Thursday, July 18, 2013

'வாலி'பமே.. வாழும் நின் புகழ்!














தமிழ்த் திரையின்
வாலிபமே..
உன்னையும்
வயோதிக மரணம்
தழுவிக் கொண்டதா?
 
பாவம்..
எத்தனை நாள்தான்
தனித்திருப்பாள்
அந்த தமிழ்த்தாய்..?
தன்
இளைய மகனை..
என்றும்
இளமை மாறா மகனை
இனிய மகனை..
 
 
இன்னும்
எத்தனை காலம்தான்
பிரிந்திருப்பாள்..
தமிழ்த் தாய்..?
அவளும் பெண்தானே..!
 
 
இரவலாக தந்தவள்
எடுத்துக்கொண்டாள்..
 
இருந்தாலும்
வயதை வென்று
வாழ்ந்த கவியின்
எழுத்துக்களும் எண்ணங்களும்
இன்னமும் எங்களுக்கே..!
 
என்றென்றும்..
வாழும் நின் புகழ்!

Thursday, June 6, 2013

அப்பா..

பல்லவி

 அன்புத் தந்தையே - என்

அன்புத் தந்தையே -என்

உள்ளம் உருகி நான்

நன்றி சொல்லுவேன்..

 

அன்புத் தந்தையே -என்

அன்புத் தந்தையே -உன்

உள்ளம் மகிழ அந்த

விண்ணை வெல்லுவேன்..

 

என் வெற்றியின் பாதை எல்லாம்

உன் வியர்வையின் மணித்துளிகள்..

என் வாழ்க்கையின் வாசலெங்கும்

உன் தியாகத்தின் எதிரொலிகள்..                      

 (அன்புத் தந்தையே

 

சரணம் 1

 உன்னால் உன்னால் இங்கு உயிர் சுமந்தேன்

உன்னால் உன்னால் நான் என்னை அறிந்தேன்..

இமைகளும் திறவாமல் பார்வையும் ஒன்றில்லை

உன் வழி செல்லாமல் நேர்வழி ஒன்றில்லை..

உனைவிட தொழுதிட தெய்வமும் வேறில்லை..   

(அன்புத் தந்தையே

 

சரணம் 2

அன்று ஓர்நாள் என்னை பணியச் செய்தாய்

பின்பு ஓர்நாள் என்னை நிமிரச் செய்தாய்...

நீ சொன்ன வார்த்தைகளே வாழ்க்கையின் தத்துவங்கள்..

நீ சொன்ன பாடங்களே இன்னும் என் சுவாசங்கள்..

எனக்கென வாழ்ந்திடும் தெய்வமும் நீதானே..       

                                                       (அன்புத் தந்தையே

 

அப்பாவுக்காக, K.கிருஷ்ணமூர்த்தி

 

தந்தையர் தினத்துக்காக நான் இயற்றிய உள்ளூர் பாடல் இது. ஒலி வடிவில் விரைவில் ஒளியேறும். இன்று என்னோடு இல்லாத என் தந்தைக்கும்.. பிள்ளைகளின் நலனுக்காக தன்னையே அற்பணிக்கும் எத்தனையோ தந்தையர்க்கும் இந்த பாடல் சமர்ப்பணம்!

Sunday, May 19, 2013

பிள்ளைப் பாசம்!

கருவில் தரித்தது..
ஆணா பெண்ணா?
கறுப்பா சிகப்பா?
வலியவனா எளியவனா?
ஆளப் பிறப்பவனா.. இல்லை
ஆட்டி வைக்க பிறப்பவனா..?
எதுவுமே தெரியாமல்
பாசம் வைக்கும் முதல் ஜீவன்
தாய் மட்டுமே!

 
உச்சந்தலையோ
உள்ளங்காலோ..
எது முதலில் வந்தாலும்..
குறைப்பிரவசவமோ
நிரைப்பிரசவமோ..
உயிரோடு பிறக்கிறதோ..
உடல் மட்டும் பிறக்கிறதோ..
எதுவுமே தெரியாமல்..
பிறக்கும் முன்னே
நெஞ்சினில் பாலோடு காத்திருக்கும்..
ஒரே ஜீவன்
தாய்தான்.!

 
அம்மா..
அது என்ன..?
இது என்ன..?
ஏன்..?
என்ன கேள்வி கேட்டாலும்..
எத்தனை முறை
கேட்டாலும்..
குழந்தைக்கு..
சலிக்காமல் பதில் சொல்லும்..
ஒரே உறவு
தாய்தான்..!

 
பிள்ளையின் பராமரிப்பில்
வயதான
ஒரு தாய்..
காருக்கு பின் இருக்கையில்
அமர்ந்து..

‘இது என்ன இடம்பா?’

‘சொன்னா உனக்கு
புரியாதும்மா!’

 
‘இப்போ எங்கே போறோம்?’

 ‘ஐய்யய்யோ!  
கொஞ்ச நேரம்
சும்மா இருங்களேன்..!
பத்து பிள்ளைங்களை
பெத்து வளர்திரலாம் போல..
தொண தொணன்னு!’

அமைதியாக அம்மா..
அப்பொழுதும்
பாசமாக..

‘அம்மாவோட சேமநிதியை
உன் பையன் பேருல எழுதிக்கய்யா!’

இப்பொழுது மட்டும் மகன்..
அமைதியாக..!!
பாசமோ?!
 

     -K..கிருஷ்ணமூர்த்தி

Tuesday, May 14, 2013

தமிழன் என்று சொல்லடா..!

தமிழன் என்று சொல்லடா..
தலை நிமிர்ந்து நில்லடா!

ஐயய்யோ..!

தப்பா சொல்லீட்டேன்
மன்னிச்சிருங்கோ..!
இன்னொரு தமிழன் கேட்டா
என்னைக் கல்லால அடிப்பான்!

தமிழனென்று சொல்லடா..
தடி எடுத்துக் கொல்லடா!
தமிழனைப் பார்த்தால் மட்டும்
தாறுமாறாய் பேசடா...!

கடவுளே வந்து காதினிலே
ஒற்றுமை என்று சொன்னாலும்
ஓரங்கட்டி ஓடடா..

ஒன்று சேர்க்க  ஒருவன்  வந்தால்..
வீரத் தமிழா..
நீயே அவனைப் போடடா!

தமிழனென்று சொல்லடா..
தடி எடுத்துக் கொல்லடா!
தமிழன் தவறிழைத்தால் மட்டும்
அவன் பரம்பரையையே தாக்கடா...!

தப்புத் தப்பாய் பேசினாலும்ஓகே’ தான்
தமிழன் ஆங்கிலத்தில் மட்டும் பேசனும்..

தப்பித் தவறி ஒருவன் மட்டும்
நல்ல தமிழ்  பேசினால்..
மறத் தமிழா..
அவனைத் தூக்கில்  ஏற்றிக்  கொல்லடா..!

தமிழனென்று சொல்லடா..
தடி எடுத்துக் கொல்லடா!
தமிழனைப் பார்த்தால் மட்டும்
எதிரியாகப் பாரடா...!

வேற்றினத்தான்  தமிழனை  அடித்தால்
நீயும்  சேர்ந்துக் கொல்லடா..

நீயாரென்று கேள்வி எழுந்தால்..
என்
தன்மானத் தமிழா..
‘I NO TAAMIL
என்று..
தலை  நிமிர்ந்து  சொல்லடா..!

தமிழனென்று சொல்லடா..
தடி எடுத்துக் கொல்லடா!
தமிழன் தலைவனானால் மட்டும்
தரக்குறைவாய் ஏசடா...!

 

வாழ்க தமிழினம்!
வாழும் தமிழ்!!

----K.
கிருஷ்ணமூர்த்தி

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs