Showing posts with label அத்வைத தாம்பத்யம். Show all posts
Showing posts with label அத்வைத தாம்பத்யம். Show all posts

Tuesday, November 30, 2010

அத்வைத தாம்பத்யம் (9)

அத்வைத தாம்பத்யம்
பக்தி யோகம் 9

தொடர் தவம் செய்த
துறவிகள் இருவர்..

இறைவனை அடைய விரும்பும்
இதயங்கள் இரண்டு..

சமுதாயச் சாக்கடையை
சுத்திகரிக்க நினைக்கும்
சிந்தனையாளர் இருவர்..

அரசியல்வாதிகளால் அவதிப்படும்
சாதாரன தமிழர்கள் இருவர்..

சாவகாசமாக சந்திந்தால்
என்ன பேசுவார்களோ
அதைத்தான்...
எட்டு மணி நேரம் பேசினோம்..!

கடவுள் இருக்கிறாரா?
கடவுள் யார்??
சனாதன தர்மமா? இந்து மதமா?
எம்மதமும் சம்மதமா?

மதம் எனும் மதம் பிடித்த
'மனிதர்களை'
என்ன செய்வது?
ஒரு தனி மனிதனின் கடமைகள் என்ன?

அற்ப அரசியல் இலாபத்துக்காக
சமுதாயத்தின் தன்மானத்தை
கதற கதற கற்பழிக்கும்
'தலை'வர்களை என்ன செய்யலாம்?

அரசியல் கட்சியே இல்லாமல்
சிங்கப்பூர் தமிழர்கள்
சிறப்பாக இருக்கின்றன்ரே?
அதெப்படி??

இப்படி..
இன்னும் என்னென்னவோ
பேசினோம்..

உள்ளத்தில்
காதல் பூத்திருந்தாலும்
உதட்டில் உணர்ச்சிகள்
கொளுந்து விட்டு எரிந்து
கொண்டிருந்தாலும்..

இரத்தம் கொஞ்சம் கொஞ்சமாய்
சூடாகி
சுட்டுக்கொண்டிருந்தாலும்..

எட்டு மணி நேரம்
எதார்த்தமாகத்தான்
பேசிக்கொண்டிருந்தோம்..!

இடையே
திடீரென்று ஒரு கேள்வி கேட்டாள்..
என் சீதாலட்சுமி..!

ஆம் அவளின்
முழு பெயர் சொல்லி அழைப்பதில்தான்
அலாதிப் பிரியம் எனக்கு!

"விதி என்றால் என்ன?
விதியை மதியால் வெல்ல முடியுமா?"

அவளை உற்று நோக்கினேன்..

"நிறைய பேருகிட்டே கேட்டுவிட்டேன்..
திருப்தியான பதில் கிடைக்கலை
.."

காயத்ரீ தந்து
மந்திரங்களை குருக்கிய
விசுவாமித்திரனே..

ஆங்கிலேயனுக்கும்
சன்மதத்தை மொழிபெயர்த்த
விவேகானந்தனே..

மனிதகுல மயக்கத்தை போக்க
மகா மந்திரங்களை தந்த
திருமூலக் கடவுளே..!

இரண்டே அடிகளில்
இயற்கையை விளக்கிய
திருவள்ளுவரே..!

எங்கே போய்விட்டீர்கள் எல்லோரும்..
ஏன் எனக்கு இந்த சோதனை..?!
தேவைதானா எனக்கு இந்த வேதனை..???

ஆயிரம் கேள்விகள் உள்ளுக்குள்
அலையாய் பாய்ந்தாலும்..
அவளின் கேள்விக்கு
அவளுக்கு புரியும் வண்ணம்..
பதில் சொல்ல வேண்டிய
கடமை இருப்பதை உணர்ந்தேன்..
காதலுக்கு உரமிட.. !!!

-K.கிருஷ்ணமூர்த்தி

(அந்த கேள்விக்கு எனது பதில் அடுத்த அத்தியாயத்தில்)


Saturday, August 14, 2010

அத்வைத தாம்பத்யம் (8)

பக்தி யோகம் 8

எட்டு மணி நேரம்
என்ன பேசினோம்?

காதல் பற்றிய
கலந்துரையாடலா?

புதிய படம் பற்றிய
புலம்பலா?

நண்பர்கள் பற்றிய
நையாண்டியா?

இல்லை
கல்வியின் மேல் கொண்ட
கரிசனமா?

அவளின் அழகை மெச்சும்
அபிஷேகமா?
அவளின் குரலை மெச்சும்
கொஞ்சலா?

அவளின் உடையை மெச்சும்
உளரலா?

இல்லை
உணர்ச்சிகளின் கொச்சை
கிளர்ச்சியா?

எதுவுமே இல்லை..!

எட்டு மணி நேரம்
அப்படி
என்னதான் பேசினோம்?

           - பதில், அடுத்த இடுகையில்
              K.கிருஷ்ணமூர்த்தி

Sunday, May 9, 2010

அத்வைத தாம்பத்யம் (7)

பக்தி யோகம் 7

நூலக நிசப்தத்தின் நடுவே..

எழுதிக் கொடுத்த
'வாழ்க்கை'யை
எழுத்துக் கூட்டிப்
படித்துக்கொண்டிருந்தாள்..

பல்கலைக்கழகத்தில்
எத்தனையோ
ஆங்கிலப் புத்தகங்களில்
ஆங்கில வார்த்தைகளை
தமிழ்ப் படுத்தி படித்திருக்கிறேன்..

அன்றுதான்..

தமிழ் வார்த்தைகளை
ஆங்கிலப் படுத்தி
படிக்கவும் ஆளிருக்கிறதென்று
பெருமிதம் அடைந்தேன்..!

அதற்கு மேலும்
எட்டி நின்று பார்க்காமல்
அருகில் சென்றேன்..

நாணம்..

அந்த ஒரு சொல்லின்
சுயரூபம்
அன்றுதான் முழுதாய்
விளங்கியது!

புன்னகை பூக்கும்
அவள்
அழகு அதரங்கள்
தொட்டாற் சிணுங்கி போல
சுருங்கிக் கொண்டன..

தமிழ் தெரியாமல்
தவித்த கவிதைக்கு
என் கவிதையை
நானே மொழி பெயர்த்தேன்..
நின்று கொண்டே..

கவிதை பேசியது..
"உட்காருங்களேன்.."

"நான் உட்கார்ந்தா
ரெண்டு மணி நேரம்
என்கூட பேசனும்..
முடியுமா..??"

சரி என்று புன்னகை
பதிலளித்தாள்..

அன்று
எங்கள் அளவளாவல்
எட்டு மணி நேரம்
நீடித்தது..!!!

-அளவல் தொடரும்..
K.கிருஷ்ணமூர்த்தி

Tuesday, March 16, 2010

அத்வைத தாம்பத்யம் (6)

பக்தி யோகம்
பகுதி 6

பல்கலைக்கழக
பொங்கல் இதழில்
பிரசுரமான
என்
கவிதை
“தமிழைப் புறக்கணிக்கும்
தலைமைத்துவம்..”

கேத்தரின்
அதைப்படிக்க
கேட்டு நெகிழ்ந்திருக்கிறாள்
சீதா..

“ரொம்ப நல்லா இருந்திச்சி”
அவள் சொன்ன
அந்த மூன்று வார்தைகளில்
சாகித்திய அகாடமி
பெற்றேன்..!

“எனக்கும் ஒரு கவிதை எழுதுவிங்களா?”

“காத்திருக்கிறேன்”
என்று
உள்ளூர சொல்ல நினைத்தாலும்
அமைதியாக கேட்டேன்..
“எதைப் பத்தி எழுத?”

“வாழ்க்கை..”

காதலை கேட்பாள்..
அல்லது
இயற்கையை கேட்பாள்
என்றெல்லாம் எண்ணிய
எனக்கு..

வாழ்க்கையை
அவள் கவிதையாக கேட்டது
ஆச்சர்யம் அளித்தது..

“நாளைக்குத் தர்றேன்..”
என்றேன் அமைதியாக..

ஒரு நாளில் எழுதுவது
சாத்தியமா
என்று வியந்தாள்..

இப்படி ஒருத்திக்கு
கவிதை எழுதிக் கொடுக்க..
ஒரு நாள் தேவையா?
கவிதை உலகம் பழிக்குமே
என்று
வருந்தியது
அவளுக்கு தெரிய ஞாயமில்லை..!

அன்றைய
அலுவல்களை
அப்படியே விட்டுவிட்டு
‘வாழ்க்கையை’ வடிக்கத்
தொடங்கினேன்..

சில மணி நேரங்களில்
‘வாழ்க்கை’
காகிதத்தில் கனிந்து நின்றது!

*****
இன்னமும் விடியவில்லை..
விழிகளில் துளியும்
உறக்கமுமில்லை..

சூரியக் கிரணங்கள்
பூமியைத் தொடும் முன்னே
என் கால்கள்
நூலகத்தை தொட்டுவிட்டன..

இளஞ்சூரியனின்
சிகப்புச் சிதறல்கள் நடுவே
வானவில்லை அணிந்த
அதே நிலவு
நெருங்கி வந்தது..

என்ன அழகு..
தென்குமரி சூரியோதயம்
தோற்றுவிடும்!

புன்னகை கூட
பேரின்பம் என்று
அன்றுதான் உணர்ந்தேன்..

அந்த புன்னகையின்
விலையாக
கைகளில் கொண்டுவந்த
என்
‘வாழ்க்கையை’
அவளிடம்
அன்றே கொடுத்துவிட்டேன்..!

-‘வாழ்க்கை’ தொடரும்
-K.கிருஷ்ணமூர்த்தி

(இந்த கவிதையில் காணப்படும் கவிதைகள், “தமிழைப் புறக்கணிக்கும் தலைமைத்துவம்”, “வாழ்க்கை” ஆகிய இரண்டு கவிதைகளும் எனது வலைப்பூவில் இருக்கின்றன.)

Friday, November 27, 2009

அத்வைத தாம்பத்யம் (5)

பக்தி யோகம்
பகுதி 5

‘நிலவின்’ நினைவுகளோடும்
நிஜங்களின் கனவுகளோடும்
நகர்ந்த
அந்த இரவுகளில்
நித்திரை நிர்மூலமாகிவிட்டது
நிரந்தரமாக..!

“யாரவள்??
ஏன் என்னிடம் முகம் சுளித்தாள்..??”

எப்படி யோசித்தாலும்
முடிவு ஒன்றுதான்..
எப்படியாவது பேசிவிடவேண்டும்
அவளிடம்..!

இமைகள் இளைப்பாறும்
முன்னே
சேவல் கூவியது..
இரவு நிறம் மாறும்
முன்னே
ஆவல் மீறியது..!

விடிந்தும் விடியாத
பொழுதில்
வேட்டைக்குக் கிளம்பும்
நாய்போல..
அவள் நினைவுகளால்
வேகமாய் நடந்தேன்..
நூலகத்தைத் தேடி..

வகுப்புக்களுக்குச் செல்லாதது
வாடிக்கையாகி விட்டதால்..
அன்றும்
வாசற்படி தவம்..!

சிற்றுண்டியைக் கூட
மறந்துவிட்டு..
வார்த்தைகளை
செதுக்கிக் கொண்டிருந்தேன்..

அவளிடம்
என்ன பேசுவது..?

பேசுவாளா..?
இல்லை..
பேசாமல் ஏசுவாளா?
இல்லை..
கண்டும் காணாமல்
என்னைக் காயப்படுத்துவாளா..?

அன்றுவரை..
எந்த பெண்ணிடமும்
பேசியதில்லை நான்..
பேசிய பெண்களையும்
மதித்ததில்லை..!

இன்று மட்டும்,
அவளின் மொழி கேட்க
ஏன் இந்த தாகம்..?
அவளின் விழி நோக்க
ஏன் இந்த தாபம்..?

இளமையின்
இரத்ததின் வெப்பம்
உயிரைச்
சொட்டு சொட்டாய்ச்
சுடும் வலி உணர்ந்தேன்..
அந்த வலியில்
ஒருவித
சுகம் கண்டு வியந்தேன்..

அன்று முதல்
அந்த வலிக்காய்
தவம் கூட கிடந்தேன்..!
அதுதான்
காதல் வலி என்று
பின்னாளில் உணர்ந்தேன்..!!!

அதோ..
காத்திருந்த தாமரைக்கு
கதிரவனின் ஒளிபோல்
அவளின் வருகை..!

அருகே வந்தாள்..
முகத்தில்
வெறுப்புக்கு மாறாக
புன் முறுவல்..!

என்னைக் கண்டதும்
முகம் சுழிப்பாள்
என்று இருந்தேன்..
இதழோரம்
சிரிப்பைச் சிந்தி
என்னைச் சாகடித்தாள்..!

எதார்த்தமாய்ப் பேசி
என்னை
ஏகாந்த இனிமையில்
மூழ்கடித்தாள்..

ஒரு வார்த்தைப்
கூறுவாளோ என்றிருந்தேன்..
ஒரு
கோரிக்கையே வைத்தாள்..!!!

-அவளின் கோரிக்கை அடுத்த பகுதியில்

K.கிருஷ்ணமூர்த்தி

Friday, July 24, 2009

அத்வைத தாம்பத்யம் (4)

பக்தி யோகம்
பகுதி 4

அது ஒரு குளிர்காலம்..

வெள்ளைத் தாமரை
விண்ணில் மலர்ந்தது போல்..
வெள்ளி நிலவு..

அந்த
வெண்ணிலவின் பிம்பம்
பட்டுத் தெரிப்பதுபோல்..
மண்ணுலகில்
மானுட நிலவுகள்..
மங்கையர் வடிவினில்..

ஒரு
அலுவல் காரணமாய்
கேத்தரினுக்காய் காத்திருந்தோம்
நானும் நண்பன் ரமேஷும்..
ஏழாம் விடுதியில்..

அன்று வரை
கேத்தரின் மட்டும்தான்
எனது பெண்தோழி..

சொன்ன நேரத்தில்
கேத்தரினும் வந்தாள்..
அலுவல்
ஐந்து நிமிடங்களில்
முடிந்தாலும்
அரை மணி நேர அரட்டை..

அப்பொழுதுதான்..
அந்த அதிசயம் நிகழ்ந்தது!

வானத்தில்
ஆயிரம் நட்சத்திரங்கள்
மின்னினாலும்
நிலவு மட்டும் ஒன்றுதான்..

அந்த ஒரு நிலா
தன்னந்தனிமையில்
பூமியில்
உலா வந்தால்..??

நிலவுக்கு
முகம் மட்டுமே உண்டு..
இந்த நிலவுக்கு
முகமும் உண்டு..!

என் அதிர்ஷ்டம்..
அந்த நிலா
கேத்தரினுக்கு
பரிட்சயமான நிலா..!

“யாரது..?”

இன்னமும் நான் கேட்கவில்லை..

“அதுதான் சீதா..”
கேத்தரினின் மழலை..

இராமாயணத்தில்
கவிச்சக்ரவர்த்தி கம்பனின்
கற்பனையை
அன்று
நான் கண்ணெதிரே கண்டேன்..!

கேள்வி நாயகி கேத்தரினால்
எங்களின்
அறிமுகப் படலம்
ஆரம்பமானது..

அருகில் வந்த நிலா
பேசியது!

“ஹாய்..
ஐ எம் சீதாலட்சுமி..”

நண்பனை சாதரணமாக
பார்த்த அந்த நிலவு..
என்னைப் பார்த்ததும்
முகம் சுளித்தது..!

காரணம்..
வேறென்ன..? நான்தான்..
நிலாக்களை நகைப்பதுதானே
என்
பொழுது போக்கு..!

என் அருமை பெருமை எல்லாம்
அறிந்த நிலவு அது போலும்..!

“இவங்ககிட்ட பேசினிங்க..
உங்க வண்டவாளம் எல்லாம்
தண்டவாளத்தில் ஏறிடும்..!”

கேத்தரின் சீதாபுராணம் பாடினாள்..

சீதா ஜாதகம் பார்ப்பாளோ..?
ரமேஷ்
கையை நீட்டினான்..

“எனக்கு எப்படி இருக்கு பாருங்க..”

நிலா முகத்தில் ஒரு சலனம்..!

“கையெல்லாம் பார்க்க தெரியாது..
இராத்திரி ஆயிடுச்சி..”
இழுத்தாள்..

கரடி நான்தான்
என்று
எனக்கே தோன்றியது..!

ஏமாற்றம்
எங்கள் இருவருக்கும்..

தடுமாற்றம்
நிலவுக்கு..

கண்ணெதிரே
நிலவு வந்தும்..
அன்று
எனக்கு மட்டும் அமாவாசை..!!

===> அறிமுகப் படலம் தொடரும்..

Friday, July 10, 2009

அத்வைத தாம்பத்யம் (3)

பக்தி யோகம்
பகுதி 3


கேத்தரின்..

என் காதல் அத்தியாயத்தின்
ஆணிவேர்!

பெண்களைக் கண்டு
பொழுதுபோக்கியவனை
பழுது பார்த்தவள்..

என்னைத் தன்னிடம்
பேச வைத்தவள்..
என்னோடு பேசியவள்..

எனக்கு என்னை
அடையாளம் காட்டியவள்..
ஆம்..
என்னவளை எனக்கு
அடையாளம் காட்டியவள்..!

கேத்தரின்..

வெள்ளை மனம்
பிள்ளை குணம்..
நிமிடத்திற்கு மூன்று
கேள்விகள் கேட்கும்
தொல்லை-ரணம்..!

எப்படி
தமிழையும் இனிமையையும்
பிரிக்க முடியாதோ..
அப்படித்தான்..
கேத்தரினும் கேள்வியும்..!

மும்பை எக்ஸ்பிரஸ்
படத்தில்
தூங்கிவிட்டு..
கிளைமாக்ஸில்..
"என்ன ஆச்சு..?"
"இவன் எப்படி இங்க?"
"ஐயோ.. இது யாருலா..?"
இது..
தொல்லையில்லாமல்
வேறென்ன..?

இருந்தாலும்..
வெள்ளை மனம்
பிள்ளை குணம்..
கேத்தரின்..

எனது
முதல் பைக்கை..
இரவல் வாங்கி..
பழுதாக்கி..
பாதையிலே விட்டு வந்ததும்..

சுப்பு லட்சுமி சொல் கேட்டு
என்
பெரு விரல் நகத்தை
படார் என்று உடைத்ததும்..

பரிமளாவின் காரில்
பக்கத்து பல்கலைக்கழகம் சென்றதும்..
பின்னால் மட்டுமன்றி..
புகை
நான்கு புறத்திலும் வர..
ரேடியேட்டரைப் பார்க்கச் சொன்னால்
ரேடியோவைப் பார்த்ததும்..!

இறுதியில்..
'hand brake'-ஐ
எடுக்காமல் ஓட்டியதால்
எழுந்த புகை அது என்று
என்னிடம் மட்டும் சொன்னதும்..!

அப்பப்பப்பா..!
எல்லா கலைகளும்
அறிந்தவள் கேத்தரின்..!

என் காதல் அத்தியாயத்தின்
ஆணிவேர்!

எனக்கு 'என்னை'
அடையாளம் காட்டியவள்..


===> அடையாளம் காட்டிய கதை அடுத்த பகுதியில்..

Wednesday, July 8, 2009

அத்வைத தாம்பத்யம் (2)

பக்தி யோகம்
பகுதி 2

பெண்களுடன்
பேசுவதில்லை..
பெண்களை
பேசாமலும் இருந்ததில்லை..!

புத்தனுக்கு
ஒரு
போதிமரம்..

எனக்கு
புத்தகசாலையின்
வாசலில் இருந்த
படிக்கட்டுகள்..!

எனக்கு
பின்னாளில்
கவிதை வந்ததும் அங்குதான்
காதல் வந்ததும் அங்குதான்..!!

படிக்கட்டுகளில் அமர்ந்து
பெண்களின்
உடற்கட்டுகளை
அளவெடுத்ததும் அங்கேதான்..

நட்புப் படிகளில்
ஏறி..
வாழ்க்கையின்
பாடத்தைக் கற்றதும்
அங்கேதான்..!!!

நண்பர்கள்
எனக்கு இட்ட பெயர்
'குருஜீ'

எத்தனையோ கேலிகள்..
எத்தனையோ கிண்டல்கள்..

இருந்தாலும்
பெண்களிடம் மட்டும்
பேசுவதில்லை..!

உடன் படித்த
சுப்பு லட்சுமி..
ஆங்கிலத்தில் ஏதோ கேட்க
மருபடியும்
மௌன சாமியாராய்
நான்..!

பேசாததால்
பெண்களிடம் கிடைத்த
பட்டம்..
'கெட்டவன்'..!

ஏண்டா..
பேசித் தொலையேன்..!

நண்பர்கள் திட்டல்..!

"அட போடா..
பெண்கள் நிலா மாதிரி..
தூரத்தில் மட்டும்தான் அழகு!
அருகே சென்றால்
அத்தனையும் அவஸ்தை!"

இது
அவர்களுக்கு நான் சொன்ன
பதிலா..
இல்லை..
எனக்கு நானே சொல்லிக்கொண்ட
பதில்..!
பொய்யான பதில்..!!!

===> மௌனம் தொடரும்..

Monday, July 6, 2009

அத்வைத தாம்பத்யம் (1)

(இது முற்றிலும் உண்மைச் சம்பவங்களைக் கொண்ட வரலாற்றுப் பூர்வமான எனது காதல் கதை. இது யாரையும் புண்படுத்தவோ, கேலி செய்யவோ எழுதப்பட்டது அல்ல.)

பக்தி யோகம்..
பகுதி 1


அவள்
அவன்
அவள்..!

அவன்
அவள்
அவன்..!

அத்வைத தாம்பத்யம்!

அவள் நானாகி
நான் அவளாகி
ஓருயிராய்
ஒருமித்து இருக்கிறோம்..

இறையோடு கலந்து
இறையாகினால்
அத்வைதம்..

என்னோடு கலந்து
நானாகிளாள்..
அத்வைத தாம்பத்யம்!

*

அது ஒரு கனாக்காலம்..
இளமை இரத்தத்தைப்
பரிசோதித்துப் பார்த்த
விழாக்காலம்..!

மலேசிய புத்ரா பல்கலைக்கழகம்
1995
மூன்றாம் ஆண்டில்
நான்..
முதல் ஆண்டில்
அவள்..

பெண்களிடம் பேசாதவன்
நான்..
ஆங்கிலத்தில் அவ்வளவாக
பரீட்சயம் இல்லாததால்..
பெண்களிடம் பேசாதவன்
நான்..!

அதென்ன,
பல்கலைக்கழக பெண்கள்
தாய்மொழிக்கு
தடை விதித்து விட்டனரா?!

வரட்டுக் கோபம்...

என்ன கஷ்டம்..?
பேசப் பேசப் பழகிவிடும்..
எனது அருமை சீனியர்..
திரு!

அது சரி..
தவறாக பேசிவிட்டால்?!

ஆண்களாவது பரவாயில்லை,
பெண்களிடம் இரகசியம் தங்காதே!

எதற்கு வம்பு!
பெண்களிடம்
பேசுவதில்லை..
விட்டது தொல்லை...!

===> தொடரும்..

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs