Saturday, June 27, 2009

இதயமே..


இதயமே..

நிமிடத்திற்கு
எழுபத்திரண்டு முறை
துடிக்கிறாயே..

நீயும்
கர்ம யோகிதான்..!

உனக்கு
தீங்கு செய்தாலும்
நன்மை செய்தாலும்..
உன்னால் இயன்றவரை
இயங்குகிறாய்..

இதயமே..!

நீ மட்டும்தான்..
வாலிபம்
குறைய குறைய
உழைப்பை
உயர்த்துகிறாய்..!

உழைப்பை உயர்த்தி
எங்கள்
நாட்களை குறைக்கிறாய்..!

நீ
துடிப்பதால்
உயிர் வாழ்கிறதா?

உயிர்
இருப்பதால்
நீ துடிக்கிறாயா?

புரியாத புதிர்...

எது எப்படியோ..

என் இதயம்
துடிப்பது மட்டும்
எப்பொழுதும்
என்னவளின்
நினைவுகளாலேயே..!

என்
இருதயத்தின்
இரத்த நாளங்களில்..
அழுத்தம்
குறைவதும் அவளாலே..

அதுவே
அவ்வப்போது
அதிகரிப்பதும் அவளாலே..!!

ஓன்று மட்டும்
உறுதி..

என் இதயம்
விட்டு விட்டு
துடிக்கலாம்..

ஒருபோதும்
அவளை
விட்டுவிட்டுத்
துடித்ததில்லை..!!

• K.கிருஷ்ணமூர்த்தி

Saturday, June 20, 2009

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!

கவிஞர் தாமரை அவர்கள் வழங்கிய சாபம் ஒவ்வொரு தமிழனின் சாபமாக ஆகட்டும்!
இந்த கவிதையை வாய்விட்டு உரக்கமாகப் படியுங்கள் தமிழர்களே..

கவிஞர் தாமரையின் பேட்டி, ஒலி வடியில் இங்கே கேட்கலாம்..
http://www.tamilnaatham.com/audio/2009/jun/interviews/thamarai_20090617.m3u


கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!

ஏ இந்தியாவே…!எத்தனை கொடுமைகள்
செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு…
எத்தனை
வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று…

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்…

பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!

குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!

தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு, நான் வேறு!

ஏ இந்தியாவே!
ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!

தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!

மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே…
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!

உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!

போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!

வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே…

உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும்!
உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்……

பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே…
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே…
உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே…
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!

உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

நரமாமிசம் புசித்தவர்களே…
உங்கள் நாடி நரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!

இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்…

ஆழிப்பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!

நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!

நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!
…………………………………………………………………………….
பின்குறிப்பு:
உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும்குழந்தைகளே…
அவர்கள் நீடுழி வாழட்டும்!

எம் குழந்தைகள் அழுதாலும்
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!

உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!

ஆக்கம் : கவிஞர் தாமரை

(முதன் முதலாக இந்த வலைப்பூவில் நான் எழுதாத கவிதையை இடுகிறேன். இது என் இனத்தின் சாபமாக இருக்கவேண்டும் என்பதால்.. இந்த கவிதையை எனக்கு அறிமுகம் செய்து வைத்த தோழி சுமி ராமுக்கும் கோடி நன்றிகள்..!!)

Monday, June 15, 2009

அடியே பெண்ணே..


அடியே பெண்ணே..

என் ஆவி என்னவோ
உனை எண்ணியே வேகிறது..

என் தேவி என்னிடம்
வர வேண்டியே சாகிறது..

என் பாதி உயிர் இன்று,
நீ வரும் திசையில்
வேர்க்கின்றது...

என் மீதி உயிர் மட்டும்,
உன் ஞாபக தென்றலில்
பூக்கின்றது..

என்று வருவாயோ பெண்ணே... ?
உயிரை என்று
திருப்பித் தருவாயோ கண்ணே..?!

மௌனம் கலைந்தேன்,
வார்த்தை இங்கில்லை?
மனதை திறந்தேன்..
தேவி நீ இல்லை..
சிறகை விரித்தேன்,
வானம் இங்கில்லை..
விறகாய் ஆனேன்..
நெருப்பும் இங்கில்லை..!!

என்று வருவாயோ பெண்ணே...?
என்னை என்று..
திருப்பித் தருவாயோ கண்ணே..?!

பார்வை கொண்டேன்,
காட்சி நீ இல்லை
பாதை கொண்டேன்,
பாவை நீ இல்லை..
தாகம் கொண்டேன்,
பருக நீ இல்லை..
மேகமானேன்..
துளிகள் என்னில் இல்லை..

என்று வருவாயோ பெண்ணே...?
எனக்கு என்ன
தருவாயோ கண்ணே...?!

K.கிருஷ்ணமூர்த்தி

Tuesday, June 9, 2009

வாடிய பயிரை..


அனுபல்லவி
வாடிய பயிரை கண்டபோதெல்லாம்..
வாடினார் வள்ளல் பெருமான்..
ஆடிய உயிரை கொன்ற போதெல்லாம்
கலங்கினார் கருணைக் கடலே..

பல்லவி
உயிர்களை படைப்பது கடவுளடா..
அதை உயிராய் மதிப்பது மனிதமடா.. மனிதமடா.. 2x
இறப்பு என்பது இயற்கையடா.. அதை
உன் கையில் எடுப்பது கொடுமையடா.. (வாடிய..

சரணம்
எளியதை கொன்று வலியது வாழும்..
காட்டில் வாழும் மிருகமடா..
உயிர்களை மதித்து பயிர்களை சமைத்து
உண்டு வாழ்ந்தால் மனிதனடா.. (இறப்பு..

கருணை என்பது கடவுளின் வடிவம்
கருணையை மறந்தால் மிருகமடா..
கருணையை சுமந்து கடவுளை நினைந்து
உருகி வாழ்ந்தால் தெய்வமடா.. (வாடிய..
(உயிர்களை

  • K.கிருஷ்ணமூர்த்தி


பாடல் ஒலி வடிவில்..

Vadiya Payirai.mp3 -

Wednesday, June 3, 2009

ஆலமரம்..!

சுட்டெறிக்கும்
சூரியனை
சுட்டுவிட்டனரா..?

சுட முடியுமா
என்
சூரியனை..?

விண்ணதிர
முழக்கமிட்ட
வேங்கையை
வீழ்த்திவிட்டனரா..?

சாத்தியம்தானா..
சிறு நரிகளுக்கு
அது?

ஈழத் தமிழனின்
தன்மானம்
காக்க வந்த
தருமனை..
தகர்த்து விட்டனரா..?

தாங்குவாளா
பூமி மாதா..?
பூகம்பம் வந்திருக்காதா
இன்னேரம்
அந்த இடுகாட்டில்..!

போர் முடிந்துவிட்டதென
போலியாய்
புலம்புகிறான்
இராட்சஷ பாக்சே!

ஒவ்வொரு முடிவிலும்
ஒரு
தொடக்கம் இருக்கும்..

ஒவ்வொரு அழிவிலும்
ஒரு
அரும்பு முளைக்கும்..


ஒவ்வொரு இருட்டிலும்
ஒரு
விடியல் இருக்கும்..

ஒவ்வொரு மரணத்திலும்
ஒரு
விடுதலை இருக்கும்...!

அன்று நடந்த
அந்த,
ஒவ்வொரு கொடூரத்திலும்
ஒரு
விளைவு இருக்கும்..!!!

எங்கள் புலிகள்,
வீரமரணத்தில்
நிம்மதியாய்
நித்திரை கொண்டனர்..

அடே,
இராட்சச பாக்சேவே..!
ஜெயித்ததாய் பிதற்றினாலும்..
பீதியில்
உன் இரவுகள்
நித்திரை இழக்கும்..!!!

இது
இறங்கற் பா அல்ல..
எழுச்சிப் பா..!

பிரபாகரன்
மரமல்ல..
விருட்சம்..

பல கோடி தமிழர்களின்
இதய விழுதுகள்
தாங்கி நிற்கும்
ஆலமரம்..!

தமிழ் விழுதுகள்
தாங்கி நிற்கும் வரை..
அந்த தலைவனுக்கு
வீழ்ச்சி இல்லை..!!!

  • K.கிருஷ்ணமூர்த்தி


என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs