Friday, March 13, 2009

சிறைப்பறவை

இந்த,
சம்பிரதாயச் சிறைக்குள்
விரிக்க முடியா
சிறகுகள்..

வானத்தை
தொலைத்துவிட்ட
பறவை
மீண்டும்
பறக்க நினைக்கிறது..

நியாயம்தான்..
பறந்தால்தானே
பறவை..!

இது,
உடைந்துவிட்ட
சிறகல்ல..

விதியின் சதியில்
நனைந்துவிட்ட
சிறகு..

கால வெய்யிலில்
ஓர் நாள்
உலர்ந்தே தீரும்..!
அவள்
அணிந்திருப்பது
சோகப் புன்னகை..

சோகத்தை மறைக்க
அடிக்கடி..
சிரிப்புச் சாயம்
கைகொடுக்கிறது..

என்ன செய்வது?
என்றுமே..
உன் இனமே
உனக்கு எதிரி..!!!

இருந்தாலும்
இந்தச் சிறை
உன்னை,
பலப் படுத்தி இருக்கிறது..
பக்குவப் படுத்தி இருக்கிறது..

**
சிறைக்கதவுகள்
திறக்கும்
ஓசையை மட்டுமே
கேட்டுக் கேட்டு..
அலுத்துவிட்டன செவிகள்..
மரத்துவிட்டது இதயம்..!

சாவியை..
'சாதித்துக்கொண்ட' பிறகு
பந்த பாசச்
சாக்கடையில்
தொலைத்துவிட்டு
தேடும்
ஆண் பறவைகள்..!

அது
தேடும் பணியா?
பாசாங்கா?

**

எதிர்காலம்...

இந்த
கேள்விக்கு
விடை தெரிந்தால்..

அந்த,
சிரிப்புச் சாயம்
சொந்தமாகிவிடும்
என்,
செல்லத்துக்கு..!

-K.கிருஷ்ணமூர்த்தி

(வாழ்க்கையின் தொடக்கத்திலேயே விவாகரத்துப் பெற்று.. வெறுமையின் விளிம்பில் நிற்கும் ஒருத்தியை, அவளின் இரவுகளுக்கு மட்டும் தாலி கட்டத் துடிக்கும் ஆண் (அ)சிங்கங்களின் அவலத்தை நினைத்து வெகுண்டு எழுதிய கவிதை..)

7 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

:(

Anonymous said...

சில நேரங்களில் கவிதையின் கருவையும் கொடுப்பதும் சரிதான் என்று நினைக்கிறேன்... காரணம் கவிதையை இன்னும் ரசிக்க முடிகிறது.

இது,
உடைந்துவிட்ட
சிறகல்ல..


விதியின் சதியில்
நனைந்துவிட்ட
சிறகு..

மிக அழகான வரிகள்..

உடைந்துவிடவில்லை... நனைந்துதான் போயிருக்கிறது. அந்த கதிரவன் தோன்றிவிட்டால், விடியல் வந்துவிட்டால் நனைந்த சிறகுகள் காயந்துவிடும்...

வாழ்த்துக்கள் நண்பரே!

கிருஷ்ணா said...

ஷீ-நிசி அவர்களே.. ஆம், கருவைத் தராமல் இருந்திருந்தால், கவிதையின் ஆதி தெரியாமலிருக்கும். இதுபோன்ற கவிதைகளின் கதை தெரிந்தால், நீங்கள் சொன்னதுபோல் சுவாரஷ்யமாக இருக்கும். இது அந்த தோழிக்கு நான் அன்றே எழுதிக் கொடுத்த கவிதை. பிறகு அவள் கவலையை விடுத்து முதுகலை பயின்று இன்று நல்ல நிலையில் இருக்கிறாள் என்பதுவும் உண்மை.

து. பவனேஸ்வரி said...

நல்ல கவிதை... ரசித்தேன்...

கிருஷ்ணா said...

ரசித்தமைக்கு நன்றி தோழீ!

Anonymous said...

கிருஷ்ணா சார்,

நல்லா இருக்கு உங்கள் படைப்புக்கள்.
சமுதாய அக்கறை கொண்ட உங்கள் எழுத்துப் பணி இனிதே தொடரனும்.

கவிதையை படிக்கும்போது நீங்கள் உசர்ந்து நிக்கிறிங்க....

வாழ்த்துக்கள்!

கிருஷ்ணா said...

கு.உஷாதேவி அவர்களே.. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி! இது போன்ற ஊக்கம் தான் என் எழுதுகோலுக்கு உரம்! மிக்க நன்றி.. தொடர்ந்து வாருங்கள்..

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs