Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Monday, June 20, 2011

இளமையின் தொல்லை...!

உன்,
உதடுகளின் ஊடே
உயிரை உறிஞ்சிய
அந்த சில
உன்னத நிமிடங்கள்...

என்,
விரகக் கரங்களில்
கனிந்த மார்போடு
நீ..
அயர்ந்திருந்த
அந்த ஒரு சில
நிஜத்தின் நிமிடங்கள்...!

என் காதருகே..
உன் ஏகாந்த
மென் குரலால்
கவி பாடிய..
அந்த ஒரு சில
நொடிப் பொழுதின்
நகல்கள்..


இன்னமும்
என்
இதய கேமராவில்...!

நீ ஒரு புதுக்கவிதை..
மரபிலிருந்து
சற்றே மாறுபட்டதால்..!
உன்
நிரந்தர இரசிகன் நான்..!

வெறுத்து விடாதே
கண்மணி
என் விரல்களை
மட்டும்..

துடிப்பான
விரல்கள் அவை..
எல்லைகளை
எல்லை மீறி தாண்டினாலும்..
உணர்ச்சிகளை
உன் ஒத்துழைப்போடு தூண்டினாலும்..
ஒரு போதும்
வெறுத்து விடாதே என்
விரல்களை மட்டும்...!

உணர்ச்சிகளை தூண்டவும்
அதே விரல்கள்தான்
உணர்வற்ற
உடலை எரிக்கவும்
அதே விரல்கள் தான்..!

கத்திருக்கிறேன் கண்மணி..
உன் ஏகாந்த இளமையை..
என்னுள் இணைத்துவிட
துடிக்கிறேன் கண்மணி..!

உன்
இளமையின் கதகதப்பில்..
இதயத்தின் படபடப்பில்..
உணர்ச்சிகளின் படையெடுப்பில்..
உள்ளத் தவிப்புகளின் விடையளிப்பில்..
உறவாடும் அந்த
உன்னத நாளை எதிர்பார்த்து..
காத்திருப்பேன் கண்மணி..!

அவசரமில்லை..
அமைதியுமில்லை..!

அந்த இன்பத்தில்
நீ முகிழ்ப்பதை..
துடிப்பதை..
உணர்வுகளின் உச்சத்தில்
நீ வெடிப்பதை..
ஒரு கணம்..
பார்த்து இரசிக்க வேண்டும்..

காத்திருப்பேன் கண்மணி..!

இது அவசரமில்லை..
இளமையின் தொல்லை..!
என்ன செய்வது..
இனிமேல்
ஆவலைச் சொல்ல
வார்த்தையும் இல்லை...!!!


- K .கிருஷ்ணமூர்த்தி

Wednesday, February 16, 2011

காதல்


காதல்

மனிதனை
பதப்படுத்தும்
பண்படுத்தும்
புண்படுத்தாது..

அது
மனித நேயத்தை
பலப்படுத்தும்
இதப்படுத்தும்..
இடர் படுத்தாது..!

ஆண்பால் பெண்பால்
கலப்பதா காதல்?
அன்பால் இருபால்
இணைவதே காதல்!

வன்முறை களையும்
காதல்
வேறுபாட்டை வெறுக்கும்
காதல்..!
கடவுளையும் வெல்லும்
காதல்..
அந்த காதலை வென்றார்
யாரோ?!

-K.கிருஷ்ணமூர்த்தி

Wednesday, December 22, 2010

சொல்லடி சிநேகிதி..


சொல்லடி சிநேகிதி..

உன் உதடுகள்
என்ன..
சிக்கி முக்கி கற்களா?
ஒன்றை ஒன்று உரசுகையில்
உள்ளுக்குள் தீப்பிடிக்கின்றதே!

நீ..
மெதுவாய் புன்னகை செய்தாலும்
என் இருதயம் என்னவோ
எட்டு மடங்காய் துடிக்கிறது..

என்
வியாதியும் நீ
மருந்தும் நீ..

உன்
உதட்டு முத்தமும்..
உணர்வின் மொத்தமும்..
சிரிப்பின் சத்தமும்..
சில்மிஷம் தரும் பித்தமும் தானடி
என் மருந்துச் சீட்டு!
அதை
உன் நிலைக்கண்ணாடியில்
எழுதி மாட்டு!!!

மெல்லிசைப் பூவே..

உன் இமைகள் அசைந்தால்
என்னுள் வயலின்
மோகனம் இசைக்கிறது...

உன் இதழ்கள் நெளிந்தால்
என்னுள் புல்லாங்குழல்
டிஜிட்டலில் கேட்கிறது..

உன் சிணுங்கள் மட்டும்
என்ன ராகம்..?
புரியவே இல்லை!

சிரிப்பழகி என்று சொன்னேன்...
சிரித்துக் கொண்டே இருக்கிறாள்..!
சரி சரி..
சிரிக்காவிட்டாலும் நீ
அழகுதான்..
சிரிப்பு நிற்பதாயில்லை!!!

தூரிகைப் பெண்ணே..

உன் விரல்களின் தீண்டல்..
என்னுள்
விழுதுகளாக..

உன் இதழ்களை தின்னும்
எண்ணம்
விரதங்களாக..

என் தமிழ்ப் பசிக்கு
தீனியே நீதானடி!

சொல்லடி சிநேகிதி..

என்னள் இருக்கும்
எண்ணங்கள்
எழுத்துக்களாக..

உன்னள் இருக்கும்
உண்மைகள்..
என்றும் ஊமையாக..!

சொல்லடி சிநேகிதி..

புன்னகை மட்டுமே பதில் என்றால்
சங்கத் தமிழ் ஏதுக்கடீ?!

-கிருஷ்ணமுர்த்தி




Monday, June 15, 2009

அடியே பெண்ணே..


அடியே பெண்ணே..

என் ஆவி என்னவோ
உனை எண்ணியே வேகிறது..

என் தேவி என்னிடம்
வர வேண்டியே சாகிறது..

என் பாதி உயிர் இன்று,
நீ வரும் திசையில்
வேர்க்கின்றது...

என் மீதி உயிர் மட்டும்,
உன் ஞாபக தென்றலில்
பூக்கின்றது..

என்று வருவாயோ பெண்ணே... ?
உயிரை என்று
திருப்பித் தருவாயோ கண்ணே..?!

மௌனம் கலைந்தேன்,
வார்த்தை இங்கில்லை?
மனதை திறந்தேன்..
தேவி நீ இல்லை..
சிறகை விரித்தேன்,
வானம் இங்கில்லை..
விறகாய் ஆனேன்..
நெருப்பும் இங்கில்லை..!!

என்று வருவாயோ பெண்ணே...?
என்னை என்று..
திருப்பித் தருவாயோ கண்ணே..?!

பார்வை கொண்டேன்,
காட்சி நீ இல்லை
பாதை கொண்டேன்,
பாவை நீ இல்லை..
தாகம் கொண்டேன்,
பருக நீ இல்லை..
மேகமானேன்..
துளிகள் என்னில் இல்லை..

என்று வருவாயோ பெண்ணே...?
எனக்கு என்ன
தருவாயோ கண்ணே...?!

K.கிருஷ்ணமூர்த்தி

Wednesday, March 4, 2009

வேறென்ன வேண்டும்..?!


நிலவே நீ பெண்ணாக வேண்டும்..
  • நட்சத்திரங்கள் கண்ணாக வேண்டும்..

இளவே னில்நீ நடந்துவர வேண்டும்..

  • இளமை சுகங்கள் கடந்துவர வேண்டும்..

மலரே!என நான்வியக்க வேண்டும்..

  • மனதில் வந்து மயக்க வேண்டும்..

நிலமே உன்னை ரசிக்க வேண்டும்..

  • நீஎன்னில் மட்டும் வசிக்க வேண்டும்..


கைவளை சத்தம் கேட்டிட வேண்டும்..

  • கனிந்த முகத்தில் விழித்திட வேண்டும்..

சைகையில் என்னை அழைத்திட வேண்டும்..

  • சிறுவன் என்னை குளிப்பிக்க வேண்டும்..

கைவிரல் கொண்டு துவட்டிட வேண்டும்..

  • காதில் காதல்கதை சொல்ல வேண்டும்..

மைவிழி மெல்ல மலர்ந்திட வேண்டும்..

  • மௌனம் கலைந்து சிரித்திட வேண்டும்..



தலைமுடி எண்ணிப் பார்க்க வேண்டும்..

  • தாமரை இதழ் சுவைத்திட வேண்டும்..

சிலைமேனி என் விரல்தீண்ட வேண்டும்..

  • சீலை களைய சினுங்கிட வேண்டும்..
கலைமான் கண்கள் கவிழ்ந்திட வேண்டும்..
  • காமன் கலைகள் பயின்றிட வேண்டும்..
களைப்பால் உன்மடி சாய்ந்திட வேண்டும்..

  • காலைப் பொழுதில் உறங்கிட வேண்டும்..

    -K.கிருஷ்ணமூர்த்தி

Wednesday, February 18, 2009

விலாசம் தேடும் விழுதுகள்...!

என்
பேனாவின் புலம்பல்களை
பரிசாய்க் கேட்கும்
பருவப் பெண்ணே..

உன்,
முதல் பார்வையிலேயே..
மயிலிறகாய் இருந்தவன்..
தென்னங் கீற்றானேன்..!!

சுதந்திர அருவியாய்ச்
சுற்றியவனை..
குளத்து நீராய்
கைது செய்ததன்
காரணம் என்ன..?

என் சுவாசத்தையே
எனக்கு
பரிசளித்த தேவதையே..

உன்,
சீற்றத்தையும்
சேர்த்துக்கொள்ள
ஆசைப்படும்
அகராதி நான்..!

***
நீ
சிணுங்கினாய்..
இல்லை..
தென்றலுக்கு
நீ விடும் தூது அது..!

நீ சிரித்தாய்..
இல்லை இல்லை..
மலர்களை மலர வைத்தாய்..!!

நீ முறைத்தாய்..
ம்ஹும்...
என் கவிதைக்கு
இலக்கணம் வகுத்தாய்..

நீ திட்டினாய்..
அதுவும் இல்லை..
என் தமிழுக்கே
உயிர் கொடுத்தாய்..!!!

இப்பொழுதெல்லாம்..
நீ இல்லாத கனவுகளை..
நான்,
கண்டுகொள்வதே இல்லை..!

பெண்ணே..

உன் மௌனங்களுக்கும்
உரை எழுத முடிந்த
எனக்கு...
உன் பேச்சின்
பொருள்காணும்
பொறுமை இல்லையே...!!!

அன்பே,

உன் செயல்களுக்கு
அர்த்தம் கூறும்
அகராதி
என்ன விலை..?

***
உன் நாணத்திற்கோர்
உவமை சொல்ல..
இப்பாரினில்
பொருளே இல்லையே...!

என் பெயரே
எனக்கு..
மறக்கும் வேளையில்
புனைப்பெயர் சூட்டினாய்..

இனியவளே..
உன் உதடுகள்
உச்சரிக்கும் பொழுதுதான்
என் பெயரின்
இனிமை புரிகிறது..!

வசந்தத்திலும் பூக்காத

என் தோட்டம்..
உன் வருகையால்
சட்டென்று பூக்கிறது..!!

உன் பெயரை
மந்திரமாய் ஜபிக்கும்
எனக்கு..
எழுதுவதற்கு மட்டும்
எண்ணமே இல்லை..

பேனா முள் கொண்டு
உன் பெயரைக் கூட காயப்படுத்த
என்றைக்குமே
எனக்கு உடன்பாடில்லை..!

உயிரே..
உன் சுவாசங்கள்
எனை
சுடும் நாள்
வரும் வரையில்
இனி நான்
சுவாசிக்கப் போவதுமில்லை..!!!

- K.கிருஷ்ணமூர்த்தி

(இன்றும் எனது காதலியாகவே இருக்கும் என் மனைவிக்கு நான் பல்கலைக்கழகத்தில் படிப்பதை மறந்து பிதற்றிய பிதறல்..)

Friday, February 13, 2009

பிப்ரவரி 14


இன்று..

ஊரெல்லாம் பௌர்ணமி..

எனக்கு மட்டும் அமாவாசை..!


இன்று மட்டும்

ஏனோ..

என் வார்த்தைகள்

வாக்கியமாவதை மறுக்கின்றன..


கருத்துக்கள்..

கவிதையாவதை வெறுக்கின்றன...!


பெண்ணே..


நெருப்பென்பதை அறிந்தும்

விட்டில் பூச்சிகள்

விளக்கைச் சுற்றுவது

வாழ்க்கையை வெறுப்பதால் அல்ல...


என்றாவது ஓர் நாள்..

அந்த நெருப்பும்

நீர் வார்க்கும்

என்ற நப்பாசையால்தான்..!!


***

இற்றுவிட்ட இதயத்தில்

இன்னும்

கொஞ்சம் வலுவிருக்கிறது..


காரணம்..

உன் நினைவு

இன்னும் அதில் இருக்கிறது..


மறந்துவிட முயற்சித்தேன்..

இறந்துவிடுவேன் என்பதால்

மறப்பதை மறந்துவிட்டேன்..!!!

***


காமம் கடந்து

காதல் சுமந்தேன்..

ஈமச் சடங்கின் விறகானேன்..


காதல் கடந்து

காமம் சுமந்தேன்..

வீசும் காற்றில் சறுகானேன்..!


பிறந்தது நிஜம்..

இறப்பதும் நிஜம்..

வாழ்க்கை மட்டும் மாயம் பெண்ணே..


உன்னை

நினைத்தது நிஜம்..

அனைத்தது நிஜம்..

காதல் மட்டும் காயம் கண்ணே..


-கிருஷ்ணமூர்த்தி


(நிச்சயமாக, இது என் கதை அல்ல.. நான் இன்னும் அறிந்திடாத ஒரு சுகம், காதல் தோல்வி.. அந்த வேதனையில் எழுந்த எண்ணங்களே இவை..)











Wednesday, February 11, 2009

நிலா

அது..
என் காதலி
முகம் பார்க்கும்
கண்ணாடி..

வானத்து
நிலைக்கண்ணாடியில்
அவள் முக பிம்பம்..

அவளுக்கு மட்டும்..
தேய்பிறை வயது..
வளர்பிறை இளமை..!

நிலா..

அது,
வெருச்சோடிய
இரவின் நெற்றியில்
இறைவன் இட்ட
திருநீர்த் திலகம்..

நிலா..
கடல் பெண்..
சினங்கொண்ட
சிகப்புச் சூரியனை விழுங்கி..
வெள்ளி நிலவாக
வானத்துக் கூரையில்
வீசிவிட்டாளோ??


-K.கிருஷ்ணமூர்த்தி












மனைவி

வானம்
வாடிக்கொண்டிருக்கும்
வைகறையில்
ஒளி
விளக்காவாள்..

காணக்
கிடைக்காத
காவியங்களுக்கு..
பெரும்
கடையாவாள்..

தோல்விகள்
தொங்கும்
தோள்களுக்கு
நல்
துணையாவாள்..

கேள்விகள்
கேட்டே
வாழ்க்கைக்கு..
ஒரு விடையாவாள்..!!

*
உறவோ துறவோ..
ஒருங்கே தருவாள்..
இறையை போல
ஐந்தொழில் புரிவாள்..

சிறையோ சிறகோ..
சிரிப்பால் அருள்வாள்..
நிறையோ குறையோ..
நிஜத்தை சொல்வாள்..!

- கிருஷ்ணமூர்த்தி



Thursday, February 5, 2009

தவளைகள்

மக்கள் தீர்ப்பே
மகேசன் தீர்ப்பு..

அதை
குறுக்கு வழியில்
மாற்றிட முயன்றால்..
இறுதியில் கிட்டும் ஆப்பு!

அரசியல் சகதியில்
தாவும் தவளைகள்..
கடைசியில் மூவரும்
வெறும் நீர்த்திவலைகள்..

தாவும் தலைவர்கள்
போயினர் சோரம்..
தரங்கெட்ட தலைவர்கள்
தரணிக்கு பாரம்...

கற்பை இழந்த
மூவரை மக்கள்
எளிதில் கண்டு கொள்வர்..

அடுத்த தேர்தலில்
இம்மூன்றும் சேர்ந்த
கூட்டணியை கண்டால் கொல்வர்..

மக்கள்..
கண்டாலே கொல்வர்!!

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு...!!!

-கிருஷ்ணமூர்த்தி

Sunday, February 1, 2009

உயிர்..!!!

ஞாபகங்களை துலக்கி
கடந்த காலத்தை கசக்கி
உயிரை உருக்கி
உனக்காய் எழுதினேன்..
காதல் மடல்..

என்
எதிர்பார்ப்புக்கள்
இறக்கும் வேலையில்
பதில் வந்தது..
ஒரே ஒரு வரியில்..

“என்னை மறந்துவிடு!”

மீண்டும்
இறுதியாக ஒருமுறை..
உயிரை உனக்காய் அனுப்புகின்றேன்..
இப்படிக்குஉடல்..!

-K.கிருஷ்ணமூர்த்தி
(காதல் தோல்வியினால் தற்கொலை செய்த ஒரு இளைஞனின் இறங்கல் செய்தியை படித்து விட்டு, எழுதிய கவிதை)

ரோஜா

ரோஜாவே..
உன் கவர்ச்சியை
காவல் காத்திட
முட்கள் எனும் ஆயுதத்தால்
வேலி போட்ட இறைவன்..

உன்
வாசத்தை மட்டும்
பூட்டி வைக்க மறந்து விட்டானே?!

உன் சின்ன இதழ்களுக்கு
சிகப்புச்சாயம் பூசியது யார்?!

உங்கள் இதழ்கள் மட்டுமே
அதிகார ஆண்களை எதிர்த்து
எதுவுமே பேசுவதில்லை..!

ஓ..
அதனால்தான்..
காதல் பரிசாய்
உங்களைத் தருகிறார்களோ?!

வாடிவிட்டாலும்
வீடுகளை அலாங்கரிக்கும்
ஒரே பூவினம் நீதானடி!

முட்களின் மத்தியில் இருந்தாலும்..
சிரித்துக்கொண்டே இருக்கிறாயே..?

அந்த வித்தையை உங்களிடம்
நாங்கள்
கட்டாயம் கற்க வேண்டும்..!

-கிருஷ்ணமூர்த்தி

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs