(இது..
மணவிலக்கு பெற்று, ஒற்றையில் வாடும் ஓர் இளம் தாய்க்கும்..
இன்னார்தான் தன் தந்தை என்றுணரா அவள்தம் சேய்க்கும்..
என் பேனாவில், கண்ணீர் மையூற்றி வடித்த கவிதை..)
இந்த புல்லாங்குழலுக்கு
முதல் இராகமே
முகாரி!
இவளின்
இரவுகளை மட்டும்
இரவல் கேட்கும்
ஆணின (அ)சிங்கங்கள்!!
உண்மையில்,
இவள்..
தாய் வீட்டில் கூட
வேண்டாத விருந்தாளி..!!!
தகப்பனின்
பாசப் பார்வைக்கு..
சற்று
கௌரவக் குறைச்சலாம்..
முன்னாள் கணவனுக்கு
இன்னாளில்
இரண்டு குழந்தைகளாமே..
உணர்ச்சி என்பது
இவளுக்கு மட்டும்
விதிவிலக்கு!
என்ன செய்வது?
என்றும்,
உன் இனம்தானே
உனக்கு எதிரி..
உன் வாழ்க்கையைத்
திருடியதும்..
உனைப்போல் ஒரு பெண்தானே..!
ஓ என் சமுதாயமே..
எரிவது விளக்கென்று அறிந்தும்
விட்டு விலகாத
விட்டில் பூச்சிகளின்
உறைவிடமே!
இன்னும்
எத்தனைக் காலம்தான்
சம்பிரதாய சாக்கில்
இவர்களின் உணர்வுகளுக்கு
கொள்ளி வைப்பீர்கள்?
நிலவில் களங்கம் என்றால்
அது
உங்களுக்கு கவிதை..
நிஜத்தில் களங்கம் என்றால்
அது
அவளுக்கு மட்டும் அவஸ்தை!
ஓ.. மாண்புமிகு சமுதாயமே!
என்று தீரும் இத்தொழு நோய்?
விவாகரத்து வழக்குகளில்
பிள்ளைகளை மட்டுமல்ல..
கன்னித்தன்மையையும்
திருப்பித் தரச்சொல்லும்
நீதி மன்றம்
வேண்டும் இங்கே!
ஓ..
எனக்கு மறந்துவிட்டது..
இது
இதயம்
இத்துப்போனவர்களின்
இருப்பிடம்...
இன்னும்
எத்தனை பாரதிகள்
தோன்றினாலும்..
இன்று வாழும்
இயந்திர
இராமர்களுக்கு
இரக்கம் வராது..!
ஏ எமனே..
என் கருணை மனுவை
நீயாவது ஏற்பாயா?
உன் பாசக்கயிற்றை
விற்றுவிட்டு..
வலை ஒன்றை
வாங்கு..
இன்னும் திருந்தாத
இந்த சமுதாயத்தை..
தயை கூர்ந்து..
அடகு வைத்தவனிடமே
திருப்பிக் கொடுத்துவிடு!!!
கிருஷ்ணமூர்த்த்தி.
எது காதல்? -அத்தியாயம் 1
5 years ago
2 comments:
அன்பின் கிருஷ்ணா,
தங்களின் வலைத்தளத்தை முதன்முறையாக பார்வையிடுகிறேன். தீந்தமிழ்க் கவிதைகளால் நிதர்சனங்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்.
தொடர்ந்து வலைப்பதியுங்கள், படிக்க ஆர்வமாயுள்ளேன்.
தங்களின் வலைத்தளத்தை ‘மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்திலும்' , வலைப்பூங்கா திரட்டியிலும் இணைத்திருக்கிறோம்.
http://groups.google.com/group/MalaysianTamilBloggers
http://www.pageflakes.com/valaipoongaa
வாழ்த்துகள்..
திரு. சதீசு குமார் அவர்களே..
நன்றி!
உங்கள் கருத்துக்கு நன்றி..
உலகத்தை சுருக்கி
உள்ளங்கையில் தரும்
இணையத்துக்கும் நன்றி..
எப்படியெல்லாமோ வேறுபட்டிருந்தாலும்
மொழியால் ஒன்றாகிறோம்..
நம்மை ஒன்றுபடுத்தும்
தாய்த்தமிழுக்கும் நன்றி நன்றி!!!
நீங்கள்தான்
எங்களுக்கெல்லாம் முன்னோடி ..
நாமெல்லாம்..
தமிழின் பின்னாடி..!
வெல்லத் தமிழ் இனி மெல்ல வெல்லும்!
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.