Showing posts with label சமயம். Show all posts
Showing posts with label சமயம். Show all posts

Tuesday, June 7, 2011

சுயநல ஒப்பாரி

இறந்த சடலத்திடம் எத்தனைக் கேள்விகள்? * கண் திறந்து பாரடா மகனே..! பத்து மாதம் சுமந்து பெற்றேன்.. ஈ கொசு அண்டாமல் இமைபோல் காத்தேன்.. ஊரே பழித்தாலும் உனக்காய் வாழ்ந்தேன்.. யாரும் இனி எனக்கில்லை.. மாதாவை தனியே விட்டு மாய்ந்தாயே மகனே?? சோறூட்டிய கைகளில் வாய்க்கரிசி பாலூட்டிய மார்பினில் செங்குருதி.. இந்த தள்ளாத வயதினில், தவிக்க விட்டுச் சென்றாயே.. கண் திறந்து பாரடா மகனே..! இது தாயில் அலறல்.. * காடு மனையெல்லாம் வித்தேன் கடன் வாங்கி படிக்க வைச்சேன்.. சேம நிதி கூட எடுத்து- உன் திருமணத்தை நடத்தி வைச்சேன்.. இப்படி திடுதிப்புன்னு செத்துப்போனா.. பட்ட கடனை எப்படி அடைப்பேன்!

ஐயா.. ராசா..! இப்படி திடுதிப்புன்னு செத்துப்போனா.. நான் பட்ட கடனை எப்படி அடைப்பேன்? பதில் சொல்லிப் போ மகனே..!! இது தந்தையின் புலம்பல்.. * பெத்தவங்க, கூடப் பொறந்தவங்க.. சாதி சனம் எல்லாரையும் மறந்து வந்தேன்.. நீ ஒருத்தனே கதியென்று உன்னோடு பறந்து வந்தேன்..!

வயித்தில வளரும் கரு ஆணா பெண்ணா அறியுமுன்னே.. என்னை நட்டாற்றில் விட்டுச் சென்றாயே..!

நரம்பில்லாத நாக்கு என் ராசியை குறை சொல்ல தாலியை பறித்துச் சென்றாயே!

ஏழு ஜன்மமும் கூட வருவேன்னு என் மேல சத்தியம் செய்த கை குப்புறக் கிடக்குதிங்கே ஐயோ..! என் குடிகெட்டு போயிருச்சே!

வாக்குறுதி தந்த வாயில வாக்கரிசி போட வைச்சு வாழ்வை தேடி வந்த எனக்கு விதவைச் சாயம் பூசியதென்ன?

ஐயோ..

இந்த கேள்விக்கும் உன் பதில்

மௌனம் தானா??!

இது மனைவியில் கதறல்..

* இறந்த சடலத்திடம் எத்தனைக் கேள்விகள்..? எத்தனை குற்றச்சாட்டுகள்..?? ஆவியாகிய ஆன்மாவிடம் எத்தனை புலம்பல்கள்?! எத்தனை பழிச்சொற்கள்..?!

சொர்க்கம் சேர வேண்டி ஒரு பக்கம் சாங்கியம் நடக்கிறது.. பதில் தர வேண்டி மறு பக்கம் ஒப்பாரி ஒலிக்கிறது..! சுயநல ஒப்பாரி ஒலிக்கிறது..!! * இறைவா.. உன்னிடம் ஒரு வேண்டுகோள்… இங்கு யாரும் பிரேதத்தைப் பார்த்து பெருமை பாடுவதில்லை..!

சுயநல மனிதர்கள் செத்த பிறகும் ஆன்மாவை விட்டு வைப்பதாயில்லை!

இங்கே, ஒப்பாரி பட்டியலில் ஆறுதல் வார்த்தையை விட ஆத்திரக் கேள்விகளே அதிகம்..!

ஆன்மாவின் வழியனுப்பலை விட அவரவர் வயிற்றெரிச்சலே அதிகம்..!!

கரணங்கள் இழந்துவிட்ட

ஆன்மாவிடம்..

காரணங்கள்..


இறைவா...

இவர்களுக்கு தெரியாமலே போகட்டும்

இந்த 

கதறல்கள் கேட்க

காதுகள் இல்லை ஆன்மாவிடம்!!!


-K.கிருஷ்ணமூர்த்தி

Saturday, February 7, 2009

தைப்பூசம்

தமிழனின்
தன்மானத்தின் வயது
ஓராண்டுதானாம்..!

மீண்டும்
இன்று பத்து மலையில்
மக்கள் வெள்ளம்
நிரம்பி வழிகிறதாம்..

நெஞ்சு பொறுக்குதில்லையே...

அன்று
அரசோடு ஒன்று சேர்ந்து
அப்பாவித் தமிழர்களை
அடித்தனர்..

காவல்துறையின்
கைப்பாவையாய்
கதையை திரித்து
கூறினர்..

நல்லபாம்பு
நடராசா தலைமையில்
நான்கு புகார்கள்
தந்தனர்..!

எல்லாம் இந்த
பாழாய்ப்போன
சமுதாயத்திற்கு எதிராக...

இருந்தாலும்..
இன்று பத்துமலையில்
பக்தர் கூட்டம்
அலையலையாய்!!!

அபாண்டம் சொன்ன
அத்தனை பேரும்..
இன்னும் தலைமை பீடத்தில்..

ஹிண்ட்ராஃப் அணியின்
பின்னால் சென்ற
தமிழர்கள் இன்னும்
தவணையில்!

நெஞ்சு பொறுக்குதில்லையே!

அன்று..
தமிழ்க் கடவுளின்
சன்னதியில்
தமிழர் கொடுமை..

கோவிலுக்குள்ளே
தன் இனத்தை பூட்டி..
காட்டிக் கொடுத்தான் ஒருவன்..
அவனே இன்னமும் தலைவன்!

ஆம்..
எட்டப்பன் எப்போதோ
அவன்
மூதாதையர் வீட்டில்
முழு 'விருந்து' சாப்பிட்டிருக்கிறான்
போலும்!!!

*
அன்று..
இதயம் இல்லா
காவல் துறையின்
காலால் மிதியுண்டோம்..

செவிகள் இல்லா
நீதித் துறையால்
இன்னல் பல கண்டோம்..

இருந்தும்..
தமிழனின் தன்மானம்
என்னவோ..
ஓராண்டு மட்டுமே!

மீண்டும் இன்று
பத்து மலையில்
பக்தர் கூட்டம்!

நெஞ்சு பொறுக்குதில்லையே!!!

-கிருஷ்ணமூர்த்தி

Sunday, February 1, 2009

தீபாவளி

இன்று..
தீபங்களின் திருவிழா...
வெளிச்சத்தின் வெற்றி விழா..

ஆம்..
இன்று தீபாவளி...!

தீபாவளி என்ன..
உயிர்வதை செய்தவனுக்காய்,
ஆண்டுக்கொருமுறை கொண்டாடும்
கோலாகல நினைவாஞ்சலியா?!

பாவி,
அவன் பாவம் தொலைய
பாக்கெட் காலியாக
நாம் தரும் பண்பாட்டு லஞ்சமா?!

அரக்கன் அழிந்தாலும்,
அவன் குணம் மட்டும் இங்கே..
இன்னும்
பாட்டில்களிலும் அரிவாள்களிலும் பத்திரமாக..

இருக்கும் காசையெல்லாம்
வாரி இரைத்து விட்டு
வயிற்றில் ஈரத்துணி கடைசியாக..

ஒழிந்தது ஒரு நரகாசுரன்..
இங்கே,
தினம் தினம் பிரசவம்
புதுப்புது நரகாசுரர்கள்.. !

வித வித இனிப்புகள்
பலவித பண்டாங்கள்
இறைச்சி
எல்லாம் உண்டு வாங்க வாங்க..

Diabetes, BP, கொலஸ்ட்ரோல்..
எல்லாம் இங்கே இலவசம்
வாங்கி போங்க..!!

இதுதான் தீபாவளியா?

இதற்காகவா?
இந்த அவலத்துக்காகவா
இத்தனை அலங்காரம்?!!

துவண்டிருந்த திரியை தூண்டிவிட்டு
பின் தீக்கிறையாக்குவதா தீபாவளி..?

இல்லை,
எரிவது உடம்பென்று தெரிந்தும்,
உலகுக்கு ஒளி தரும்
திரியின் தியாகத்தை போற்றுவதே தீபாவளி..!!!

கோடி தீபங்கள் சுடர் தந்தாலும்,
பகலில்,
சுடரின் சேவை செல்லாக் காசுதான்..!!

இனியாவது,
தீபாவளிக்கு
நல்லெண்ணெய் மட்டும்
தேய்ப்பதை விட்டுவிட்டு
நல்ல எண்ணங்களை தேய்த்துக்கொள்வோம்..

திரியை மட்டும் எரிப்பதை விட்டுவிட்டு
உள்ளொளியை ஏற்றிக் கொள்வோம்!

-K.கிருஷ்ணமூர்த்தி

ஆண்டவன்

இறந்த கால அரசனை
‘ஆண்டவனாக’
ஆராதிக்கிறார்கள் ஆத்திகர்கள்..

நிகழ்கால
நிஜங்களுக்காக
நியாயம் கேட்கும..
நான் மட்டும் நாத்திகனாம்..!

அந்த..
இறந்தகால
‘ஆண்டவன்’ அடியில்
அர்ச்சனைப் பூக்களாவதை விட..

நிகழ்கால நதிக்கரையில்
நாணலாவதையே
விரும்புகிறேன் நான்..!

-கிருஷ்ணமூர்த்தி

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs