையோ கிண்டல்கள்..

இருந்தாலும்
பெண்களிடம் மட்டும்
பேசுவதில்லை..!

உடன் படித்த
சுப்பு லட்சுமி..
ஆங்கிலத்தில் ஏதோ கேட்க
மருபடியும்
மௌன சாமியாராய்
நான்..!

பேசாததால்
பெண்களிடம் கிடைத்த
பட்டம்..
'கெட்டவன்'..!

ஏண்டா..
பேசித் தொலையேன்..!

நண்பர்கள் திட்டல்..!

"அட போடா..
பெண்கள் நிலா மாதிரி..
தூரத்தில் மட்டும்தான் அழகு!
அருகே சென்றால்
அத்தனையும் அவஸ்தை!"

இது
அவர்களுக்கு நான் சொன்ன
பதிலா..
இல்லை..
எனக்கு நானே சொல்லிக்கொண்ட
பதில்..!
பொய்யான பதில்..!!!

===> மௌனம் தொடரும்..

Monday, July 6, 2009

அத்வைத தாம்பத்யம் (1)

(இது முற்றிலும் உண்மைச் சம்பவங்களைக் கொண்ட வரலாற்றுப் பூர்வமான எனது காதல் கதை. இது யாரையும் புண்படுத்தவோ, கேலி செய்யவோ எழுதப்பட்டது அல்ல.)

பக்தி யோகம்..
பகுதி 1


அவள்
அவன்
அவள்..!

அவன்
அவள்
அவன்..!

அத்வைத தாம்பத்யம்!

அவள் நானாகி
நான் அவளாகி
ஓருயிராய்
ஒருமித்து இருக்கிறோம்..

இறையோடு கலந்து
இறையாகினால்
அத்வைதம்..

என்னோடு கலந்து
நானாகிளாள்..
அத்வைத தாம்பத்யம்!

*

அது ஒரு கனாக்காலம்..
இளமை இரத்தத்தைப்
பரிசோதித்துப் பார்த்த
விழாக்காலம்..!

மலேசிய புத்ரா பல்கலைக்கழகம்
1995
மூன்றாம் ஆண்டில்
நான்..
முதல் ஆண்டில்
அவள்..

பெண்களிடம் பேசாதவன்
நான்..
ஆங்கிலத்தில் அவ்வளவாக
பரீட்சயம் இல்லாததால்..
பெண்களிடம் பேசாதவன்
நான்..!

அதென்ன,
பல்கலைக்கழக பெண்கள்
தாய்மொழிக்கு
தடை விதித்து விட்டனரா?!

வரட்டுக் கோபம்...

என்ன கஷ்டம்..?
பேசப் பேசப் பழகிவிடும்..
எனது அருமை சீனியர்..
திரு!

அது சரி..
தவறாக பேசிவிட்டால்?!

ஆண்களாவது பரவாயில்லை,
பெண்களிடம் இரகசியம் தங்காதே!

எதற்கு வம்பு!
பெண்களிடம்
பேசுவதில்லை..
விட்டது தொல்லை...!

===> தொடரும்..

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs