Sunday, February 9, 2020

தாயுமானவள்..!

பூஜ்யமாய் இருந்தவனை
புன்னகையால் 
பூரணமாக்கியவள்..

விடலையாய் இருந்தவனை
வர்ணனையால் 
வாலிபனாக்கியவள்..
மூங்கிலாய் இருந்தவனை
சுட்டு 
புல்லாங் குழலாக்கியவள்..

மூர்க்கனாய் இருந்தவனை
தொட்டு 
மனிதனாக்கியவள்..
விதையாய் இருந்தவனை
எருவிட்டு 
விருட்சமாக்கியவள்..

புதிராய் இருந்தவனை
கலையெடுத்து 
புதுமையாக்கியவள்..
மேகமாய் இருந்தவனை
அமுதாய்ப்
பொழிய வைத்தவள்..

ஏகனாய் இருந்தவனை
உணர்த்தி 
அனேகனாக்கியவள்...
வெரும்
வார்த்தைகளாய் இருந்தவனை
கவி 
வித்தகனாக்கியவள்..
கடும்
மௌனியாய் இருந்தவனை
சிரிக்கும் 
குழந்தையாக்கியவள்..
அன்பே,
நீ என் 
தாயுமானவள்..!
-கவித்தமிழ் கிருஷ்ணமூர்த்தி


Thanks for being part of me, understanding me, nurturing me, even arguing with me and fighting with me.. 
most of all, thanks for loving me.

Wednesday, November 15, 2017

மலேசியாவில் தமிழர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பத் தயங்குகின்றனர். அந்த பெற்றோர்கள் தமிழின் மேன்மையை உணர வேண்டுமென்ற நோக்கில்..

கற்போம் தமிழ்..!

தமிழ்..
அயல்நாட்டினரெல்லாம்
அழகாய் பேசும் மொழி…
தமிழன் மட்டும் தவ’ரா’ய்
பேசும் மொழி..!

தமிழ்..
உயிரின் மொழி
உளவியல் மொழி..
அறிவின் மொழி
அறிவியல் மொழி..

உடம்பின்
அறிவியல் மட்டுமல்ல..
உயிரின்
அறிவியலையும் சொல்லும்
ஒரே மொழி!

தமிழ்..
அன்பின் மொழி
பண்பின் மொழி..
அகத்தின் மொழி
ஜகத்தின் மூத்த மொழி!

தாய்ப்பாலோடு
தமிழ்ப்பால்
உண்ட குழந்தைகள்
தாயைப் பழிப்பரோ
என்னாளும்..?!

தமிழ்..
நாகரீகம்
வளர்த்த மொழி
நான்திசையும்
வென்ற மொழி..

பல
ராஜ்ஜியங்களை
வென்ற இராஜராஜ சோழன்
ரௌத்திரம் கற்றதும்
தமிழில்தான்..!!!

தமிழ்..
ஞான மொழி
ஞால மொழி..
வாழ்க்கை மொழி..
நாம் வாழும் வழி..!

வாழும் கலையும்
வாழ வைக்கும் கலையும்
எண்ணற்ற இலக்கியங்கள்
கண்டதும் தமிழில்தான்..!!!

***

ஹார்ட்வர்டில்
இருக்கை கிடைத்தது..
தமிழன் மனமோ
இரு கை விரிக்கிறது..!

***

தமிழ்
சோறு போடுமா?

கேடு கெட்ட
தமிழன் மட்டுமே
கேட்கும் கேள்வி..!

தமிழ் கற்றவன்
எல்லாம் என்ன..
பட்டினி
பிணமானானா?

இருநூறு வருட வரலாறு
மலேசிய
பள்ளிகளில் தமிழ்..

இன்று
இருநூறு பள்ளிகளுக்கு மேல்
மாணவர்
பற்றாக்குறையில் 
தமிழ்பள்ளி!

தோழா..
உணர்ந்துகொள்..!

திருப்புகழ் பாடினால்
ஆயுள் நீளும்..
திருக்குறள் சொன்னால்
வாழ்வு செழிக்கும்..

சிவஞான போதம் புரிந்தால்
மெய்ஞானம் விரியும்
திருமந்திரம் ஓதினால்
விஞ்ஞானம்  விளங்கும்..!

திருமந்திரம் ஓதினால்
விஞ்ஞானமே வணங்கும்..!

தோழா..
புரிந்துகொள்..
உணர்ந்துகொள்..
துணிந்து நில்..!

உலகமே போற்றும்
தமிழ்தான்..
மொழிகளில் சிறந்தது!

தமிழனாய் பிறக்கும்
பிள்ளைகளுக்கெல்லாம்
தமிழ்வழிக் கல்வியே
மிகச் சிறந்தது!

உன் பிள்ளையின்
தமிழ் எழுத்து
செம்மையானால்..

சமுதாயத்தின்
தலையெழுத்தும்
செம்மையாகும்..!!

                  --- கவித்தமிழ் கிருஷ்ணமூர்த்தி

Saturday, January 28, 2017

காங்கேயம்..


ஏறு தழுவ வீறு கொண்ட
வீரத் தமிழா..
ஆறு சொல்லி கூடி வந்தாய்
கூறு தமிழா..

அடி மேல் அடித்தால்
அம்மிதான் நகரும்நீ
இடிபோல் முழங்கினாய்
இந்தியாவே நகர்ந்தது..!!

அரசியல் வாதியால் ஆகாததை
ஆறே நாட்களில் சாதித்தாய் – இனி
அரசியலுக்கு நீ வந்தால்
பூரிப்பாள்நம் பாரதத் தாய்..!

இங்கே இருப்பவன் எல்லாம்
ஏலம் போன அரசியல்வாதிகள்
சேலைக்குள் அடங்கும் 
சுயநலவாதிகள்..!!

இனி ஒரு விதி செய்
அதை
உறுதியாய் உடனே செய்..!

பெப்சி கோலா மட்டும் இல்லை– இங்கே
இறக்குமதியே தேவை இல்லை..!!

ஜீன்ஸ் டீசர்ட் துறந்தால்
நெசவாளி வாழ்வான்
பீசா பர்கரை மறந்தால்
விவசாயி வாழ்வான்.. !!

பெப்சி கோலா மட்டும் இல்லை – இங்கே
இறக்குமதியே தேவை இல்லை..!!

இனி ஒரு விதி செய்
அதை
உறுதியாய் உடனே செய்..!

சினிமா தாகம்
வெளி நாட்டு மோகம்
எல்லாம் மறப்பாய்..
உன் தாய் நாடு வளமாக
இன்றே வகுப்பாய்..!

தை பிறந்தால் வழி பிறக்கும்
இந்த 2017 தைக்கு பிறகு
தமிழ்நாடே சிறக்கும்..!!

சரித்திரம் காணா 
மாட்டுப் பொங்கல்,
சமுத்திரமாய் தமிழன் 
இணைந்த பொங்கல்..

ஒற்றுமைக்கு வித்திட்ட 
பீட்டாவுக்கும் 'நன்றி! எங்கள்
உணர்வுக்கு 'உரமூட்டிய'
'லத்தி'துறைக்கும் 'நன்றி!!!"

இனி ஒரு விதி செய்
அதை
உறுதியாய் உடனே செய்..!

பீட்டா என்பது பொருட்டல்ல- நீ
டாட்டா சொல்வது பெரிதல்ல- உன்
பாட்டன் வழியில் வாழ்ந்தாலே – வால்
ஆட்ட மாட்டான் எவனும் இனி..

தமிழ்நாடு என்பது பெரும் சந்தை – அங்கே
தமிழினம் வாடுவது பெரும் விந்தை..
தமிழனின் பொருட்கள் வாழ்ந்தாலே
தமிழனும் வாழ்வான் மறவாதே..!!

இனி ஒரு விதி செய்
அதை
உறுதியாய் உடனே செய்..!

காங்கேயம் காளைகளால்
சரித்திரம் படைத்தாய் - இனி
அதுவே சின்னமென்று
சாதிக்க வருவாய்..!!

மஞ்சள் முருங்கை எல்லாம்
மாற்றானிடம் விட்டது போதும்!
உரிமமும் உரிமைதான்
ஊருக்கு உரைப்பாய்..

காங்கேயம் என்பது உன் சின்னம் - இனி
வெங்காயம் ஆனாலும் காங்கேயம்!
காங்கேயம் என்பதை உரிமம் செய் - அதை
வாங்காமல் துயில் இல்லை உறுதி செய்!

கட்சியும் காங்கேயம் – வியாபார
புரட்சியும் காங்கேயம்..
நிச்சயம் வெல்லும் காங்கேயம்
உச்சிக்கு உயரும் காங்கேயம்..!!

காங்கேயம் சின்னத்தை – இனி
சட்டையில் பொறிப்பாய்
அதில் வரும் உரிம நிதியை
கட்சிக்கு சேர்ப்பாய்..!!

இனி,
உலகம் முழுவதும் காங்கேயம்..
உலகத் தமிழனும் பங்கேற்பான் – இதில்
கலகம் புரிந்திட நினைத்தாலே - அவனை
விலக்கி வைக்கவும் காங்கேயம்..!!

வாழ்க வாழ்க காங்கேயம்..!!
வாழ்க எங்கள் ஜல்லிக்கட்டு
வாழ்க வாழ்க காங்கேயம்
வானும் அதிர்ந்திட மார்தட்டு..!!!!

                       -கவித்தமிழ் கிருஷ்ணமூர்த்தி

Wednesday, September 16, 2015

மருத்துவம்

பூஜ்யமாய் நின்று
கோடியில் ஒன்றாகி
ஆயிரத்தில் ஒன்றாகி
நூற்றில் ஒன்றாகி
பத்தில் நான்காகி
நாளை
பத்துக்கு பத்தாகும் – பிணி

மூலனுக்கு மூவாயிரம்
பீஷ்மரோ சில நூறுகள்
பாட்டனுக்கு நூறு
தாத்தனுக்கு எண்பது
அப்பனுக்கு எழுபது
எனக்கு மிஞ்சினால் அறுபது
பிள்ளைக்கு நோயோடு ஐம்பது
பேரனுக்கு நோயில்லாமல்
இருபது கண்டாலே போதும் – வயது

விஞ்ஞான வளர்ச்சியால்
இயற்கை மரணங்கள்
இறந்துவிட்டன..
மருத்துவமனையில்
மரணங்கள் மட்டும் வாழ்கின்றன..!

ஔவை சொன்ன
ஔடதங்கள் 
அற்றுப் போய்
மரணம் வளர்க்கும் 
மருந்துகள்
விற்றுத் தீர்கின்றன..

இங்கு
மரண பயம் ஊட்டி ஊட்டி
மருந்து விற்கும்
கலைக்குப் பெயர்
மருத்துவம்!

பிள்ளையையும் கிள்ளிவிட்டு
தொட்டிலையும் ஆட்டுகிறது
இன்றைய
நவீன மருத்துவம்!!!

 -K. கிருஷ்ணமூர்த்தி

Thursday, July 18, 2013

'வாலி'பமே.. வாழும் நின் புகழ்!














தமிழ்த் திரையின்
வாலிபமே..
உன்னையும்
வயோதிக மரணம்
தழுவிக் கொண்டதா?
 
பாவம்..
எத்தனை நாள்தான்
தனித்திருப்பாள்
அந்த தமிழ்த்தாய்..?
தன்
இளைய மகனை..
என்றும்
இளமை மாறா மகனை
இனிய மகனை..
 
 
இன்னும்
எத்தனை காலம்தான்
பிரிந்திருப்பாள்..
தமிழ்த் தாய்..?
அவளும் பெண்தானே..!
 
 
இரவலாக தந்தவள்
எடுத்துக்கொண்டாள்..
 
இருந்தாலும்
வயதை வென்று
வாழ்ந்த கவியின்
எழுத்துக்களும் எண்ணங்களும்
இன்னமும் எங்களுக்கே..!
 
என்றென்றும்..
வாழும் நின் புகழ்!

Thursday, June 6, 2013

அப்பா..

பல்லவி

 அன்புத் தந்தையே - என்

அன்புத் தந்தையே -என்

உள்ளம் உருகி நான்

நன்றி சொல்லுவேன்..

 

அன்புத் தந்தையே -என்

அன்புத் தந்தையே -உன்

உள்ளம் மகிழ அந்த

விண்ணை வெல்லுவேன்..

 

என் வெற்றியின் பாதை எல்லாம்

உன் வியர்வையின் மணித்துளிகள்..

என் வாழ்க்கையின் வாசலெங்கும்

உன் தியாகத்தின் எதிரொலிகள்..                      

 (அன்புத் தந்தையே

 

சரணம் 1

 உன்னால் உன்னால் இங்கு உயிர் சுமந்தேன்

உன்னால் உன்னால் நான் என்னை அறிந்தேன்..

இமைகளும் திறவாமல் பார்வையும் ஒன்றில்லை

உன் வழி செல்லாமல் நேர்வழி ஒன்றில்லை..

உனைவிட தொழுதிட தெய்வமும் வேறில்லை..   

(அன்புத் தந்தையே

 

சரணம் 2

அன்று ஓர்நாள் என்னை பணியச் செய்தாய்

பின்பு ஓர்நாள் என்னை நிமிரச் செய்தாய்...

நீ சொன்ன வார்த்தைகளே வாழ்க்கையின் தத்துவங்கள்..

நீ சொன்ன பாடங்களே இன்னும் என் சுவாசங்கள்..

எனக்கென வாழ்ந்திடும் தெய்வமும் நீதானே..       

                                                       (அன்புத் தந்தையே

 

அப்பாவுக்காக, K.கிருஷ்ணமூர்த்தி

 

தந்தையர் தினத்துக்காக நான் இயற்றிய உள்ளூர் பாடல் இது. ஒலி வடிவில் விரைவில் ஒளியேறும். இன்று என்னோடு இல்லாத என் தந்தைக்கும்.. பிள்ளைகளின் நலனுக்காக தன்னையே அற்பணிக்கும் எத்தனையோ தந்தையர்க்கும் இந்த பாடல் சமர்ப்பணம்!

Sunday, May 19, 2013

பிள்ளைப் பாசம்!

கருவில் தரித்தது..
ஆணா பெண்ணா?
கறுப்பா சிகப்பா?
வலியவனா எளியவனா?
ஆளப் பிறப்பவனா.. இல்லை
ஆட்டி வைக்க பிறப்பவனா..?
எதுவுமே தெரியாமல்
பாசம் வைக்கும் முதல் ஜீவன்
தாய் மட்டுமே!

 
உச்சந்தலையோ
உள்ளங்காலோ..
எது முதலில் வந்தாலும்..
குறைப்பிரவசவமோ
நிரைப்பிரசவமோ..
உயிரோடு பிறக்கிறதோ..
உடல் மட்டும் பிறக்கிறதோ..
எதுவுமே தெரியாமல்..
பிறக்கும் முன்னே
நெஞ்சினில் பாலோடு காத்திருக்கும்..
ஒரே ஜீவன்
தாய்தான்.!

 
அம்மா..
அது என்ன..?
இது என்ன..?
ஏன்..?
என்ன கேள்வி கேட்டாலும்..
எத்தனை முறை
கேட்டாலும்..
குழந்தைக்கு..
சலிக்காமல் பதில் சொல்லும்..
ஒரே உறவு
தாய்தான்..!

 
பிள்ளையின் பராமரிப்பில்
வயதான
ஒரு தாய்..
காருக்கு பின் இருக்கையில்
அமர்ந்து..

‘இது என்ன இடம்பா?’

‘சொன்னா உனக்கு
புரியாதும்மா!’

 
‘இப்போ எங்கே போறோம்?’

 ‘ஐய்யய்யோ!  
கொஞ்ச நேரம்
சும்மா இருங்களேன்..!
பத்து பிள்ளைங்களை
பெத்து வளர்திரலாம் போல..
தொண தொணன்னு!’

அமைதியாக அம்மா..
அப்பொழுதும்
பாசமாக..

‘அம்மாவோட சேமநிதியை
உன் பையன் பேருல எழுதிக்கய்யா!’

இப்பொழுது மட்டும் மகன்..
அமைதியாக..!!
பாசமோ?!
 

     -K..கிருஷ்ணமூர்த்தி

Tuesday, May 14, 2013

தமிழன் என்று சொல்லடா..!

தமிழன் என்று சொல்லடா..
தலை நிமிர்ந்து நில்லடா!

ஐயய்யோ..!

தப்பா சொல்லீட்டேன்
மன்னிச்சிருங்கோ..!
இன்னொரு தமிழன் கேட்டா
என்னைக் கல்லால அடிப்பான்!

தமிழனென்று சொல்லடா..
தடி எடுத்துக் கொல்லடா!
தமிழனைப் பார்த்தால் மட்டும்
தாறுமாறாய் பேசடா...!

கடவுளே வந்து காதினிலே
ஒற்றுமை என்று சொன்னாலும்
ஓரங்கட்டி ஓடடா..

ஒன்று சேர்க்க  ஒருவன்  வந்தால்..
வீரத் தமிழா..
நீயே அவனைப் போடடா!

தமிழனென்று சொல்லடா..
தடி எடுத்துக் கொல்லடா!
தமிழன் தவறிழைத்தால் மட்டும்
அவன் பரம்பரையையே தாக்கடா...!

தப்புத் தப்பாய் பேசினாலும்ஓகே’ தான்
தமிழன் ஆங்கிலத்தில் மட்டும் பேசனும்..

தப்பித் தவறி ஒருவன் மட்டும்
நல்ல தமிழ்  பேசினால்..
மறத் தமிழா..
அவனைத் தூக்கில்  ஏற்றிக்  கொல்லடா..!

தமிழனென்று சொல்லடா..
தடி எடுத்துக் கொல்லடா!
தமிழனைப் பார்த்தால் மட்டும்
எதிரியாகப் பாரடா...!

வேற்றினத்தான்  தமிழனை  அடித்தால்
நீயும்  சேர்ந்துக் கொல்லடா..

நீயாரென்று கேள்வி எழுந்தால்..
என்
தன்மானத் தமிழா..
‘I NO TAAMIL
என்று..
தலை  நிமிர்ந்து  சொல்லடா..!

தமிழனென்று சொல்லடா..
தடி எடுத்துக் கொல்லடா!
தமிழன் தலைவனானால் மட்டும்
தரக்குறைவாய் ஏசடா...!

 

வாழ்க தமிழினம்!
வாழும் தமிழ்!!

----K.
கிருஷ்ணமூர்த்தி

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs