Friday, April 24, 2009

காட்டில்..!







இறந்த மூங்கிலும்
இரவல் மூச்சால்
மோகனம் இசைக்கிறது..

எல்லாம் இருந்தும்
மனிதன் ஏனோ
இரவல் கேட்கின்றான்..!







உதிர்ந்தாலும்
மயிலின்
மயிர் கூட
அழகு..

மனிதன் உதிர்ந்தால்..!







தேவைக்குமேல்
தேடுவதில்லை
மிருகம்..

தேவைகள்
தீர்ந்த பாடில்லை..
மனிதம்..!






காடுகளில்
மதச் சண்டை
இல்லை..

அது
இல்லாத நாடுகளே
இங்கு இல்லை..!


  • கிருஷ்ணமூர்த்தி

17 comments:

manasaatchi said...

//தேவைக்குமேல்
தேடுவதில்லை
மிருகம்..//

மனிதனுக்கு எது தேவை என்று விளங்கவில்லை. அதனாலையே தேடல் தொடர்கிறது.

கவிதை உங்களுக்கு நன்றாக வருகிறது, தொடர்ந்து எழுதுங்கள்

VIKNESHWARAN ADAKKALAM said...

மனிதனுக்கு தன் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்துக் கொள்ள தெரிவதில்லை. பணம் ஒன்றே வாழ்வின் லட்சியம் எனும் போக்கு மனதுள ஆழமாக பொதிந்துவிட்டது. நெறி தவறி தறிகெட்டு அலைகிறான்ன். நன்னெறியை எடுத்துரைக்கும் நல்ல கவிதை. :)

கிருஷ்ணா said...

நன்றி அனு.. உண்மைதான், தேவையை புரிந்துகொண்டால் தேடுதல் இலகுவாகிவிடும். கருத்துக்கு நன்றி. மீண்டும் வருக..

கிருஷ்ணா said...

வாங்க விக்கி.. உண்மைதான்! சமூகம் கூட நல்ல மனமிருப்பவனை விட.. பணம் இருப்பவனைத்தான் மதிக்கிறது! பணத்தைக் கொண்டே வெற்றியை கணிக்கிறது.. அதானல், சமூகமும் குற்றவாளியே!

ஆ.சுதா said...

எல்லாமே நல்லா இருந்தாலும்
எனக்குப் பிடித்தது.

காடுகளில்
மதச் சண்டை
இல்லை..

அது
இல்லாத நாடுகளே
இங்கு இல்லை..!

Tamilvanan said...

//எல்லாம் இருந்தும்
மனிதன் ஏனோ
இரவல் கேட்கின்றான்..!//

அர்த்தம் விளங்கி கொள்ள முடியவில்லை.

யாரிடம் எங்கே எதை இரவல் கேட்கின்றான்.. அதுவும் எல்லாம் இருக்கும் மனிதன்

//தேவைக்குமேல்
தேடுவதில்லை
மிருகம்..//

சுறுசுறுப்பான தேனிக்கள் - சுயநலமி்க்கதோ ( பூச்சிகள் அவை மி்ருகத்தை சார்ந்தது அல்ல என்று ஏற்று கொள்வோமா...)

தேவைக்குமேல் தேடாததால் தான் அவை இன்னும் மி்ருகமாய் உள்ளதோ

//தேவைகள்
தீர்ந்த பாடில்லை..
மனிதம்..!//

தீராத தேவைகள் - தேவைக்கான தீராத தேடுதல் வேட்கையே மனித இனம் இன்று பல வசதிகளை கொண்டுள்ளது.

மனிதம் - அதிலே ஓர் இனம் தமி்ழினம் தேவையில்லை தேவையில்லை ( போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து ) என்ற காரணத்தினாலே பல நாடுகளில் இரண்டாம் முன்றாம் தர மக்களாக உள்ளோம். தேவை தேவை தேவை நமக்கென்று ஒரு நாடு அல்லது வாழுகின்ற நாட்டிலே முதன்மை நிலை. இதற்கு தேவையானவை பெற தேவைக்கான தீராத தேடுதல் வேண்டும்

என்னளவில் இனி எனக்கு தத்துவம் தேவையில்லை வாழ்க்கை நடைமுறைத்துவமே தேவை. தமி்ழ் வாணன்

குமரன் மாரிமுத்து said...

//இறந்த மூங்கிலும்
இரவல் மூச்சால்
மோகனம் இசைக்கிறது..

எல்லாம் இருந்தும்
மனிதன் ஏனோ
இரவல் கேட்கின்றான்..!//

மேல் உள்ள வரி நச்சின்னு இருக்குப்பா... நம்ம பயலுக காரணம் சொல்லியே நாசமா போரானுங்க..

கடவுள் நமக்கு கொடுத்த ஒவ்வொரு உறுப்பும் மூலதனம் என்ற எண்ணம் வளர வேண்டும். உணர்ந்து கொண்டால் 'இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலையாமல்'/ இரவல் தேடாமல் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழப் பழகிக் கொள்ளலாம்.

கிருஷ்ணா said...

திரு ஆ.முத்துராமலிங்கம் அவர்களின் கருத்துக்கு நன்றி. ஒரு வேளை உலகத்தில் மதம் என்ற ஒன்று இல்லாமலிருந்தால்.. மனிதர்கள் இப்படி தங்களுக்குள்ளாகவே அடித்துக்கொள்ளாமல் இருந்திருப்பார்களோ??

கிருஷ்ணா said...

திரு தமிழ்வானன் அவர்களுக்கும் நன்றி. சிரமம் பாராமல் கருத்துக்களை எழுதி இருக்கின்றீர்கள். எனின், கவிதை ஏதோ ஒரு விதத்தில் உங்களை தாக்கி இருக்கிறது.. அல்லது கடுப்பேத்தி இருக்கிறது என்று நினைக்கிறேன்.

எல்லாம் இருக்கும் மனிதன்.. இறந்த மூங்கில் போல் இல்லாமல், உயிர் இன்னும் இருக்கிறதே.. கைகால்கள், உலகை வெல்லும் பகுத்தறிவு.. இது எல்லாம் இருந்தும், இன்னமும் நிறைய பேரால் சுய காலில் நிற்க முடியவில்லையே என்ற ஆதங்கம்தான் அது.

//தேவைக்குமேல் தேடுவதில்லை மிருகம்// உங்கள் கருத்தும் ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால், எல்லா மனிதர்களும் தேவைக்கு மேல் சேர்க்காமல், தேடாமல் இருந்தால், பிறகு உலகமே சொர்க்கமாக தோன்றாதா என்ற எண்ணத்தில் அப்படி எழுதினேன்.

உண்மைதான், எல்லாம் பணமயம் என்று ஆகிவிட்டது இப்போது.. என்ன செய்வது? இது எங்கே போய் முடியப் போகிறது?

எத்தனையோ பேர் ஞாயமான நேர்மையான வழியில் பொருள் ஈட்டுகின்றனர்.. இன்னும் பலர் எப்படியாவது பொருள் ஈட்டினால் போதும் என்று செயல்படுகின்றனர். வாழ்க்கையில் பணம் எவ்வளவு முக்கியமோ.. அதை விட முக்கியம், வாழ்வியல் தத்துவம் என்பது எனது கருத்து. அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் இல்லை.. உங்கள் நிலையில் உங்கள் கருத்தும் சரிதான்.. என்னைப் பொருத்த மட்டில், எல்லாம் பொது என்று வந்துவிட்டால், இந்த பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு கிட்டும்..

உங்கள் மாறுபட்ட கருத்துக்கு நன்றி.. தொடர்ந்து வாருங்கள்.. வணக்கம்!

கிருஷ்ணா said...

வாங்க குமரன்.. ஏதோ நம்மலால முடிந்த சிறு தொண்டு என்று எழுதுகிறேன்.. இதைப் படித்து ஒரே ஒரு தமிழன் மாறினாலும் திருப்திதான். எதிர் கருத்துக்களை தெரிவிப்பதும் ஆரோக்கியம்தான். நன்றி!

கிருஷ்ணா said...

சில வேளைகளில், கவிதையை அழகு படுத்துவதற்காக சில வரிகளைச் சேர்க்கிறோம்.. அதன் அர்த்தங்கள் சில வேளைகளில் சர்ச்சயைக் கிளப்பினாலும், விவாதங்களை முழுமனதோடு எதிர்பார்க்கிறேன். விவாதத்திற்கு பிறகு ஏற்படும் தெளிவு.. இன்னும் என் சிந்தனையை வளர வைக்கும்.. அதனால் எதிர் கருத்து இருந்தால் தாராளமாக எழுதுங்கள்.. நன்றி..!

Tamilvanan said...

தெளிவுரைக்கு நன்றி.

என் கருத்து ( குறை காணல் ) தாக்கத்தினால் ஒழிய கடுப்பினால் அல்ல

குறை
அது இல்லாமல் இருக்க நாம்.. இறையும் அல்ல..

அதைச் சுட்டுபவர்கள்
நக்கீரர்களும் அல்ல..!

குறைகளில்
நிறையைக் காண்போம்..
எழுந்து வா....!!!!!!!

ஒரு பார்வையாளன் என்ற முறையில் படைப்பாளியின் உணர்வையும் அறிவேன்.

தமி்ழில் உரைக்கப்படும் கவிதைகள் தமி்ழருக்கே முதலில் சேரும். அதில் பொது தத்துவங்களை விட சற்று வாழ்வியழ் போராட்ட உணர்வுகளை எதிர்ப்பார்த்தேன்.எதிர்பார்க்கிரேன் உற்சாகத்தோடு, நானும் சமுதாயமும் இரவல் மனிதனாக இல்லாமல் சுய காலில் நிற்க.

கிருஷ்ணா said...

மீண்டும் உங்கள் கருத்துக்கு நன்றி தமிழ்வாணரே! உங்கள் கருத்தை நிச்சயமாக குறை காணலாக நான் எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு தர்க்கமாகத்தான் பார்க்கிறேன். இதுவும் ஒரு பட்டி மன்றம்தான். அதற்காக, வெற்றி பெற்றவர் கருத்துதான் நிஜம் என்றோ.. தோல்வி பெறுபவர் கருத்து பிழை என்றோ அர்த்தப் படாது. நமக்குத் தேவை, நம் தர்க்கத்தை படிப்பவர்கள் சொந்தமாக ஒரு சிந்தனை தெளிவு பெற்று ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

உங்களிடம் இருந்து நிறைய தர்க்கங்களை எதிர்பார்க்கிறேன்.. உளப்பூர்வ நன்றி. சமுதாயத்தின் முன்னேற்றத்தில் அக்கரை கொண்ட உங்களை நிச்சயம் மதிக்கிறேன், நல்ல மனிதராக!

"கருவெளி" said...

அத்தனையும் அர்த்தம் பொதிந்தவை...
தமிழை கற்க தொடங்கும் என் போன்றோருக்கு நல்ல வழிகாட்டிதான் இத்தகைய எழுத்துக்கள்...

கிருஷ்ணா said...

திரு ராச மகேந்திரன் அவர்களின் வருகைக்கும் பின்னூட்டுக்கும் நன்றி! நானும் உங்களைப்போல தமிழை இன்னமும் கற்றுக் கொண்டிருப்பவன்தான்.. 'சமுத்திரத்தில் எந்தத் துளி முதல் துளியோ?' வைரமுத்துவின் வரிகள் நினைவுக்கு வருகிறது. தொடர்ந்து வாருங்கள்.. வணக்கம்!

VIKNESHWARAN ADAKKALAM said...

//தேவைக்குமேல் தேடாததால் தான் அவை இன்னும் மி்ருகமாய் உள்ளதோ//

தன் வரம்பு மீறாததால் அவை அதன் நிலையில் தவறாமல் இருக்கிறது. மனிதனுக்கு அடிப்படையில் ஏதோ பிரச்சனை என்றே சொல்ல வேண்டும். வாழ்க்கையில் பொருளியல் ஈட்டல் ஒன்றே அவனை உயர்வளிக்கும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய கருதல்ல.

கிருஷ்ணா said...

உண்மை விக்கி.. மிருகங்கள் இன்னும் மிருகமாய் இருப்பதில் தவறென்ன இருக்கிறது? மனிதன் மனிதனாய் இல்லை என்பதே என் கருத்து! எத்தனையோ வழிகளில் மனிதன் மனிதத்தை மறந்து வாழ்கிறான்.. சில வேளைகளில், அவன் செயல்களை அர்த்தப்படுத்தி விவாதிக்கிறான்..! நல்ல வேளை, மிருகங்கள் மனிதனின் பாஷை பேசுவதில்லை.. பேசினால், மிருகங்களையும் மாற்றிவிடுவான் மனிதன்!

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs