
மனிதம்
மரத்து விட்டது..
'மரத்'தமிழனுக்கு..!
இதயத்தின் ஈரம்
வறண்டு விட்டது
இன்றைய
இளைஞனுக்கு..
தியேட்டர்களுக்கு மட்டுமல்ல
கோவில்களுக்கு கூட
குடும்பத்தோடு
செல்ல முடியாமல்
நம் குடும்பங்கள்..!
மனிதம்
மரத்து விட்டது..
'மரத்'தமிழனுக்கு..!
சினிமா இவர்களைக்
கெடுக்கிறதா?
சிந்திக்கும் தன்மை இழந்தவனை
திருத்த முடியுமா..?
கெடுக்கவும் முடியுமா..?
இருந்தாலும்..
சினிமா இவர்களுக்கு
கற்றுக்கொடுக்கிறது..!
பணம் பன்னும்
தயாரிப்பாளர் வீட்டிலும்
படமெடுக்கும்
இயக்குனர் வீட்டிலும்
ஒரு கொலை
ஒரு கற்பழிப்பு
ஒரு களவு..
நடந்தால்
நிலைமை மாறலாம்..!
மனிதம்
மரத்து விட்டது..
'மரத்'தமிழனுக்கு..!
ஒரு உண்மை மட்டும்
இன்னமும் என்னுள்
ஊமையாக..
விளங்கிக் கொள்ள முடியாத
மரபுக் கவிதையாக..!
இவர்களுக்கும்
குடும்பம் உள்ளது..
பெற்றவர் இருக்கின்றனர்..
இவர்கள் போக்கு
பெற்றோருக்குத் தெரியாதா?
விளையும் பயிர்
முளையிலேயே தெரியாதா?
பேணி வளர்க்கத் தெரியாதவர்களுக்கு
எத்தனைக் குழந்தைச் செல்வங்கள்..?!
இல்லை
இதுவும் இறைவனின் சதியா?
பிரச்சனைகளே இல்லை என்றால்
அரசியல் தேவை இல்லை!
எல்லோரும் நல்லவர்களானால்
இறைவனுக்கே
இங்கே வேலையில்லை!!
மனிதம்
மரத்து விட்டது..
'மரத்'தமிழனுக்கு..!
திருமூலரும்
திருவள்ளுவரும்
தோன்றிய தோன்றலில்
இன்று
எத்தனை திருடர்கள்..
எத்தனை அசுரர்கள்..!!
வேடிக்கை..
ஆனால் உண்மை..
தமிழனுக்கு இளப்பம்
தமிழன்தான்!
தாலியில் கூட
தங்கத்தையே பார்க்கும்
திருடர் கூட்டம்..
திருமணங்களில்
புகைப்படம் எடுத்து
ஆதாரத்தோடு
நகைகளை திருடும்
நவீன
திருடர் கூட்டம்..!
வயதான மாதர்களையும்
விட்டு வைக்காத
காமுகர் கூட்டம்..
வீட்டிலே தனக்கும்
தமக்கை அக்காள்
இருப்பதை மறந்து
கலாச்சாரத்தை கற்பழிக்கும்
காமுகர் கூட்டம்..!
திருடனுக்கு கை வெட்டப்படும்
தண்டனை உண்டு
மத்திய கிழக்கில்..
காமுகனுக்கு ‘அது’
வெட்டப்படும் சட்டம் வருமா
நம் மக்களின் வழக்கில்..?!
மனிதம்
மரத்து விட்டது..
'மரத்'தமிழனுக்கு..!
திருவிழாக்களில்
தெய்வ தரிசனம் போய்
அடியாட்கள் தரிசனம்..!
திருவிழாக்களில்
மறுபடியும்
நரபலிகள்..!
இவர்கள் நவீன
சித்தர்களோ..?
மனிதம்
மரத்து விட்டது..
'மரத்'தமிழனுக்கு..!
K.கிருஷ்ணமுர்த்தி