Friday, November 27, 2009

அத்வைத தாம்பத்யம் (5)

பக்தி யோகம்
பகுதி 5

‘நிலவின்’ நினைவுகளோடும்
நிஜங்களின் கனவுகளோடும்
நகர்ந்த
அந்த இரவுகளில்
நித்திரை நிர்மூலமாகிவிட்டது
நிரந்தரமாக..!

“யாரவள்??
ஏன் என்னிடம் முகம் சுளித்தாள்..??”

எப்படி யோசித்தாலும்
முடிவு ஒன்றுதான்..
எப்படியாவது பேசிவிடவேண்டும்
அவளிடம்..!

இமைகள் இளைப்பாறும்
முன்னே
சேவல் கூவியது..
இரவு நிறம் மாறும்
முன்னே
ஆவல் மீறியது..!

விடிந்தும் விடியாத
பொழுதில்
வேட்டைக்குக் கிளம்பும்
நாய்போல..
அவள் நினைவுகளால்
வேகமாய் நடந்தேன்..
நூலகத்தைத் தேடி..

வகுப்புக்களுக்குச் செல்லாதது
வாடிக்கையாகி விட்டதால்..
அன்றும்
வாசற்படி தவம்..!

சிற்றுண்டியைக் கூட
மறந்துவிட்டு..
வார்த்தைகளை
செதுக்கிக் கொண்டிருந்தேன்..

அவளிடம்
என்ன பேசுவது..?

பேசுவாளா..?
இல்லை..
பேசாமல் ஏசுவாளா?
இல்லை..
கண்டும் காணாமல்
என்னைக் காயப்படுத்துவாளா..?

அன்றுவரை..
எந்த பெண்ணிடமும்
பேசியதில்லை நான்..
பேசிய பெண்களையும்
மதித்ததில்லை..!

இன்று மட்டும்,
அவளின் மொழி கேட்க
ஏன் இந்த தாகம்..?
அவளின் விழி நோக்க
ஏன் இந்த தாபம்..?

இளமையின்
இரத்ததின் வெப்பம்
உயிரைச்
சொட்டு சொட்டாய்ச்
சுடும் வலி உணர்ந்தேன்..
அந்த வலியில்
ஒருவித
சுகம் கண்டு வியந்தேன்..

அன்று முதல்
அந்த வலிக்காய்
தவம் கூட கிடந்தேன்..!
அதுதான்
காதல் வலி என்று
பின்னாளில் உணர்ந்தேன்..!!!

அதோ..
காத்திருந்த தாமரைக்கு
கதிரவனின் ஒளிபோல்
அவளின் வருகை..!

அருகே வந்தாள்..
முகத்தில்
வெறுப்புக்கு மாறாக
புன் முறுவல்..!

என்னைக் கண்டதும்
முகம் சுழிப்பாள்
என்று இருந்தேன்..
இதழோரம்
சிரிப்பைச் சிந்தி
என்னைச் சாகடித்தாள்..!

எதார்த்தமாய்ப் பேசி
என்னை
ஏகாந்த இனிமையில்
மூழ்கடித்தாள்..

ஒரு வார்த்தைப்
கூறுவாளோ என்றிருந்தேன்..
ஒரு
கோரிக்கையே வைத்தாள்..!!!

-அவளின் கோரிக்கை அடுத்த பகுதியில்

K.கிருஷ்ணமூர்த்தி

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs