Wednesday, February 4, 2009

சிந்திக்க மறந்த என்னவனே!

ஏ மனிதனே..
என் இனத்தவனே..
சிரிக்கத் தெரிந்த நீ..
ஏன் சிந்திப்பதே இல்லை?!

இல்லாத வானத்தை
வருணிக்கும் நீ..
இருக்கும் மானத்தை
மறந்து விட்டாய்!

அழகாய்
வளர்ந்து வளர்ந்து
மீண்டும் தேயும் நிலவு போல..

உயரே
பறந்து பறந்து
தரைக்கு இரங்கும்
பருந்து போல..

கடலில்..
புரண்டு, எழுந்து, பின்
ஒடுங்கி விழும்
அலையைப் போல..

மண்ணில்..
பிறந்து வளர்ந்து..
மண்ணோடு மண்ணாவதுதானா
மனித இயல்பு??!

மனிதா..

உன் செவிகளை கொஞ்சம்
என் பக்கம் வை..

நிலவுக்குச்
சரித்திரம் தேவை இல்லை..

பருந்துக்கு
பணங்காசு தேவை இல்லை..

அலைகள்
புகழைத் தேடுவதே இல்லை..!

மனிதா,
நீ மட்டும் ஏன்..
நில்லாமல் ஓடுகின்றாய்?
நிலையில்லா செல்வம் தேடுகின்றாய்..?
நிம்மதி இன்றி வாடுகின்றாய்???

கொஞ்சம் பொறு!

ஒரு மேட்டை இடித்தால்தான்
ஒரு நாட்டை ஆக்க முடியுமா?

ஒரு காட்டை அழித்தால்தான்
உன் வீட்டை எழுப்ப இயலுமா??

ஓர் உயிரை
கொன்றால்தான்..
உன் வயிறு நிரம்புமா???

அடுத்தவன் அழிவில்தான்..
நீ,
வாழ்ந்தாக வேண்டுமா..?

நீ..
பகுத்தறிவு படைத்தவன்..
மறந்து விடாதே!

தன்னை வருத்தி..
பிறர்க்கு ஒளிதரும்
மெழுகுவர்த்தியை
படைத்ததும் நீ தானே..!

அதன் மேன்மை
விளங்கவில்லையா
உனக்கு?

யோசி..

விண்ணில் எழும் கதிரவனால்
ஊருக்கு நன்மை..

மண்ணில் விழும் மழைத்துளியால்
வேருக்கு நன்மை..

பெண்ணுள் இருக்கும் பொறுமையினால்
ஊருக்கு நன்மை..

உன்னுள் உறங்கும் திறமையினால்
யாருக்கு நன்மை??

நில்...!

பேசு..
மென்மையாக பேசு..
உண்மையே பேசு..

பொழுதுக்களை
பழுதாக்கியே
பழக்கப் பட்டவனா நீ?

இனியொரு விதி செய்..

ஊறார் குறையை
உளவு பார்ப்பதைவிட..
உன் குறை எதுவென்று
யோசி!

கடைசியாக ஒன்று..

உன் இனத்தால்
நீ வாழ்ந்தது போதும்...

இனியாவது..

உன்னால்,
உன் இனம் வாழ வேண்டும்..
உன் மொழி வாழ வேண்டும்..
உன் தாயகம் வாழ வேண்டும்..
இவ் வையகம் வாழ வேண்டும்..
உனை ஈன்றாள் வயிறு
வைகை போல் குளிர வேண்டும்!!!

-கிருஷ்ணமூர்த்தி

3 comments:

சுப.நற்குணன் said...

இனிய நண்பர் கிருஷ்ணமூர்த்தி,

தங்கள் வலைப்பதிவு கண்டேன். வலைப்பதிவர் சந்திப்பில் சொன்ன சொல்லைக் காப்பாற்றிய முதல் ஆள் நீங்கள்தான்.

பாராட்டுகள்..! மலேசிய வலைப்பதிவுத் தோட்டத்தில் புதுமலராகப் பூத்திருக்கும் உங்கள் கவித்தமிழ் காவியத்தமிழாக நிலைபெற மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

உங்கள் உரைவீச்சுகளின் வேகம் அனைவரையும் விரைவிலேயே சென்று சேர்ந்துவிடும்.

//உன்னால்,
உன் இனம் வாழ வேண்டும்..
உன் மொழி வாழ வேண்டும்..
உன் தாயகம் வாழ வேண்டும்..
இவ் வையகம் வாழ வேண்டும்..
உனை ஈன்றாள் வயிறு
வைகை போல் குளிர வேண்டும்!!!//

அருமையான வரிகள்..
இதயத்தில் எழுதிவைக்க வேண்டிய எழுத்துகள்..!

இப்படியான படைப்புகள் இன்னும் நிறைய உங்களிடமிருந்து வரவேண்டும்.

கிருஷ்ணா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே! நிச்சயம் இன்னும் பல தமிழ் வலைப்பதிவுகள் நம் நாட்டில் விரைவில் பதிவாகும் என்று நம்புவோம்!

து. பவனேஸ்வரி said...

சொல்லாட்சி சிறப்பாகவுள்ளது. கவிதை வரிகள் அனைத்தும் இரும்பைக் காந்தம் கவர்வது போல் என் மனதை ஈர்க்கின்றன.

//இல்லாத வானத்தை
வருணிக்கும் நீ..
இருக்கும் மானத்தை
மறந்து விட்டாய்!//

அழகான வரிகள்...

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs