Saturday, February 28, 2009

தர்மம்



கடல் நீரை

உறிஞ்சி,

மேகமாக்கி..

மழையாய் மீண்டும்

பூமியில் தெளிப்பது

இயற்கையின் தர்மம்..


மழை நீரை

உறிஞ்சி..

மண்ணைப் பிளந்து

விண்ணோக்கி வளரும்..

அது,

தாவர தர்மம்..


தாவர தளைகளை

தனக்கு தீனியாக்கி..

வாட்டமாக வளரும்..

அது,

விலங்கின் தர்மம்..


நீரை குடித்து..

தாவரங்களை புசித்து..

தசைநார்களையும் ருசிக்கும்..

மானிட மிருகங்களே...


உங்களின்

ஆறாம் அறிவென்ன

அறிவியலில்

கரைந்துவிட்டதா..?


குடிக்கும் நீரில்

இரசாயணம் கலப்பதும்

உன் இனமே..

நீ கொஞ்சம்

சொல்லக் கூடாதா?


பழந்தரும் மரங்களை

வெட்டி வெளிநாட்டில்

விற்பவன்..

படித்தவன் தானே..

அதன்,

பின் விளைவுகள்

தெரியாதா..??


ஆவின்..

பால் மட்டும் போதாதாம்..

அதன்

இரத்தம் ஊறிய

இறைச்சியும் வேண்டுமா..??


இரத்தம் கேட்கும் நீ..

யுத்தம் வேண்டாம்

என்றால்..

சத்தமில்லா சிரிப்பு

வருகிறது...!!!


-K கிருஷ்ணமூர்த்தி
















Thursday, February 26, 2009

இரட்டை அர்த்தம்

பெண்களே..

பழைய சிந்தனை
பற்றி எரிந்தாலும்..
சற்றும் பதறாத
புதுமைப் பெண்களே..

பைந்தமிழ்ப்
புலவர்களின்
பாட்டில்
பவனிவரும்
பருவப் பெண்களே..

புகழ்ந்து விட்டான்
என்னை
புலவன் ஒருவன்
என்று
பூரித்துப் போகும்
புனிதப் பெண்களே..

அந்த
பொய்ப் புகழ்ச்சியின்
இரண்டாவது அர்த்தம்
தெரியுமா உங்களுக்கு..??

தூரத்து நிலவாம்
நீங்கள்..
அருகே சென்றால்
அவஸ்தை
என்றுதானே அர்த்தம்...

மணங்கமழும்
மலராம் நீங்கள்..
வந்து போகும்
வண்டினத்தின்
அடிமை
என்றுதானே அர்த்தம்..!

அழகாம் நீங்கள்..
ஆபத்தும்
உடன் உள்ளது
என்றுதானே அர்த்தம்..

செதுக்கி வைத்த

சிலையாம் நீங்கள்..

உணர்ச்சியே இல்லை
என்றுதானே அர்த்தம்..!

பெண்களே..
பெருமையின் சின்னங்களே..

இனியும்..
பொய்ப்புகழ்ச்சியில்
பொழுது போக்காதீர்கள்..!

உங்களை
புரிந்தவன் சொல்கிறேன்..

தமிழ் நீங்கள்..
தமிழின்,
'ழ'கரம் நீங்கள்..

'ழ'கரத்தின்
இனிமை நீங்கள்..
இனிமையின்
இன்பம் நீங்கள்..

இன்பத்தின்
உணர்வு நீங்கள்..
உணர்வின்
உயிர் நீங்கள்...

ஆம்..
உயிர்களுக்கெல்லாம்
உரு கொடுத்து
உருவுக்கு
உயிர் கொடுக்கும்
உன்னத
உயிர் நீங்கள்..!!!

K. கிருஷ்ணமூர்த்தி



Tuesday, February 24, 2009

போலி வாழ்க்கை


நரைத்து விட்ட

ஞாபகத்தின்

நாடி தொட்டுப் பார்க்கிறேன்..


நேற்று வரை

நடந்து வந்த

கால்தடத்தைப் பார்க்கிறேன்..


வேதனைகள்

சோதனைகள்

வித விதமாய்ப் பார்க்கிறேன்..


வானில் மட்டும்

அதே

ஓவியங்கள்

வியப்புடனே பார்க்கிறேன்..!


வாழ்ந்த வரை

வாழ்க்கை எங்கே

தேடித் தேடிப் பார்க்கிறேன்..


கால் தடுக்கி

விழுந்த இடம்

காணவில்லை வேர்க்கிறேன்...!


சிரிப்பொலிகள்

அழுகுரல்கள்

காதில் விழக் கேட்கிறேன்..


நியாயமில்லா

வாழ்க்கை தன்னை

நினைத்து நினைத்துப்

பார்க்கிறேன்..!


நாணயமே இல்லாதார்

பை நிறைய

நாணயம்..


நாணயமாய் வாழ்பவனை

நகைக்கிறது

ஆணவம்...!


பொதுநலத்தின்

பின்னணியில்

சுயநலத்தின் சுவடுகள்..


சுய நலத்தின்

கௌரவத்தில்

சோரம் போன கொள்கைகள்..!


உலக மகா

தத்துவங்கள்

உரக்க உரக்க பேசுவார்..


ஒன்றிரண்டை

தப்பித்தவறி

ஒப்புவித்தால் ஏசுவார்..!!


தனக்கென்றால்

தலைவலி..

அதுவே பிறர்க்கு

தலைவிதி..!!!


-K.கிருஷ்ணமூர்த்தி






Sunday, February 22, 2009

தமிழ்..

காதலி ஒருத்தி எனக்குண்டு - உயிர்
போகிற வரையவள் நினைவுண்டு..
பாடலில் பலமுறை சொன்னதுண்டு - என்
பாட்டுக்கு பல்லவி அவளென்று..!

தமிழ்.. தமிழ்.. தமிழ்..
அவள் பெயர் தமிழ்...
தமிழ்.. தமிழ்.. தமிழ்..
தமிழெங்கள் உயிர்..

ஓவியத்தோடு ஒப்பித்தால் அது
ஓவியத்தின் பெருமை..
காவியத்தோடு கற்பித்தால் அந்த
காவியமே இனிமை..
அவள் என்றுமே பதினாறு.. அவள்
பிறப்பினை அறிந்தவர் யாரு?
உலகில் உயிர்கள் பிறந்திட்ட அன்றே
பிறந்தவள் 'தமிழ்' என்று கூறு..!

தமிழ்.. தமிழ்.. தமிழ்..
அவள் பெயர் தமிழ்...
தமிழ்.. தமிழ்.. தமிழ்..
தமிழெங்கள் உயிர்..

உலகில் உள்ள அழகிகள் எல்லாம்
அவளுக்கு பின்னே பாரு..
உலகத்துக் கவளை அளித்தது அந்த
தமிழகம் என்னும் ஊரு..
கம்பன் கைகளிலே குழந்தை - அந்த
கந்தன் அருளிய மடந்தை.. -அவள்
சிறப்பை இந்த பாரே போற்ற
உழைப்பவருக்கு நான் உடந்தை!

தமிழ்.. தமிழ்.. தமிழ்..
அவள் பெயர் தமிழ்...
தமிழ்.. தமிழ்.. தமிழ்..
தமிழெங்கள் உயிர்..!

-K.கிருஷ்ணமூர்த்தி

(திருத்தமிழ் வலைப்பதிவில் மறுமொழியாக இட்ட இடுகை)

Saturday, February 21, 2009

தாமரை


குங்கும நிறத்தில்
ஒரு
குழந்தை சிரிக்கின்றது..

இதென்ன..?
சேற்றுக்குள்ளே
சிகப்பின் பிரசவம்..?

அடிப் பைத்தியமே...

இந்த சுட்டெரிக்கும்
சூரியனுக்காகவா
இத்தனைக்காலம்
ஒற்றைக்கால்
தவமிருக்கின்றாய்??

இரு இரு..

இடையில்..
மண்மத வண்டொன்று
நுகர்ந்ததால்
உன் முகம் சிவந்தது
சினத்தாலா..
நாணத்தாலா..?

அல்லது..
நீயும் அந்த
அகலிகை வம்சமா..???

பார்க்கத் தெவிட்டாத
பங்கஜமே..

எனக்கோர் ஆசை..

உன் பருவ மொட்டுக்கள்
பூப்பெய்துவதையும்...

வண்டுகள்
உன்னை மொய்ப்பதையும்..

நீ..
சிருங்காரமாய்ச்
சிணுங்குவதையும்..
சிரிப்பதையும்..

என்றாவது ஓர் நாள்
எனது
இருதய 'கேமராவில்'
பதிவு செய்ய வேண்டும்..

இதோ..
இங்கே,
மனிதர்களுக்குள்
மண்ணுக்காகவும்..
மதத்துக்காகவும்..
பெண்ணுக்காகவும்..
ஏன்..
பிணத்துக்காகவும் கூட
பங்காளிச் சண்டை..

இருதயமே இல்லாத
இவர்களுக்கு மத்தியில்
எனக்கு மட்டும்
என்ன வேலை..?

உன்
மகரந்தங்களுக்கு
மத்தியில்
எனக்கொரு
மாளிகை
அமைத்துத் தா...

அதில்..
நான் மட்டும்
வந்து குடியேர..

-K.கிருஷ்ணமூர்த்தி

Wednesday, February 18, 2009

விலாசம் தேடும் விழுதுகள்...!

என்
பேனாவின் புலம்பல்களை
பரிசாய்க் கேட்கும்
பருவப் பெண்ணே..

உன்,
முதல் பார்வையிலேயே..
மயிலிறகாய் இருந்தவன்..
தென்னங் கீற்றானேன்..!!

சுதந்திர அருவியாய்ச்
சுற்றியவனை..
குளத்து நீராய்
கைது செய்ததன்
காரணம் என்ன..?

என் சுவாசத்தையே
எனக்கு
பரிசளித்த தேவதையே..

உன்,
சீற்றத்தையும்
சேர்த்துக்கொள்ள
ஆசைப்படும்
அகராதி நான்..!

***
நீ
சிணுங்கினாய்..
இல்லை..
தென்றலுக்கு
நீ விடும் தூது அது..!

நீ சிரித்தாய்..
இல்லை இல்லை..
மலர்களை மலர வைத்தாய்..!!

நீ முறைத்தாய்..
ம்ஹும்...
என் கவிதைக்கு
இலக்கணம் வகுத்தாய்..

நீ திட்டினாய்..
அதுவும் இல்லை..
என் தமிழுக்கே
உயிர் கொடுத்தாய்..!!!

இப்பொழுதெல்லாம்..
நீ இல்லாத கனவுகளை..
நான்,
கண்டுகொள்வதே இல்லை..!

பெண்ணே..

உன் மௌனங்களுக்கும்
உரை எழுத முடிந்த
எனக்கு...
உன் பேச்சின்
பொருள்காணும்
பொறுமை இல்லையே...!!!

அன்பே,

உன் செயல்களுக்கு
அர்த்தம் கூறும்
அகராதி
என்ன விலை..?

***
உன் நாணத்திற்கோர்
உவமை சொல்ல..
இப்பாரினில்
பொருளே இல்லையே...!

என் பெயரே
எனக்கு..
மறக்கும் வேளையில்
புனைப்பெயர் சூட்டினாய்..

இனியவளே..
உன் உதடுகள்
உச்சரிக்கும் பொழுதுதான்
என் பெயரின்
இனிமை புரிகிறது..!

வசந்தத்திலும் பூக்காத

என் தோட்டம்..
உன் வருகையால்
சட்டென்று பூக்கிறது..!!

உன் பெயரை
மந்திரமாய் ஜபிக்கும்
எனக்கு..
எழுதுவதற்கு மட்டும்
எண்ணமே இல்லை..

பேனா முள் கொண்டு
உன் பெயரைக் கூட காயப்படுத்த
என்றைக்குமே
எனக்கு உடன்பாடில்லை..!

உயிரே..
உன் சுவாசங்கள்
எனை
சுடும் நாள்
வரும் வரையில்
இனி நான்
சுவாசிக்கப் போவதுமில்லை..!!!

- K.கிருஷ்ணமூர்த்தி

(இன்றும் எனது காதலியாகவே இருக்கும் என் மனைவிக்கு நான் பல்கலைக்கழகத்தில் படிப்பதை மறந்து பிதற்றிய பிதறல்..)

Tuesday, February 17, 2009

உதயா..

அண்ணா..

கேள்விக்குறியாய்

இருந்த சமுதாயம்..


உன்னால்

இன்று ஆச்சர்யக் குறியானது..!


ஆனாலும்..

உன் கதை என்னவோ

இன்னமும் கேள்விக் குறியே..!


சரித்திரத்தையே

தொலைத்து விட்ட

சமுதாயத்துக்கு

சுதந்திரத்தை கற்றுத் தந்தாய்..


இன்று..

உன் சுதந்திரம்

நான்கு சுவர்களுக்குள்.!!!


தரித்திரமாய்

திரிந்த தம்பிகளை எல்லாம்

சரித்திரம் படைக்க வைத்தாய்..


என்ன புண்ணியம்..?

மீண்டும் அதே தரித்திரம்..!!!


நன்றி....

அந்த மூன்றெழுத்தை

ஐந்தெழுத்து அரசியலுக்காக

அடகு வைப்பதும் நம் இனமே..!


அண்ணா..

எங்களுக்கு கிடைத்த

ஒரே துருப்புச் சீட்டு நீதான்..


எங்களின் ஒரே விடிவெள்ளியும்

நீதான்..


கவலை வேண்டாம் அண்ணா..


இனிப்பு..

உன்னை ஒன்றும் செய்து விடாது..!


வியாதி..

உன்னை எளிதில் வென்று விடாது..!!


காரணம்..

காலனும் கடவுள்தான்..!


ஆணவக்காரர்கள்

உன்னை அடக்க நினைக்கலாம்..


கோமாளிகள்..

உன்னை தீவிரவாதியாக்கலாம்..

எங்களுக்கு தெரியும்..

உண்மை..

அவர்களுக்கும் புரியும்

உன் மேன்மை..!!!


ஆருயிர் அண்ணா...

ஐம்பது

ஆண்டுகளுக்கு முன்னர்

அடகுவைத்த

வீரத்துக்கு

பாலூட்டிய
எங்கள் தாய் நீ..!


தேய்ந்து போன

தன்மானத்தை
திருப்பித் தந்தாய்..
கேட்டு கேட்டு..

ஓய்ந்து போன
கோரிக்கைகளை
கோடரியாக்கினாய்..

செவிடுகளின் காதுகளில்
சங்காய் ஒலித்தாய்..!

அருமை அண்ணா..

சம்பந்தனுக்குப்
பிறகு பூத்த
சகாப்தம் நீ..!!!

அன்று
உன்னால்
சிறுபான்மை சமூகம்
பேரணி திரட்டியது!

அதுதான் பேரணி..
மற்றவை எல்லாம்
அதன் காலணி!

அண்ணா...

அன்பால்
நீ ஊட்டிய வீரப் பால்..
இன்னும் வற்றிவிடவில்லை
உன் தம்பிகளுக்கு...

பெரியண்ணன் வேதமூர்த்திக்கு
நீ தம்பியென்றால்..
உனக்கு இங்கே கோடி தம்பிகள்..!!!

கலங்காதே அண்ணா..
எதற்கும்
ஒரு எல்லை இருக்கிறது..

உன் சுதந்திரம்
சூன்யமாயும்
நாங்கள்
மௌனம் காப்பது..
காரணத்தோடுதான்..

குற்றம் சுமத்த
திராணியில்லாமல்..
கூண்டிலேற்றிய
அந்த
பொட்டையர்கள் சொன்னது
பொய் என்பதை உணர்த்தத்தான்...!!

உன் தம்பிகளின்
இறுதி
உறுதிமொழி அண்ணா..

எங்கள் தாய்க்கும் மேலாம் தமிழ்..
அந்த தமிழுக்கும் மேல் நீ..!!

ஒரே ஒரு ஜாடை காட்டு..
எங்கள்
உயிரையும்
மயிரென்றே சொல்லி
உனக்காய்
மீண்டும் திரள்வோம்..!!

-K.கிருஷ்ணமூர்த்தி

யார் நீ..?!


நண்பர்காள்..

உணர்ச்சிவசப்படுவது
ஆரோக்கியமல்ல...!

இது,
சிரிப்பவர் உலகம்..
உன் கண்கள் மட்டும்
ஒழுகுவதேன்..?

இது,
இருப்பவர் உலகம்..
திருவோட்டை
நீ இன்னும்
தழுவுவதேன்..?

நண்பா..
முட்டைக்குள்
கருவை வைத்தான்..
கருவுக்கு..
காற்றும் வைத்தான்..

ஆனால் உனக்கு..
ஆறாம்
அறிவை வைத்தான்..!

***

உனக்கென்ன..

சிறு பிராயம்
விளையாட மட்டும் தானா..?

இளமை..
காதல் கேளிக்கைக்கு
அர்ப்பணமா..?

முதுமை என்ன
சம்சார வாழ்க்கைக்கும்
சாரயத்திற்கும்
தர்ப்பணமா..??

நண்பா..

வாடிக்கொண்டிருப்பது
உன் வாழ்க்கைச் 'செடி'..
உரமிட ஊரை அழைப்பது
மடமையடா..!

கீழே..
விழுந்துவிட்ட
வைரத்தை தேடும்போழ்துதான்..
அதன்
விலை மதிப்பே புரியும்
மனிதனுக்கு..!!!

***
உன்னைச் சுற்றிப் பார்..

நீராவதில்
நீருக்குச் சிரமமில்லை..
அது நீரின் தர்மம்..

நெருப்பாவதில்
நெருப்புக்கும் சிரமமில்லை..
அது நெருப்பின் தர்மம்..!

வீசுவதில்
காற்றுக்குச் சிரமமில்லை
சுற்றுவதில்
பூமிக்கும் சிரமமில்லை..!

ஆனால் மனிதா..

மனிதனாவதில் மட்டும்..
உனக்கு
ஏன் இவ்வளவு சிரமம்..???!!!

-கிருஷ்ணமூர்த்தி








Sunday, February 15, 2009

வாழ்க்கை

வாழ்க்கை..

இதன் அர்த்தம்தான்
என்ன?

ஜனனம்,
மரணத்தை நோக்கி
மெல்ல நகர்கிறதே..
அதுதான் வாழ்க்கையா?

உறக்கத்தில் கூட
சுவாசிக்கிறானே மனிதன்..!
சுவாசிப்பதுதான் வாழ்க்கையா?

பசியை போக்க
பத்தும் செய்கிறானே..
எனின்..
புசிப்பதுதான் வாழ்க்கையா?

"கடலைக் கடப்பேன்..
நெருப்பில் நடப்பேன்..
நினைவில் மட்டும்
நீயிருந்தால்..
ஏவுகணைகளையும் எதிர்த்திடுவேன்.."
பொய்யாய் புலம்புகிறானே
காதலன்..
காதல்தான் வாழ்க்கையா??

தீமை செய்யாதே..
இறந்தால் நரகம்!
நன்மை செய்..
செத்தால் சொர்கம்!

ஆயின்..
வாழ்க்கை
மரணத்தில் மட்டுமே
விளங்குமா...?!!

எது வாழ்க்கை..?
விவாதிப்பதில்
விருப்பமில்லை எனக்கு!

வெற்றிடத்தை
காற்று நிரப்பும்!
இது விதி..

வாழ்க்கையை,
அன்பு நிரப்பும்..
ஒழுக்கம் நிரப்பும்..
பண்பு நிரப்பும்..
பாசம் நிரப்பும்..
கடமை நிரப்பும்..
காதலும் நிரப்பும்..
அமைதி நிரப்பும்..
ஆசையும் நிரப்பும்..!

இயற்கையோடு
நாம் செய்துகொண்ட
இடைக்கால ஒப்பந்தமே
வாழ்க்கை..

இதில்
ஆசைகளை கடந்துவிட்டால்..
பின் எதற்கு வாழ்க்கை?!

காதல் இல்லா
வாழ்க்கை..
கருத்தில்லாத கவிதை
போன்றது..

கடமை இல்லா
வாழ்க்கை..
கணக்கு இல்லாத
கல்வி போன்றது!

அன்பில்லாத
வாழ்க்கை..
'ழ'கரம் இல்லா
தமிழ் போன்றது...

அர்த்தம் இல்லாத
வாழ்க்கை..
ஆண்டவனே இல்லாத
மதம் போன்றது..!!

ஆசைகளை
அர்த்தப்படுத்துங்கள்..
வாழ்க்கையை
சுத்தப்படுத்துங்கள்...!!!

-அன்புடன் கிருஷ்ணமூர்த்தி

Friday, February 13, 2009

பிப்ரவரி 14


இன்று..

ஊரெல்லாம் பௌர்ணமி..

எனக்கு மட்டும் அமாவாசை..!


இன்று மட்டும்

ஏனோ..

என் வார்த்தைகள்

வாக்கியமாவதை மறுக்கின்றன..


கருத்துக்கள்..

கவிதையாவதை வெறுக்கின்றன...!


பெண்ணே..


நெருப்பென்பதை அறிந்தும்

விட்டில் பூச்சிகள்

விளக்கைச் சுற்றுவது

வாழ்க்கையை வெறுப்பதால் அல்ல...


என்றாவது ஓர் நாள்..

அந்த நெருப்பும்

நீர் வார்க்கும்

என்ற நப்பாசையால்தான்..!!


***

இற்றுவிட்ட இதயத்தில்

இன்னும்

கொஞ்சம் வலுவிருக்கிறது..


காரணம்..

உன் நினைவு

இன்னும் அதில் இருக்கிறது..


மறந்துவிட முயற்சித்தேன்..

இறந்துவிடுவேன் என்பதால்

மறப்பதை மறந்துவிட்டேன்..!!!

***


காமம் கடந்து

காதல் சுமந்தேன்..

ஈமச் சடங்கின் விறகானேன்..


காதல் கடந்து

காமம் சுமந்தேன்..

வீசும் காற்றில் சறுகானேன்..!


பிறந்தது நிஜம்..

இறப்பதும் நிஜம்..

வாழ்க்கை மட்டும் மாயம் பெண்ணே..


உன்னை

நினைத்தது நிஜம்..

அனைத்தது நிஜம்..

காதல் மட்டும் காயம் கண்ணே..


-கிருஷ்ணமூர்த்தி


(நிச்சயமாக, இது என் கதை அல்ல.. நான் இன்னும் அறிந்திடாத ஒரு சுகம், காதல் தோல்வி.. அந்த வேதனையில் எழுந்த எண்ணங்களே இவை..)











Thursday, February 12, 2009

உன்னைத் தொழுது கொள்..


தமிழா..

சோகங்கள்..
மேகங்களாய் பொழியட்டும்..
ஆக்கத்தின் எருவாகட்டும்..

ஊனங்களை..
தானங்களாக தந்துவிடுங்கள்..
வானத்தையும் தொட்டுவிடலாம்..!

தோள்களிலே தோல்விகளா?
துரத்தியடி தூக்கு மேடைக்கு..

***
காதல் தோல்வியா?
கல்யாணம் செய்துகொள்..
காதலை தோற்கடி!

ஏட்டுக்கல்வி ஏறவில்லையா?
தொழிற்கல்வியும்
சோறு போடும்
மறந்துவிடாதே!!

பெற்றவன் பாட்டாளியா?
பிள்ளை நீ
பட்டதாரியாவதில் பாவமில்லை...!

கையிலே காசு இல்லையா?
கல்வி போதும்
கவலை விடு!

மின்சாரம் எதிரியானதா?
மெழுகுவர்த்தி
இங்கே இன்னும் கிடைக்கிறது..

சம்சாரமே மின்சாரமானதா?
மின்சாரத்தின் நன்மைகள் கோடி..
மனதில் நிறுத்து..!

தேவைகள்
தீர்ந்தபாடில்லையா?
தேக்கி வைத்து இலாபமென்ன?

பாதையில்
பாறைகளா??
பகுத்தறிவு படைத்தது எதற்காக?

தூக்கம்...!

ஆம்..
தூக்கம்தான்
தோல்விகளின் இருப்பிடம்..
தெரிந்து வைத்து கொள்..
தூக்கத்தைக் கொல்..!
தூங்கிக் கிடந்தவன்
எதையும்
சாதித்ததாக சரித்திரம் இல்லை!

****

உடன்பிறப்பே..

விழி..
விழித்தெழு..
வேங்கை,
உறங்கினால் வேங்கையாகாது!

தொழு..
உனைத்தொழு..
இந்த உலகமே
உன்னை
ஒருங்கிணைந்து தொழ வேண்டும்!!

படு..
செயல்படு..
வாய்பேச்சு வீரன்
என்றவன்
வாயை அடை..!

விடு..
சோம்பல் விடு..
சுறுசுறுப்பை
எறும்பிடம் கற்பது
ஏளனமா என்ன..?

உன்னுள்
உறங்கும் உணர்வுகளை
உசுப்பி விடு..
உலகமே
உன்னுள் அடங்கும்...!!!

-கிருஷ்ணமூர்த்தி

Wednesday, February 11, 2009

நீ கிளிப்பிள்ளை அல்ல..


தமிழா..
நீ கறுப்பு நிறமா?
கலங்காதே..
கிளியோபாட்ராவும் கறுப்புத்தான்..!

புகைப்படம் நன்றாக
விழவில்லையா?
வெளியில் வை..
பழகிவிடும்..

பெண்கள்
உன்னிடம் பேசுவதில்லையா?
பெருமூச்சு விடு..
உன் ஆண்மையின்
மவுசு அதிகம்...!

உன்
நண்பன் உன்னை
புரிந்துகொள்ள வில்லையா?

சிரி..
உன்னை
நீயே இன்னும்
புரிந்து கொள்ளவில்லையே!

உன் மீது வதந்தியா?
உண்மையைச் சொல்லி
என்ன பயன்?
நீ
பிரபல்யமாகிக் கொண்டிருக்கிறாய்..
கவலை விடு!

ஊர்வது எறும்பானாலும்
தேய்வது
கல்லாயிற்றே..

நீ நினைத்தால்..
இமயமும்
உன்
காலடியில்!!!

*

உன்னைச் சுற்றிலும்
எதிரிகளா?
நீ
முன்னேறிக் கொண்டிருக்கிறாய்
என்று அர்த்தம்..

உன்
கருத்தை
ஊரார் ஏற்கவில்லையா?
அதில்
உண்மை உள்ளது
என்று அர்த்தம்..

தொடக்கமே தோல்வியா?
தயங்காதே..
வெற்றியின்
அடிக்கல்லே அதுதான்..

அங்கீகாரம்
கிடைக்கவில்லையா?
அது அர்த்தமற்றது
என்று கொள்..

***

வாழ்க்கை
இனிக்க வேண்டுமா?
மது, மாது, சூது..

வாழ்க்கை
உருசிக்க வேண்டுமா?
இயல், இசை, நாடகம்...

வாழ்க்கை
வரலாறாக வேண்டுமா?
சுயநலம் விடு..
பொதுநலம் பாடு!!!

உன் வாழ்க்கையை
நீயே தேர்வு செய்..

வாழப்பிடிக்கவில்லையா?!!
நில்..
சாவது
அதனிலும் கொடிது!

உனக்காக வாழ்வது
பிரச்சனையா?
ஊருக்காக வாழ்..
உற்சாகம்
தானே வரும்!

***

தமிழன்
தரித்திரனா?
பட்டிமன்றம் தேவை இல்லை..
பட்டிமன்றத்தில் ஜெயிப்பதால்
தலையெழுத்தா மாறும்?

பென்களின் கூந்தலில்
இயற்கை மணம்
உண்டா? இல்லையா?
ஆராய்ந்து என்ன பயன்?

கற்பில் சிறந்தவள்
கண்ணகியா? மாதவியா?
வெட்டிமன்றம்!
என் தாய்க்குப் பின்தான்
இவர்களெல்லாம்...!!!

***

தமிழா..!

வாகனங்களை
மலிவாக இயக்க
என்ன வழி?
ஆய்வு நடத்து..

உலகத்தை
ஒரு பொழுதில்
சுற்றி வர
என்ன வழி?
கண்டுபிடி..

பாலைவனத்தைச்
சோலைவனமாக்குவது
எப்படி?
எனக்கு சொல்..

இன்னும்
எத்தனை நாட்கள்
பிறர் சாதனையை
ஆராய்ந்து கிடப்பாய்?

உன் சாதனையை
ஊரார்
ஆராய வேண்டாமா?

உடுக்க உடையும்
படுக்க இடமும்
உனக்கு மட்டும்

இருந்தால் போதுமா?

உன் புகழை
பார் போற்ற
வேண்டாமா?

அட,
பார் வேண்டாம்..
சில ஊர்களாவது
உன் புகழ் சொல்லல்
வேண்டாமா?

மறவாதே..

நீ கிளிப்பிள்ளை அல்ல..
தமிழ்ப்பிள்ளை...!!!

-கிருஷ்ணமூர்த்தி

நிலா

அது..
என் காதலி
முகம் பார்க்கும்
கண்ணாடி..

வானத்து
நிலைக்கண்ணாடியில்
அவள் முக பிம்பம்..

அவளுக்கு மட்டும்..
தேய்பிறை வயது..
வளர்பிறை இளமை..!

நிலா..

அது,
வெருச்சோடிய
இரவின் நெற்றியில்
இறைவன் இட்ட
திருநீர்த் திலகம்..

நிலா..
கடல் பெண்..
சினங்கொண்ட
சிகப்புச் சூரியனை விழுங்கி..
வெள்ளி நிலவாக
வானத்துக் கூரையில்
வீசிவிட்டாளோ??


-K.கிருஷ்ணமூர்த்தி












மனைவி

வானம்
வாடிக்கொண்டிருக்கும்
வைகறையில்
ஒளி
விளக்காவாள்..

காணக்
கிடைக்காத
காவியங்களுக்கு..
பெரும்
கடையாவாள்..

தோல்விகள்
தொங்கும்
தோள்களுக்கு
நல்
துணையாவாள்..

கேள்விகள்
கேட்டே
வாழ்க்கைக்கு..
ஒரு விடையாவாள்..!!

*
உறவோ துறவோ..
ஒருங்கே தருவாள்..
இறையை போல
ஐந்தொழில் புரிவாள்..

சிறையோ சிறகோ..
சிரிப்பால் அருள்வாள்..
நிறையோ குறையோ..
நிஜத்தை சொல்வாள்..!

- கிருஷ்ணமூர்த்தி



Monday, February 9, 2009

தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம்

தமிழன்னையின்
தவப்புதல்வர்களே..
தமிழர்களே..
மலேசியத் தமிழ்ப்பளிகளின்
இன்றைய நிலை என்ன
தெரியுமா உங்களுக்கு?

இங்கே
பாட்டாளியின் பிள்ளைகள்
தமிழ்ப் பள்ளியில்
பெரிய வாத்தியார் பிள்ளைகள்
'செகோலா கெபங்சா ஆனில்'!

உண்மை கசக்கிறதா?
நாவில் தேன் தடவி
என்ன பயன்?
*
தமிழுக்கென்ன
தனப் பற்றாக்குறையா?
இல்லை
மனப்பற்றாக்குறை..

ஆசிரியர் பற்றாக்குறையா?
அதுவும் இல்லை..
அவர்களில் பலருக்கு
அக்கறையில்லை..

தமிழ்ப் பிள்ளைகள்
என்ன?
'தத்தி'களா?
நான் சொல்கிறேன்..
ஒவ்வொருவரும்..
ஒவ்வொரு வர்த்திகள்..
இன்னும் ஏற்றப் படாத வர்த்திகள்!

பெற்றோர்களுக்கு
பொறுப்பே இல்லையா?
பிழை..
புரியவைக்க ஆளில்லை..
தலைவர்களுக்கோ
அதற்கு நேரமில்லை!!

**
இன்னொரு உண்மை தெரியுமா
உங்களுக்கு..?

தன் அலுவலை விட..
அரசியலில்தானே
அதிகம்
ஆர்வம் காட்டுகிறார்கள்
அதிகமான
தலைமை ஆசிரியர்கள்..!!!

அறிஞர்களே..
தமிழர்களே...
தமிழ்ப் பள்ளிகளை
தலைநிமிர்த்தப் பாடுபடும்
தானைத் தலைவர்களே..!

நான் சொல்வதையும்
கொஞ்சம் கேளுங்கள்...

ஆம்..

சிந்திக்கத் தேவையில்லை..
சிறப்பு வகுப்பும் தேவையில்லை..
மான்யம் தேவை இல்லை..
மாயாஜால வித்தைகளும் தேவையில்லை...

"தலைமை ஆசிரியர்களின் பிள்ளைகளை
தமிழ்ப் பள்ளீயில்தான் சேர்க்க வேண்டும்"
என்ற
கட்டாய விதி
ஒன்று போதும்...

தமிழ்ப் பள்ளிகளின் தலை எழுத்து
நிச்சயம் மாறும்!!!

-கிருஷ்ணமூர்த்தி

பி.கு:
'தத் துவ மசி" தலைமை ஆசிரியர்கள் தமிழ்ப் பள்ளிகளின் மேல் நம்பிக்கை வைத்தால் ஒழிய.. அவர்களால் அப்பள்ளிகளை முன்னேற்ற உண்மையாக பாடுபட முடியாது!

ஈழ முழக்கம்

ஏ சிங்கள இராணுவமே..
மனிதம் என்பதை மறந்துவிட்டு..
இன்னும் எதைச் சாதிக்கப் போகிறாய்?

ஏ ராட்சச பாக்சேவே..
நேப்பாளத்தில்..
மாவோ கிளர்ச்சியினர்
ஆயுதம் ஏந்தியே
சமரசம் பேசவில்லையா?

இன்னும்
எத்தனை பேர் இறந்தால்
உன் பசி அடங்கும்?
தமிழர்களோடு..
உன்னினமும் தானே அழிகிறது..!

ஒன்று மட்டும் சொல்கிறேன்..

எங்களின் சமாதிகளில் நின்று
சமாதானம் பேசாதே..
எங்கள் பிணம்கூட
இப்போது போருக்கு தயார்..!

எங்கள்
வீடுகளை தகர்க்கும் உங்கள் கைகள்
நாளை
நெருப்பில் கூட வேகாமல் போகட்டும்..

எங்கள்
சகோதரிகளை களங்கப்படுத்தும்
உங்கள் குறிகள்
நாளை
நாய்களுக்கு இரையாகட்டும்..

எங்கள்
குழந்தைகளை கொலை செய்யும் பாதகர்களே..
நாளை உங்கள் நாடே சுடுகாடாகட்டும்..!

மறந்துவிட்டாயா..?

இலங்கேசுவரனே எங்கள் இனம்தான்..
எங்களுக்கும் அங்கே சரித்திரம் உண்டு..
இல்லை இல்லை..
எங்களுக்குத்தான் அங்கே சரித்திரம் உண்டு!

ஏ இராட்சச பாக்சேவே..
மீண்டும் ஒரு சந்தர்ப்பம் தருகிறோம்..

உயிர் மேல் உனக்கு ஆசையிருந்தால்..
கடவுள் மேல் நம்பிக்கை இருந்தால்..
புத்தனின் மதத்தில் மதிப்பு இருந்தால்..

சாத்தானே..
இப்போதே பின்வாங்கு!

-கிருஷ்ணமூர்த்தி

Saturday, February 7, 2009

தைப்பூசம்

தமிழனின்
தன்மானத்தின் வயது
ஓராண்டுதானாம்..!

மீண்டும்
இன்று பத்து மலையில்
மக்கள் வெள்ளம்
நிரம்பி வழிகிறதாம்..

நெஞ்சு பொறுக்குதில்லையே...

அன்று
அரசோடு ஒன்று சேர்ந்து
அப்பாவித் தமிழர்களை
அடித்தனர்..

காவல்துறையின்
கைப்பாவையாய்
கதையை திரித்து
கூறினர்..

நல்லபாம்பு
நடராசா தலைமையில்
நான்கு புகார்கள்
தந்தனர்..!

எல்லாம் இந்த
பாழாய்ப்போன
சமுதாயத்திற்கு எதிராக...

இருந்தாலும்..
இன்று பத்துமலையில்
பக்தர் கூட்டம்
அலையலையாய்!!!

அபாண்டம் சொன்ன
அத்தனை பேரும்..
இன்னும் தலைமை பீடத்தில்..

ஹிண்ட்ராஃப் அணியின்
பின்னால் சென்ற
தமிழர்கள் இன்னும்
தவணையில்!

நெஞ்சு பொறுக்குதில்லையே!

அன்று..
தமிழ்க் கடவுளின்
சன்னதியில்
தமிழர் கொடுமை..

கோவிலுக்குள்ளே
தன் இனத்தை பூட்டி..
காட்டிக் கொடுத்தான் ஒருவன்..
அவனே இன்னமும் தலைவன்!

ஆம்..
எட்டப்பன் எப்போதோ
அவன்
மூதாதையர் வீட்டில்
முழு 'விருந்து' சாப்பிட்டிருக்கிறான்
போலும்!!!

*
அன்று..
இதயம் இல்லா
காவல் துறையின்
காலால் மிதியுண்டோம்..

செவிகள் இல்லா
நீதித் துறையால்
இன்னல் பல கண்டோம்..

இருந்தும்..
தமிழனின் தன்மானம்
என்னவோ..
ஓராண்டு மட்டுமே!

மீண்டும் இன்று
பத்து மலையில்
பக்தர் கூட்டம்!

நெஞ்சு பொறுக்குதில்லையே!!!

-கிருஷ்ணமூர்த்தி

Thursday, February 5, 2009

தவளைகள்

மக்கள் தீர்ப்பே
மகேசன் தீர்ப்பு..

அதை
குறுக்கு வழியில்
மாற்றிட முயன்றால்..
இறுதியில் கிட்டும் ஆப்பு!

அரசியல் சகதியில்
தாவும் தவளைகள்..
கடைசியில் மூவரும்
வெறும் நீர்த்திவலைகள்..

தாவும் தலைவர்கள்
போயினர் சோரம்..
தரங்கெட்ட தலைவர்கள்
தரணிக்கு பாரம்...

கற்பை இழந்த
மூவரை மக்கள்
எளிதில் கண்டு கொள்வர்..

அடுத்த தேர்தலில்
இம்மூன்றும் சேர்ந்த
கூட்டணியை கண்டால் கொல்வர்..

மக்கள்..
கண்டாலே கொல்வர்!!

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு...!!!

-கிருஷ்ணமூர்த்தி

Wednesday, February 4, 2009

சிந்திக்க மறந்த என்னவனே!

ஏ மனிதனே..
என் இனத்தவனே..
சிரிக்கத் தெரிந்த நீ..
ஏன் சிந்திப்பதே இல்லை?!

இல்லாத வானத்தை
வருணிக்கும் நீ..
இருக்கும் மானத்தை
மறந்து விட்டாய்!

அழகாய்
வளர்ந்து வளர்ந்து
மீண்டும் தேயும் நிலவு போல..

உயரே
பறந்து பறந்து
தரைக்கு இரங்கும்
பருந்து போல..

கடலில்..
புரண்டு, எழுந்து, பின்
ஒடுங்கி விழும்
அலையைப் போல..

மண்ணில்..
பிறந்து வளர்ந்து..
மண்ணோடு மண்ணாவதுதானா
மனித இயல்பு??!

மனிதா..

உன் செவிகளை கொஞ்சம்
என் பக்கம் வை..

நிலவுக்குச்
சரித்திரம் தேவை இல்லை..

பருந்துக்கு
பணங்காசு தேவை இல்லை..

அலைகள்
புகழைத் தேடுவதே இல்லை..!

மனிதா,
நீ மட்டும் ஏன்..
நில்லாமல் ஓடுகின்றாய்?
நிலையில்லா செல்வம் தேடுகின்றாய்..?
நிம்மதி இன்றி வாடுகின்றாய்???

கொஞ்சம் பொறு!

ஒரு மேட்டை இடித்தால்தான்
ஒரு நாட்டை ஆக்க முடியுமா?

ஒரு காட்டை அழித்தால்தான்
உன் வீட்டை எழுப்ப இயலுமா??

ஓர் உயிரை
கொன்றால்தான்..
உன் வயிறு நிரம்புமா???

அடுத்தவன் அழிவில்தான்..
நீ,
வாழ்ந்தாக வேண்டுமா..?

நீ..
பகுத்தறிவு படைத்தவன்..
மறந்து விடாதே!

தன்னை வருத்தி..
பிறர்க்கு ஒளிதரும்
மெழுகுவர்த்தியை
படைத்ததும் நீ தானே..!

அதன் மேன்மை
விளங்கவில்லையா
உனக்கு?

யோசி..

விண்ணில் எழும் கதிரவனால்
ஊருக்கு நன்மை..

மண்ணில் விழும் மழைத்துளியால்
வேருக்கு நன்மை..

பெண்ணுள் இருக்கும் பொறுமையினால்
ஊருக்கு நன்மை..

உன்னுள் உறங்கும் திறமையினால்
யாருக்கு நன்மை??

நில்...!

பேசு..
மென்மையாக பேசு..
உண்மையே பேசு..

பொழுதுக்களை
பழுதாக்கியே
பழக்கப் பட்டவனா நீ?

இனியொரு விதி செய்..

ஊறார் குறையை
உளவு பார்ப்பதைவிட..
உன் குறை எதுவென்று
யோசி!

கடைசியாக ஒன்று..

உன் இனத்தால்
நீ வாழ்ந்தது போதும்...

இனியாவது..

உன்னால்,
உன் இனம் வாழ வேண்டும்..
உன் மொழி வாழ வேண்டும்..
உன் தாயகம் வாழ வேண்டும்..
இவ் வையகம் வாழ வேண்டும்..
உனை ஈன்றாள் வயிறு
வைகை போல் குளிர வேண்டும்!!!

-கிருஷ்ணமூர்த்தி

கன்னித்தாய்

(இது..
மணவிலக்கு பெற்று, ஒற்றையில் வாடும் ஓர் இளம் தாய்க்கும்..
இன்னார்தான் தன் தந்தை என்றுணரா அவள்தம் சேய்க்கும்..
என் பேனாவில், கண்ணீர் மையூற்றி வடித்த கவிதை..)

இந்த புல்லாங்குழலுக்கு
முதல் இராகமே
முகாரி!

இவளின்
இரவுகளை மட்டும்
இரவல் கேட்கும்
ஆணின (அ)சிங்கங்கள்!!

உண்மையில்,
இவள்..
தாய் வீட்டில் கூட
வேண்டாத விருந்தாளி..!!!

தகப்பனின்
பாசப் பார்வைக்கு..
சற்று
கௌரவக் குறைச்சலாம்..

முன்னாள் கணவனுக்கு
இன்னாளில்
இரண்டு குழந்தைகளாமே..

உணர்ச்சி என்பது
இவளுக்கு மட்டும்
விதிவிலக்கு!

என்ன செய்வது?
என்றும்,
உன் இனம்தானே
உனக்கு எதிரி..

உன் வாழ்க்கையைத்
திருடியதும்..
உனைப்போல் ஒரு பெண்தானே..!

ஓ என் சமுதாயமே..

எரிவது விளக்கென்று அறிந்தும்
விட்டு விலகாத
விட்டில் பூச்சிகளின்
உறைவிடமே!

இன்னும்
எத்தனைக் காலம்தான்
சம்பிரதாய சாக்கில்
இவர்களின் உணர்வுகளுக்கு
கொள்ளி வைப்பீர்கள்?

நிலவில் களங்கம் என்றால்
அது
உங்களுக்கு கவிதை..

நிஜத்தில் களங்கம் என்றால்
அது
அவளுக்கு மட்டும் அவஸ்தை!

ஓ.. மாண்புமிகு சமுதாயமே!

என்று தீரும் இத்தொழு நோய்?

விவாகரத்து வழக்குகளில்
பிள்ளைகளை மட்டுமல்ல..
கன்னித்தன்மையையும்
திருப்பித் தரச்சொல்லும்
நீதி மன்றம்
வேண்டும் இங்கே!

ஓ..
எனக்கு மறந்துவிட்டது..

இது
இதயம்
இத்துப்போனவர்களின்
இருப்பிடம்...

இன்னும்
எத்தனை பாரதிகள்
தோன்றினாலும்..

இன்று வாழும்
இயந்திர
இராமர்களுக்கு
இரக்கம் வராது..!

ஏ எமனே..
என் கருணை மனுவை
நீயாவது ஏற்பாயா?

உன் பாசக்கயிற்றை
விற்றுவிட்டு..
வலை ஒன்றை
வாங்கு..

இன்னும் திருந்தாத
இந்த சமுதாயத்தை..
தயை கூர்ந்து..
அடகு வைத்தவனிடமே
திருப்பிக் கொடுத்துவிடு!!!

கிருஷ்ணமூர்த்த்தி.

விதவை

வாழ்க்கைத் தோட்டத்தில்
மலர்ந்தும்
மலராமல் இருக்கும்
வாசனைப் பூவே..

நீ ஒரு பாவி..
இந்த,
சம்பிரதாய சமூகத்தில்
பிறந்துவிட்டாயே ! !

இந்த மீன் குஞ்சு
நீந்துவதற்குள்..
செதில்களை
செதுக்கி விட்டார்களே பாவிகள்..!!

வாழ்க்கையே
உலர்ந்து விட்ட பிறகு..
உணர்ச்சியற்ற உலகம்
போற்றினால் என்ன?
தூற்றினால் தான் என்ன??

நடை பழகியது போதும்..
இனியாவது,
இறக்கையை உடுத்திக்கொள்..
உயர்ந்த வானத்தில்
உனக்கும்..
கொஞ்சம் இடமிருக்கும்..!!!

-K.கிருஷ்ணமூர்த்தி

Sunday, February 1, 2009

Smile Please

உன்
உதட்டோரப் புன்னகைக்காய்
உதய சூரியன் ஏங்குகிறான்..
தன் பணியை செய்யாமல்
சோர்ந்து கிடக்கிறான்..
ஸ்மைல் ப்ளீஸ்..

இன்று காலை
சூரியன் உதித்ததே உனக்காகத்தான்..
இனி பூக்கள் மலர்வதும் உனக்காகத்தான்..
உன் புன்னகை முகத்தை காணத்தான்..
ஸ்மைல் ப்ளீஸ்..

நண்பகல்..
சூரியன் சுட்டெரித்துக்கொண்டிருக்கின்றான்..
காரணம் கேட்டேன்..
நீ அவனுக்கு,
புன்னகை பாக்கி தரவேண்டுமாம்..
ஸ்மைல் ப்ளீஸ்..

மாலைச் சோலையில்
ஒரு ரோஜாச்செடி
அழுதுகொண்டிருக்கிறது..
காரணம் கேட்டேன்..
நீ இன்னமும் சிரிக்கவில்லையாம்!
ஸ்மைல் ப்ளீஸ்..

உன் புன்னகை ஈர்ப்பில்
புவி ஈர்ப்பும் கூட தோற்றதடி..

உன் நட்பின் சிரிப்பொலியில்
நாடி நரம்பெல்லாம் உயிர்க்குதடி..
ஸ்மைல் ப்ளீஸ்..

K.கிருஷ்ணமூர்த்தி

உயிர்..!!!

ஞாபகங்களை துலக்கி
கடந்த காலத்தை கசக்கி
உயிரை உருக்கி
உனக்காய் எழுதினேன்..
காதல் மடல்..

என்
எதிர்பார்ப்புக்கள்
இறக்கும் வேலையில்
பதில் வந்தது..
ஒரே ஒரு வரியில்..

“என்னை மறந்துவிடு!”

மீண்டும்
இறுதியாக ஒருமுறை..
உயிரை உனக்காய் அனுப்புகின்றேன்..
இப்படிக்குஉடல்..!

-K.கிருஷ்ணமூர்த்தி
(காதல் தோல்வியினால் தற்கொலை செய்த ஒரு இளைஞனின் இறங்கல் செய்தியை படித்து விட்டு, எழுதிய கவிதை)

சிகரெட்.. !!


ஒப்புக்கொள்கிறேன்..
பழிவாங்குவதில்
எங்களையும் மிஞ்சிவிட்டாய் நீ..!

உனக்கு
கொள்ளி இட்டவர்களை
சித்ரவதை செய்து
சாகடிக்கிறாயே..

ஒப்புக்கொள்கிறேன்..
பழிவாங்குவதில்
எங்களையும் மிஞ்சிவிட்டாய் நீ..

உன்
உயிரை உறிஞ்சியவர்களுக்கு
இருமலை பரிசலிக்கிறாய்..

உன்
தீய்ந்த உடலை
காலால் மிதித்தவனுக்கு
‘கான்சரை ‘ தருகிறாய்..

உன்னை
முத்தமிட்டவன் உதடுகளை
காய்ந்த சகாராவாக்குகிறாய்..

பாஞ்சாலியாக்கி
பகிர்ந்து கொண்டவன் கதையை
சத்தமில்லாமல் முடித்து வைக்கிறாய்..

ஒப்புக்கொள்கிறேன்..
பழிவாங்குவதில்
எங்களையும் மிஞ்சிவிட்டாய் நீ.. !!!

-கிருஷ்ணமூர்த்தி

கடல்

இங்கே,
நெடுஞ்சாலைகள் இல்லை..
வாகன நெரிசலும் இல்லை..

இங்கே,
சமிக்ஞை விளக்குகள் இல்லை..
விபத்துக்கள் நிகழ்வதும் இல்லை..

இயற்கை நிஜம்..
செயற்கை பொய்!!

-கிருஷ்ணமூர்த்தி
(இந்த கவிதை, மலேசியாவின் தியோமான் தீவில், ஆழ் கடலில் மீன்களை இரசித்துக் கொண்டிருந்தபோது என் மனதில் தோன்றியது)

நூல் வெளியீடு

இங்கே,
விற்பனை..
விளம்பரங்களுக்குத்தான்..
பாவம் புத்தகங்கள்..!!!

-கிருஷ்ணமூர்த்தி

வண்ணத்துப்பூச்சி!


ஓவியங்களை
ஒட்டிக்கொண்டு
ஒரு உயிர் பட படக்கிறது!

சுதந்திரம்,
உன்னிடம் நாங்கள்
கற்றுக் கொண்டது..

சுறுசுறுப்பு..
உன்னிடம் நாங்கள்
கற்க மறந்தது!

வண்ணத்துப்பூச்சி!

-கிருஷ்ணமூர்த்தி

வெளியே வா...

வெளியே வா...
இங்கே,
இடியும் மழையும்
வெயிலும் புயலும்
இருட்டும் பகலும் இயற்கை..
வெளியே வா...

இங்கே,
வழி நெடுக முட்கள்..
உன் பாதங்களை
இட்றி விடும் கற்கள்..
இதயத்தை இரணமாக்கும்
எதிரிகளின் சொற்கள்..
இருந்தாலும் பரவாயில்லை..
வெளியே வா..!

சஞ்சிக்கூலிகளாய் வந்தோம்..
இன்னமும்
மாதக் கூலிகளாய்..

நீ கேட்கும் முன்னூரு
முழுசாய் கிடைக்கும் போது
உன்,
கண்ணீர் கூட வற்றிப் போயிருக்கும்..!
வெளியே வா..!

இங்கே..
பிழைக்க வந்த இந்தோனீசியனும்
இரண்டாயிரம் பெறுகிறான்..

பிறப்புரிமை கொண்ட உனக்கு மட்டும்
வேற்றும் முன்னூறு!!!

இருபது இருபது இலட்சியம்
உனக்கு மட்டும்
விதிவிலக்கா என்ன?
வெளியே வா..!!!

இனியும்,
தொலைத்து விட்ட வாழ்க்கையை
தோட்டத்திலேயே தேடிக்கொண்டிருக்காதே..!

பட்டணத்தில்
எலிகள் கூட பருத்து இருக்கின்றன..

புலியென நீ வந்தால்..
புவியே உனதாகும்!
தோல்விகளை
தோட்டத்திலேயே விட்டு விட்டு
வெற்றிக் கனிகளைபறிக்க
வெளியே வா..

ஒன்று மட்டும் உறுதி!

இன்று,
உனக்கு கிட்டாவிட்டாலும்
உன் பிள்ளைக்காவது கிட்டும் - வெற்றி..
நினைவில் கொள்!!!

-கிருஷ்ணமூர்த்தி

ரோஜா

ரோஜாவே..
உன் கவர்ச்சியை
காவல் காத்திட
முட்கள் எனும் ஆயுதத்தால்
வேலி போட்ட இறைவன்..

உன்
வாசத்தை மட்டும்
பூட்டி வைக்க மறந்து விட்டானே?!

உன் சின்ன இதழ்களுக்கு
சிகப்புச்சாயம் பூசியது யார்?!

உங்கள் இதழ்கள் மட்டுமே
அதிகார ஆண்களை எதிர்த்து
எதுவுமே பேசுவதில்லை..!

ஓ..
அதனால்தான்..
காதல் பரிசாய்
உங்களைத் தருகிறார்களோ?!

வாடிவிட்டாலும்
வீடுகளை அலாங்கரிக்கும்
ஒரே பூவினம் நீதானடி!

முட்களின் மத்தியில் இருந்தாலும்..
சிரித்துக்கொண்டே இருக்கிறாயே..?

அந்த வித்தையை உங்களிடம்
நாங்கள்
கட்டாயம் கற்க வேண்டும்..!

-கிருஷ்ணமூர்த்தி

தீபாவளி

இன்று..
தீபங்களின் திருவிழா...
வெளிச்சத்தின் வெற்றி விழா..

ஆம்..
இன்று தீபாவளி...!

தீபாவளி என்ன..
உயிர்வதை செய்தவனுக்காய்,
ஆண்டுக்கொருமுறை கொண்டாடும்
கோலாகல நினைவாஞ்சலியா?!

பாவி,
அவன் பாவம் தொலைய
பாக்கெட் காலியாக
நாம் தரும் பண்பாட்டு லஞ்சமா?!

அரக்கன் அழிந்தாலும்,
அவன் குணம் மட்டும் இங்கே..
இன்னும்
பாட்டில்களிலும் அரிவாள்களிலும் பத்திரமாக..

இருக்கும் காசையெல்லாம்
வாரி இரைத்து விட்டு
வயிற்றில் ஈரத்துணி கடைசியாக..

ஒழிந்தது ஒரு நரகாசுரன்..
இங்கே,
தினம் தினம் பிரசவம்
புதுப்புது நரகாசுரர்கள்.. !

வித வித இனிப்புகள்
பலவித பண்டாங்கள்
இறைச்சி
எல்லாம் உண்டு வாங்க வாங்க..

Diabetes, BP, கொலஸ்ட்ரோல்..
எல்லாம் இங்கே இலவசம்
வாங்கி போங்க..!!

இதுதான் தீபாவளியா?

இதற்காகவா?
இந்த அவலத்துக்காகவா
இத்தனை அலங்காரம்?!!

துவண்டிருந்த திரியை தூண்டிவிட்டு
பின் தீக்கிறையாக்குவதா தீபாவளி..?

இல்லை,
எரிவது உடம்பென்று தெரிந்தும்,
உலகுக்கு ஒளி தரும்
திரியின் தியாகத்தை போற்றுவதே தீபாவளி..!!!

கோடி தீபங்கள் சுடர் தந்தாலும்,
பகலில்,
சுடரின் சேவை செல்லாக் காசுதான்..!!

இனியாவது,
தீபாவளிக்கு
நல்லெண்ணெய் மட்டும்
தேய்ப்பதை விட்டுவிட்டு
நல்ல எண்ணங்களை தேய்த்துக்கொள்வோம்..

திரியை மட்டும் எரிப்பதை விட்டுவிட்டு
உள்ளொளியை ஏற்றிக் கொள்வோம்!

-K.கிருஷ்ணமூர்த்தி

ஆண்டவன்

இறந்த கால அரசனை
‘ஆண்டவனாக’
ஆராதிக்கிறார்கள் ஆத்திகர்கள்..

நிகழ்கால
நிஜங்களுக்காக
நியாயம் கேட்கும..
நான் மட்டும் நாத்திகனாம்..!

அந்த..
இறந்தகால
‘ஆண்டவன்’ அடியில்
அர்ச்சனைப் பூக்களாவதை விட..

நிகழ்கால நதிக்கரையில்
நாணலாவதையே
விரும்புகிறேன் நான்..!

-கிருஷ்ணமூர்த்தி

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs