
இதயமே..
நிமிடத்திற்கு
எழுபத்திரண்டு முறை
துடிக்கிறாயே..
நீயும்
கர்ம யோகிதான்..!
உனக்கு
தீங்கு செய்தாலும்
நன்மை செய்தாலும்..
உன்னால் இயன்றவரை
இயங்குகிறாய்..
இதயமே..!
நீ மட்டும்தான்..
வாலிபம்
குறைய குறைய
உழைப்பை
உயர்த்துகிறாய்..!
உழைப்பை உயர்த்தி
எங்கள்
நாட்களை குறைக்கிறாய்..!
நீ
துடிப்பதால்
உயிர் வாழ்கிறதா?
உயிர்
இருப்பதால்
நீ துடிக்கிறாயா?
புரியாத புதிர்...
எது எப்படியோ..
என் இதயம்
துடிப்பது மட்டும்
எப்பொழுதும்
என்னவளின்
நினைவுகளாலேயே..!
என்
இருதயத்தின்
இரத்த நாளங்களில்..
அழுத்தம்
குறைவதும் அவளாலே..
அதுவே
அவ்வப்போது
அதிகரிப்பதும் அவளாலே..!!
ஓன்று மட்டும்
உறுதி..
என் இதயம்
விட்டு விட்டு
துடிக்கலாம்..
ஒருபோதும்
அவளை
விட்டுவிட்டுத்
துடித்ததில்லை..!!
• K.கிருஷ்ணமூர்த்தி