உன்
சமாதானக் கொள்கைக்கு
இலங்கையில்
கொள்ளி வைத்துக்
கொண்டிருக்கிறார்களே..!
ஈழமே இன்று
இடுகாடாய்..
எங்கள் இனத்தவர்
அங்கே..
பலிகாடாய்..!
எங்கே உன்
சமாதானம்..?
எங்கே போனது
உன்
சாத்துவீகம்..?
*
பாலஸ்தீனத்தில்
ஐந்து பேர்
இறந்தால்
வையகமே அழுகிறது..
ஈராக்கில்
ஒரே ஒரு
குண்டு விழுந்தால்
அகிலமே அதிர்கிறது..!
இலங்கையில் மட்டும்
தவிப்பது
தமிழன் என்பதால்..
இறப்பது
என் இனம் என்பதால்..
தமிழக அரசு கூட,
மௌனமாய்..
மழுப்புகிறது..!
*
புத்தம் பேசும்
புண்ணிய பூமி
யுத்தக் காடாய்
எறிகிறது..
புத்த பிக்குகள்
யுத்த பிக்குகளாய்
எள்ளி நகைப்பது
சுடுகிறது..!
ஆயிரம் காரணம்
கூறிய போதிலும்
புத்தத்தில் கொலைக்கு
இடமுண்டோ..?
எங்கும்
அப்பாவி மக்களின்
அழுகுரல் ஓலங்கள்..
புத்தத்தில் எங்கேதான்
அன்புண்டோ..!
*
ஏ புத்தனே..இன்னும்
எத்தனை நாட்கள்
எங்களை
ஏமாற்றப் போகிறாய்..?
உன்,
புத்தம் சரணம் கச்சாமி..!
இன்று
யுத்தம் மரணம் கச்சாமி
ஆனது..
உன்,
தர்மம் சரணம் கச்சாமி..!
இன்று..
இரத்தம் இரணகளம் கச்சாமி
ஆனது..!!
இன்னும்
எத்தனை உயிர்கள்
இறந்திட வேண்டும் ..?
இன்னும்
எத்தனைக் காலம்
அழுகுரல் வேண்டும்..?
இந்த
யுத்த பிக்குகள்
கொலைவெறி தீர..
சொல்வாயா சித்தார்த்தா..?!!!
- K.கிருஷ்ணமூர்த்தி
9 comments:
வேதனையான கவிதை கிருஷ்ணா அவர்களே... in the name of Buddha எனும் ஒரு படம் வெளி வர தடை செய்யப்பட்டது. அது ஈழத்து தமிழ் மக்களின் துயரங்கள் பற்றியதாக எடுக்கப்பட்ட படம். இன அழிப்பு போருக்கு முடிவு இருப்பதாக தெரியவில்லை.
மலேசியாவின் ஈழ போருக்கு குரல் கொடுக்கும் முயற்சி எவ்வகையில் இருப்பதாக நினைக்கிறீர்கள்? இதைப் பற்றி நேற்று குமரன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். நேரில் பேசுவோம்.... :)
http://www.youtube.com/watch?v=rj0ndcm7cIs
இந்தச் சுட்டியைப் பாருங்கள் :)
நன்றி விக்கி! படத்தைப் பார்த்தேன்.. என்னவென்று சொல்வது? அகக்கண்களில் குருதி உதிர்கிறது..
மலேசியாவைப் பொறுத்த மட்டிலும் எத்தனையோ இயக்கங்கள் ஆங்காங்கே நிதி திரட்டிக் கொடுக்கின்றனர். அயல்நாட்டு தூதரகங்களின் முன் அமைதியாக எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர். ஆனாலும், நமது அரசாங்கம் மட்டும் இந்த விஷயத்தில் இன்னமும் பாராமுகமாக இருப்பதுதான் வேதனையளிக்கிறது. இங்கே பாலஸ்தீனர்கள் இல்லை, ஈராக்கியர்கள் இல்லை, ருவாண்டா மக்கள் இல்லை.. ஆனால், அங்கே அவர்களுக்கு துன்பம் என்றால் குரல் கொடுக்கும் அரசாங்கம்.. இங்கே இரண்டு மில்லியன் தமிழர்கள் (இந்தியர்கள்) இருந்தும், தமிழீழ பிரச்சனையை கண்டும் காணாததுபோல் இருப்பது கவலை அளிக்கிறது.
அரசியலில் மதம் குறுக்கிட்டால் இதுதான் கதி என்பதற்கு இலங்கையொரு நல்ல உதாரணம். சமாதானம் போதிக்க வேண்டியவர்களே போர் முழக்கம் செய்வது அந்த புத்தனையே அவமதிக்கும் செயலுக்கு ஒப்பாகும்.
தங்களின் கவிதை அதனை நன்கு வலியுறுத்துகிறது.
நம் நாடும் சமயத்தை கேடயமாக்கி இனப்பூசலை உண்டுச் செய்ய, அடுத்தகட்ட பரிசோதனை முயற்சியில் இறங்கியுள்ளது. என்று வெடிக்குமோ அடுத்த மே 13!!
திரு சதீசு குமார் அவர்களே.. தங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். மனிதம் இல்லாத மதம், மதம் பிடித்த யானை போல.. அது அழிவிற்குத்தான் இட்டுச் செல்லும்.
கவனித்தீர்களா.. நமது புதிய பிரதமர் நம்மால் நம்ப முடியாத பல திருப்பங்களைச் செய்கிறாரே! திருமதி இந்திராவின் கதை திருப்தியைத் தருகிறது. பூமிபுத்ராக்களின் 30% பங்கும் தேவை இல்லை என்று அறிவித்திருப்பதும் வியக்க வைக்கிறது. இது நிலைக்குமா? இல்லை அடுத்த தேர்தல் வரை மக்களைக் கவரும் பாணியா? எது எப்படியோ.. நாடும் மக்களும் இதனால் நன்மையடைவார்கள் என்றே நம்புகிறேன்..
நஜீப் மஹாதீரை மிஞ்சி விடுவார் போலிருக்கிறதே. ISA சட்டத்தையும் அகற்றினால் அவர்மேல் மதிப்பு கூடும்.. மக்கள் தேசிய முன்னணியை மீண்டும் ஆதரிக்கலாம்..!
இன்று ஈழத்தில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள தமி்ழ் மக்களின் அவலங்களை நீக்க பல ஏற்பாடுகளை நாம் செய்திட வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். இனியாவது தமி்ழர்கள் நாடு வேறுபாடின்றி, மத வேறுபாடின்றி , கலாச்சார வேறுபாடின்றி ,சாதி வேறுபாடின்றி , அரசியல் வேறுபாடின்றி மற்றும் நம்முள் வேருன்றி கிடக்கும் பல வேறுபாடுகளை கடந்து " ஒரே தமி்ழர்" உணர்வினை உள்ளெடுத்து வாழவேண்டும். தமி்ழர் அனைவரையும் ஒரே இயக்கத்தின் கீழ் இணைக்கும் ஒரு சக்தியை(energy) நாம் உருவாகிட வேண்டும். ஈழப் போராட்டத்தை நாம் ஒரு பிரச்சனையாக(problem) மட்டும் காணமல் மாறாக ஒரு சவாலாக (Challenge) ஏற்று, இன்று வாழ் தமி்ழர்களிடையே ஒற்றுமை உணர்வினை உருவாக்கிட வேண்டும். சில சம்பவங்களுக்காக மட்டும் நாம் ஒன்று கூடுவதில் இனியும் நன்மை அதிகமி்ல்லை. உலகளாவிய தமி்ழர் ஒற்றுமை தளம் ஒன்றினை உருவாக்கிட வேண்டும்.
ஒன்றே சொன்னீர்.. அதையும் நன்றே சொன்னீர்! இந்த ஒற்றுமை பூனைக்கு மணி கட்டுவது யார்? கரங்கோர்த்து தோள் கொடுக்க இளைய சமுதாயம் காத்துக்கொண்டிருக்கிறது. ஒரு தலைவர்தான் தேவை இனி.. யார் அந்த தலைவர். உலக தமிழர்களுக்கு ஒரே தலைவர் யார்???
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.