ஏ புத்தனே..உன்
சமாதானக் கொள்கைக்கு
இலங்கையில்
கொள்ளி வைத்துக்
கொண்டிருக்கிறார்களே..!
ஈழமே இன்று
இடுகாடாய்..
எங்கள் இனத்தவர்
அங்கே..
பலிகாடாய்..!
எங்கே உன்
சமாதானம்..?
எங்கே போனது
உன்
சாத்துவீகம்..?
*
பாலஸ்தீனத்தில்
ஐந்து பேர்
இறந்தால்
வையகமே அழுகிறது..
ஈராக்கில்
ஒரே ஒரு
குண்டு விழுந்தால்
அகிலமே அதிர்கிறது..!
இலங்கையில் மட்டும்
தவிப்பது
தமிழன் என்பதால்..
இறப்பது
என் இனம் என்பதால்..
தமிழக அரசு கூட,
மௌனமாய்..
மழுப்புகிறது..!
*
புத்தம் பேசும்
புண்ணிய பூமி
யுத்தக் காடாய்
எறிகிறது..
புத்த பிக்குகள்
யுத்த பிக்குகளாய்
எள்ளி நகைப்பது
சுடுகிறது..!
ஆயிரம் காரணம்
கூறிய போதிலும்
புத்தத்தில் கொலைக்கு
இடமுண்டோ..?
எங்கும்
அப்பாவி மக்களின்
அழுகுரல் ஓலங்கள்..
புத்தத்தில் எங்கேதான்
அன்புண்டோ..!
*
ஏ புத்தனே..இன்னும்
எத்தனை நாட்கள்
எங்களை
ஏமாற்றப் போகிறாய்..?
உன்,
புத்தம் சரணம் கச்சாமி..!
இன்று
யுத்தம் மரணம் கச்சாமி
ஆனது..
உன்,
தர்மம் சரணம் கச்சாமி..!
இன்று..
இரத்தம் இரணகளம் கச்சாமி
ஆனது..!!
இன்னும்
எத்தனை உயிர்கள்
இறந்திட வேண்டும் ..?
இன்னும்
எத்தனைக் காலம்
அழுகுரல் வேண்டும்..?
இந்த
யுத்த பிக்குகள்
கொலைவெறி தீர..
சொல்வாயா சித்தார்த்தா..?!!!
- K.கிருஷ்ணமூர்த்தி
