Saturday, February 7, 2009

தைப்பூசம்

தமிழனின்
தன்மானத்தின் வயது
ஓராண்டுதானாம்..!

மீண்டும்
இன்று பத்து மலையில்
மக்கள் வெள்ளம்
நிரம்பி வழிகிறதாம்..

நெஞ்சு பொறுக்குதில்லையே...

அன்று
அரசோடு ஒன்று சேர்ந்து
அப்பாவித் தமிழர்களை
அடித்தனர்..

காவல்துறையின்
கைப்பாவையாய்
கதையை திரித்து
கூறினர்..

நல்லபாம்பு
நடராசா தலைமையில்
நான்கு புகார்கள்
தந்தனர்..!

எல்லாம் இந்த
பாழாய்ப்போன
சமுதாயத்திற்கு எதிராக...

இருந்தாலும்..
இன்று பத்துமலையில்
பக்தர் கூட்டம்
அலையலையாய்!!!

அபாண்டம் சொன்ன
அத்தனை பேரும்..
இன்னும் தலைமை பீடத்தில்..

ஹிண்ட்ராஃப் அணியின்
பின்னால் சென்ற
தமிழர்கள் இன்னும்
தவணையில்!

நெஞ்சு பொறுக்குதில்லையே!

அன்று..
தமிழ்க் கடவுளின்
சன்னதியில்
தமிழர் கொடுமை..

கோவிலுக்குள்ளே
தன் இனத்தை பூட்டி..
காட்டிக் கொடுத்தான் ஒருவன்..
அவனே இன்னமும் தலைவன்!

ஆம்..
எட்டப்பன் எப்போதோ
அவன்
மூதாதையர் வீட்டில்
முழு 'விருந்து' சாப்பிட்டிருக்கிறான்
போலும்!!!

*
அன்று..
இதயம் இல்லா
காவல் துறையின்
காலால் மிதியுண்டோம்..

செவிகள் இல்லா
நீதித் துறையால்
இன்னல் பல கண்டோம்..

இருந்தும்..
தமிழனின் தன்மானம்
என்னவோ..
ஓராண்டு மட்டுமே!

மீண்டும் இன்று
பத்து மலையில்
பக்தர் கூட்டம்!

நெஞ்சு பொறுக்குதில்லையே!!!

-கிருஷ்ணமூர்த்தி

8 comments:

சுப.நற்குணன்,மலேசியா. said...

//தமிழனின்
தன்மானத்தின் வயது
ஓராண்டுதானாம்..!//

அன்பரே.. இன்று மதியம் வலைப்பதிவர் நண்பர் பிரான்சிசு (என் எண்ணங்கள்) இதைப்பற்றிதான் சீனாவிலிருந்து (அங்கு போயிருக்கிறார்) என்னுடன் விரிவாகப் பேசிக்கொண்டிருந்தார்.

நாங்கள் பேசியதை ஒட்டுக் கேட்டது போல் அப்படியே எழுதியிருக்கின்றீர்..!!

சிந்திக்க வேண்டிய விடயம்..!

தமிழனின் வீரம்.. வீராப்பு.. தன்மானம்.. எல்லாம் ஓராண்டு மட்டும்தானா..?

மீண்டும் மண்டியிட்டுவிட்டானா தமிழன்..???

நெஞ்சு பொறுக்குதில்லையே!!!!!!

கிருஷ்ணா said...

நண்பரே.. நான், தைப்பூசத்துக்கு மட்டும் அல்ல.. இனி எப்போதும் பத்துமலைக்குச் செல்வதில்லை என்று தீர்மானித்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. இருப்பினும், நண்பர் ஒருவர் காலையில் எனக்கு தொலைபேசியில் அழைத்து பத்துமலைக்கு போகவில்லையா என்று கேட்டார்!

என் நிலைமையைச் சொன்னேன்.. Boycot போன வருடம்தானே என்றார்! அப்பொழுது என் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் இவைதான்..

"தமிழனுக்கு தன்மானம்
ஓராண்டுதானா?!"

என் நண்பர் தன் தவற்றை உணர்ந்து தானும் போவதில்லை என்றார். அவறை போர்ட் கிளாங் பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் தைப்பூசத்தை கொண்டாடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன்.

இதுதான், இந்த கவிதை பிறந்த கதை.

நம் இனத்துக்கு எதிரிகள்
என்றுமே நம் இனம்தான்..

பத்துமலையில் இன்னும்
முருகன் இருப்பான்
என்று
நான் நம்பவில்லை!

அப்படி இன்னமும் இருந்தால்
அவன் பெயர்
தமிழ்க் கடவுள் இல்லை!!!

Thiruu00 said...

ஏனய்யா? இவ்ளோ கோபம்? நீர் என்ன சொன்னாலும் உன்னை மடையன் என்று சொல்லும் ஒரு கூட்டம் இன்னொறு கூட்டம் காலத்தோடு ஒத்து போகாதவன் என்று சொல்லும். THR ராகா ஆரம்பித்த நாள் முதல் என்னுடன் சேர்ந்து நிறைய பேர் தமிழுக்காக குரல் கொடுத்தார்கள்..இப்பொழுது..கலக்கல் காலையாம்..ஐப்பர் மாலையாம்...நான் இன்னும் பாகவதர் காலமாம்...சொல்கிறார்கள்..

கிருஷ்ணா said...

எப்பொழுதும் நாம் இளிச்சவாயர்களைத்தான் குற்றம் சொல்லி குளிர் காய்வோம்!

THR ராகாவை குற்றம் சொல்லக் கூடாதென்பது என் வாதமல்ல! ஆனால், நாட்டில் எத்தனையோ பெரிய பிரச்சனைகள் நம் இனத்தை பிண்ணிக்கிடக்க.. நமக்குத் தெரிந்ததெல்லாம்.. THR ராகாவில் தமிழ் கொலை, மின்னல் எப் எம்மில் நிகழ்ச்சி மாற்றம்.. தொலைக்காட்சியில் செய்தி நேர மாற்றம்.. இது போன்றவைதானே!

நாம் எப்போது தூர நோக்கோடு சிந்திக்கப் போகிறோம்?!

2020 வரும்போது, இந்நாட்டில் நம்மினம் அமெரிக்க கருப்பினம்போல் ஆகாமல் இருந்தால் அதுவே நலம். இங்கேயும், ஓபாமா போல், கலந்து பிறந்தால்தான் முன்னேற்றம். அல்லது மதம் மாறினால்தான் அதிர்ஷ்டம்.. அதற்கு முன்னுதாரணம் இன்றைய பேராக் மந்திரி புசார்!

ஆதவன் said...

//நான் இன்னும் பாகவதர் காலமாம்...சொல்கிறார்கள்..//

திரு இப்படி சோர்ந்து விடாதீர்கள். அடிக்க அடிக்க அம்பி கண்டிப்பாய் நகரும். ராகா வானொலியின் தொடக்க நிலையையும் இன்றைய நிலையையும் சற்று ஒப்பிட்டுப் பாருங்கள்.

உங்களைப் போன்றோர் சளைக்காமல்.. தொடர்ந்து கொடுத்த அடியால் இப்போது ஓரளவு மாற்றம் வந்துள்ளது. ஆக, மனச் சோர்வு வேண்டாம்..!

பாகதகம் செய்பவரைக் கண்டால்
மோதி மிதித்துவிடு பாப்பா
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா என்ற
பாரதியின் எழுத்தை மறக்காதீர்..!

//2020 வரும்போது, இந்நாட்டில் நம்மினம் அமெரிக்க கருப்பினம்போல் ஆகாமல் இருந்தால் அதுவே நலம்.//

கிருஷ்ணாவின் கருத்து ஆழந்து சிந்திக்கத் தக்கது.

எதிர்காலத்தில் தமிழினம் சொந்த அடையாளத்தோடு வாழுமா? அல்லது தேசிய இனத்தோடு கரைந்து போய்விடுமா?

மலாக்கா செட்டிகள் நமக்கு எச்சரிக்கை காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இப்போதே தக்க சிந்தனையிலும் செயலிலும் இறங்காவிடில் நமது குழந்தைகள் ஒருகாலத்தில் 'மலாக்கா செட்டிகள்' போல் இந்த நாட்டில் வாழ்வார்கள்...!

நல்ல சிந்தனைகளை முன்வைக்கும் கவித்தமிழ் பணி சிறக்கட்டும்.

குமரன் மாரிமுத்து said...

நெஞ்சு பொறுக்குதில்லையே.... அதே பத்துமலை முருகன் காலடியில் விடிய விடிய காவல் துறையினர் & குண்டர்களின் அட்டூழியத்தால், உயிரோடு வீடு திரும்புவோமா என்று 'அந்த' இரவைக் கழித்த நினைவுகளை நிழலாடவிட்டிருக்கின்றீர். நன்றி.

இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே.. இவர் என்று உணர்வாரடி ஞானத் தங்கமே..

து. பவனேஸ்வரி said...

தமிழர்களுக்குத் தன்மானம் ஒன்று உள்ளதா என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். இருக்கிறது ஆனால் அது காலவரையறைக்கு உட்பட்டது என்று அழகாகக் கூறியிருக்கிறீர். குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பது போல் நமது தன்மானமும் ஆகிவிட்டது! நெஞ்சுப் பொறுக்குதில்லையே, இந்த நிலைக்கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்...

A N A N T H E N said...

//ஆம்..
எட்டப்பன் எப்போதோ
அவன்
மூதாதையர் வீட்டில்
முழு 'விருந்து' சாப்பிட்டிருக்கிறான்
போலும்!!!//



//தமிழனின்
தன்மானத்தின் வயது
ஓராண்டுதானாம்..!//

கவிதை + எழுச்சி

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs