Tuesday, June 7, 2011

சுயநல ஒப்பாரி

இறந்த சடலத்திடம் எத்தனைக் கேள்விகள்? * கண் திறந்து பாரடா மகனே..! பத்து மாதம் சுமந்து பெற்றேன்.. ஈ கொசு அண்டாமல் இமைபோல் காத்தேன்.. ஊரே பழித்தாலும் உனக்காய் வாழ்ந்தேன்.. யாரும் இனி எனக்கில்லை.. மாதாவை தனியே விட்டு மாய்ந்தாயே மகனே?? சோறூட்டிய கைகளில் வாய்க்கரிசி பாலூட்டிய மார்பினில் செங்குருதி.. இந்த தள்ளாத வயதினில், தவிக்க விட்டுச் சென்றாயே.. கண் திறந்து பாரடா மகனே..! இது தாயில் அலறல்.. * காடு மனையெல்லாம் வித்தேன் கடன் வாங்கி படிக்க வைச்சேன்.. சேம நிதி கூட எடுத்து- உன் திருமணத்தை நடத்தி வைச்சேன்.. இப்படி திடுதிப்புன்னு செத்துப்போனா.. பட்ட கடனை எப்படி அடைப்பேன்!

ஐயா.. ராசா..! இப்படி திடுதிப்புன்னு செத்துப்போனா.. நான் பட்ட கடனை எப்படி அடைப்பேன்? பதில் சொல்லிப் போ மகனே..!! இது தந்தையின் புலம்பல்.. * பெத்தவங்க, கூடப் பொறந்தவங்க.. சாதி சனம் எல்லாரையும் மறந்து வந்தேன்.. நீ ஒருத்தனே கதியென்று உன்னோடு பறந்து வந்தேன்..!

வயித்தில வளரும் கரு ஆணா பெண்ணா அறியுமுன்னே.. என்னை நட்டாற்றில் விட்டுச் சென்றாயே..!

நரம்பில்லாத நாக்கு என் ராசியை குறை சொல்ல தாலியை பறித்துச் சென்றாயே!

ஏழு ஜன்மமும் கூட வருவேன்னு என் மேல சத்தியம் செய்த கை குப்புறக் கிடக்குதிங்கே ஐயோ..! என் குடிகெட்டு போயிருச்சே!

வாக்குறுதி தந்த வாயில வாக்கரிசி போட வைச்சு வாழ்வை தேடி வந்த எனக்கு விதவைச் சாயம் பூசியதென்ன?

ஐயோ..

இந்த கேள்விக்கும் உன் பதில்

மௌனம் தானா??!

இது மனைவியில் கதறல்..

* இறந்த சடலத்திடம் எத்தனைக் கேள்விகள்..? எத்தனை குற்றச்சாட்டுகள்..?? ஆவியாகிய ஆன்மாவிடம் எத்தனை புலம்பல்கள்?! எத்தனை பழிச்சொற்கள்..?!

சொர்க்கம் சேர வேண்டி ஒரு பக்கம் சாங்கியம் நடக்கிறது.. பதில் தர வேண்டி மறு பக்கம் ஒப்பாரி ஒலிக்கிறது..! சுயநல ஒப்பாரி ஒலிக்கிறது..!! * இறைவா.. உன்னிடம் ஒரு வேண்டுகோள்… இங்கு யாரும் பிரேதத்தைப் பார்த்து பெருமை பாடுவதில்லை..!

சுயநல மனிதர்கள் செத்த பிறகும் ஆன்மாவை விட்டு வைப்பதாயில்லை!

இங்கே, ஒப்பாரி பட்டியலில் ஆறுதல் வார்த்தையை விட ஆத்திரக் கேள்விகளே அதிகம்..!

ஆன்மாவின் வழியனுப்பலை விட அவரவர் வயிற்றெரிச்சலே அதிகம்..!!

கரணங்கள் இழந்துவிட்ட

ஆன்மாவிடம்..

காரணங்கள்..


இறைவா...

இவர்களுக்கு தெரியாமலே போகட்டும்

இந்த 

கதறல்கள் கேட்க

காதுகள் இல்லை ஆன்மாவிடம்!!!


-K.கிருஷ்ணமூர்த்தி

2 comments:

Yaathoramani.blogspot.com said...

வித்தியாசமான சிந்தனை
யாரும் இறந்தவன் பெருமை குறித்து பேசாது
அவரவர் இழப்பு குறித்தே புலம்புவதை
மிக அழகான கவிதையாக படைத்துள்ளீர்கள்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

கிருஷ்ணா said...

நன்றி திரு ரமணி அவர்களே! உண்மையில் இது என் மனைவியின் சிந்தனை. அவளது சிந்தனையின் தாக்கம்தான் இந்தக் கவிதை. பின்னூட்டுக்கு நன்றி!

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs